Published : 27 Oct 2019 10:50 AM
Last Updated : 27 Oct 2019 10:50 AM
தொகுப்பு: ரேணுகா
இரும்பை ருசியுங்கள்
நாட்டில் இரண்டில் ஒரு பெண் இரும்புச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார். தீபாவளி போன்ற பண்டிகைக் காலத்தில் தங்க நகைகளை வாங்குவதில் ஆர்வம் காட்டும் பெண்கள், தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதில்லை. நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ‘டச்சு ஸ்டேட்ஸ் மைன்ட்ஸ்’ (DSM) என்னும் நிறுவனம் தன்னுடைய பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்புத் (சி.எஸ்.ஆர்) திட்டத்தின் கீழ் ‘Project Streedhan’ என்ற பெயரில் இந்தியாவில் விளம்பரப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்தப் படம் ‘தங்கத்தை விடுத்து இரும்புச்சத்துள்ள உணவுகளை ருசியுங்கள்’ என்ற கருத்தை முன்மொழிகிறது. விளம்பரக் காட்சியில் தோன்றும் பெண்கள் மாதுளை, பாதாம், சோளம், மீன், தர்பூசணி போன்ற உணவு வகைகளை ருசித்துச் சாப்பிடுகிறார்கள். வண்ணமயமான காட்சிகளால் நிறைந்திருக்கும் இந்த விளம்பரம், பெண்கள் இரும்புச்சத்துள்ள உணவைச் சாப்பிட வேண்டும் என ஊக்கப்படுத்துகிறது. இந்த விளம்பரம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்தியாவில் உள்ள ஐம்பது நகை விற்பனை நிறுவனங்கள் இந்தப் பிரச்சாரத்தைத் தங்கள் வாடிக்கையாளர்களிடம் கொண்டுசேர்ப்பதாக உறுதியளித்துள்ளன.
வழிகாட்டும் கேரளம்
நாட்டிலேயே முதன் முறையாக அரசு ஊழியர்களைப் போல் தனியார் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கும் திட்டத்தை கேரள அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மகப்பேறு நலன் சட்டத்தின்படி இந்த முன்மாதிரி நடவடிக்கையை அம்மாநில அரசு மேற்கொண்டுள்ளது. கேரள சட்டப் பேரவையில் எடுக்கப்பட்ட இந்த முடிவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், கேரளத்தில் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் 29 வாரங்கள் மகப்பேறு விடுப்பை ஊதியத்துடன் எடுத்துக்கொள்ளலாம். அதேபோல் மகப்பேறு காலம் தொடங்கி, குழந்தை பிறக்கும்வரை மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் மருத்துவச் செலவுக்காக வழங்கப்படும் என அம்மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மாற்றத்துக்கான பாடல்
குழந்தைத் திருமணம் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டாலும் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றுவருகின்றன. குறிப்பாக, ஆசிய நாடுகளில் குழந்தைத் திருமணங்கள் அதிக எண்ணிக்கையில் நடைபெறுகின்றன. இதற்கு எதிராகப் பாடல் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார் 21 வயதாகும் சோனிடா. ஆப்கானிஸ்தானில் பிறந்த சோனிடா, ஈரானில் வளர்ந்தவர். பள்ளியில் படித்துக்கொண்டிருந்த சோனிடாவுக்கு குடும்பத்தினர் திருமணம் செய்துவைக்க முடிவு செய்துள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கட்டாயத் திருமணத்திலிருந்து தப்பித்தார். அதன் பிறகு குழந்தைகளைத் திருமணம் செய்துவைப்பதற்கு எதிராக ‘Daughters for Sale’ என்ற தலைப்பில் ராப் பாடல் ஒன்றை வெளியிட்டார். அந்தப் பாடலில், திருமணம் வேண்டாம் எனக் கூறும் ஒரு சிறுமியின் வலியும் கனவுகளும் ஆசைகளும் வெளிப்படுகின்றன. இந்தப் பாடல் குழந்தைத் திருமணத்துக்கு எதிரான பாடலாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டுவருகிறது. “ஈரானில் ராப் பாடல்களைப் பெண்கள் பாடுவது குற்றச் செயல். ஆனால், இப்போது நான் தைரியமாக இருக்கக் கற்றுகொண்டேன். இஸ்லாமிய நாடுகளில் உள்ள பெண்களிடம் நிறைய மாற்றங்கள் உருவாகியுள்ளன. மாற்றத்தை நோக்கி நடைபோட அவர்கள் தயாராகிக்கொண்டு இருக்கிறார்கள்” என்கிறார் சோனிடா.
நெசவாளர் கீதாவுக்கு தேசிய விருது
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நெசவாளர் கீதாவுக்கு மத்திய அரசின் சிறந்த கைத்தறி நெசவாளருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருதுக்குத் தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒரே நபர் கீதா மட்டுமே. இவருக்கு 1.5 லட்சம் ரூபாய் ரொக்கமும் 15 ஆயிரம் மதிப்பிலான மொபைல் போன், தாமரை பத்திரம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவையும் வழங்கப்படவுள்ளன. இவர் ‘கோர்வை’ ரகப் பட்டுப் புடவையை நெய்துள்ளார். இந்தப் பட்டுப் புடவையில் வரும் இரண்டு பார்டர்களைக் கோர்வை முறையில் நெய்திருக்கிறார். அதில் பாரம்பரியமான மயில் சக்கரத்தை வடிவமைத்திருக்கிறார். பொதுவாக, மாதத்துக்கு மூன்று பட்டுப் புடவைகளை நெய்துவிடும் கீதா, இந்தப் புடவைக்கு மட்டும் ஒரு மாதம் எடுத்துகொண்டுள்ளார். கூட்டுறவுச் சங்கத்திலிருந்து பட்டு நூல்களை வாங்கி, புடவைகளை நெய்து வாழ்க்கையை நடத்திவரும் தனக்கு இந்த அங்கீகாரம் நம்பிக்கை அளித்துள்ளதாகக் கூறியிருக்கிறார் கீதா.
விண்வெளியில் நடந்த பெண்கள்
விண்வெளி வரலாற்றிலேயே முதன்முறையாக நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த இரு பெண் விஞ்ஞானிகள் பராமரிப்புப் பணிகளுக்காக விண்வெளி ஆய்வு மையத்தின் மேற்பரப்பில் ஆண்கள் துணை இல்லாமல் நடந்து சாதனை படைத்துள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை கிறிஸ்டினா கோச் (40), ஜெசிகா மேர் (42) இருவரும் இந்த சாகசப் பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர். சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் பழுதான பேட்டரிகள், உதிரிபாகங்களை மாற்றுவதற்கான பணிகளை அந்தரத்தில் மிதந்தபடியே செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT