Published : 20 Oct 2019 11:12 AM
Last Updated : 20 Oct 2019 11:12 AM
சு. அருண் பிரசாத்
மழைக்காலம் தொடங்கி விட்டாலே சென்னைவாசிகளுக்கு மகிழ்ச்சியுடன் உள்ளுக்குள் அச்சமும் பரவும். 2015 பெருவெள்ளம் தங்கள் நகரையும் தங்களையும் புரட்டிப்போட்டதை அவ்வளவு எளிதில் அவர்களால் மறந்துவிட முடியாது.
ஆறு, தன் தடத்தை அந்த வெள்ளத்தின் மூலம் சில பகுதிகளில் நிரூபித்தாலும் செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட வெள்ளத்தின் பாதிப்பே ஏராளமானோரைப் பாதித்தது. வெள்ளத்துக்குத் தங்கள் வீடுகளை மூழ்கக் கொடுத்த பலர் வாழ்க்கையை முதலில் இருந்து தொடங்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாயினர். இன்னும் பலரோ வெள்ளப் பாதிப்பைப் பார்த்த அதிர்ச்சியில் மனரீதியான பாதிப்புக்குள்ளாயினர். வெள்ளப் பாதிப்பிலிருந்து முழுவதுமாக மீண்டுவராதவர்களும் இருக்கிறார்கள்.
தற்போது தமிழகத்தில் பரவலாக மழை பெய்யத் தொடங்கியிருக்கும் வேளையில் சென்னைப் பெருவெள்ளம் குறித்து க்ருபா ஜி எழுதியிருக்கும் நூல் பலவற்றை உணர்த்துகிறது. பத்திரிகையாளர், எழுத்தாளர், இதழ் ஆசிரியர் என்று பல அடையாளங்களுடன் இயங்கிக்கொண்டிருக்கும் க்ருபா, மூன்று ஆண்டுகள் ஆய்வு செய்து ‘ரிவர்ஸ் ரிமெம்பர்’ என்ற நூலை எழுதியிருக்கிறார். ‘தி மெட்ராஸ் மேக்’ என்ற ஆங்கில இணையச் சிறுபத்திரிகையை நடத்திவந்த க்ருபா, சிறுகதையாசிரியரும்கூட. தற்போது சென்னையைப் பற்றிய நாவல் ஒன்றை எழுதிக்கொண்டிருக்கிறார்.
தாத்தாவால் உண்டான ஆர்வம்
க்ருபாவின் பூர்விகம் ஆந்திரம். வெகு காலத்துக்கு முன்பே தமிழகத்துக்கு வந்துவிட்டனர். இவருடைய தாத்தா ஜி.வி. கிருஷ்ணமூர்த்தி, இசையில் ஈடுபாடு கொண்டவர். திரை இசையமைப்பாளராக ஆசைப்பட்டுச் சிறுவயதில் சென்னைக்கு வந்துவிட்டார். சரியான வாய்ப்புகள் அமையாததால் கல்கத்தாவுக்குச் சென்று ராணுவத்துக்காக வாசிக்கத் தொடங்கினார்.
“கல்கத்தாவில்தான் கம்யூனிச சித்தாந்தம் அவருக்கு அறிமுகமானது. மீண்டும் சென்னைக்கு வந்தவர், இசையமைக்கும் வாய்ப்புகளைத் தேடியபோது, ஸ்டுடியோ முதலாளிகள் இவரைப் போன்ற எந்தப் பின்னணியும் இல்லாதவர்களை அழைத்துச் சென்று மெட்டுகளை வாங்கிக்கொண்டு ஊதியம் கொடுக்காமல் ஏமாற்றி அனுப்பிக்கொண்டிருப்பதை உணர்ந்தார்.
கல்கத்தாவிலும் பம்பாயிலும் இருக்கும் திரையிசைக் கலைஞர்களுக்கான சங்கங்களின் தேவையை உணர்ந்து, தென்னிந்தியாவின் முதல் சங்கத்தை சென்னையில் தொடங்கினார்” என்று தன் தாத்தா குறித்த நினைவுகளைப் பெருமிதத்துடன் பகிர்ந்துகொள்கிறார் க்ருபா. தாத்தா கிருஷ்ணமூர்த்திதான் சென்னை குறித்த ஏராளமான தகவல்களை க்ருபாவுக்குச் சொல்லியிருக்கிறார். அவற்றைக் கேட்டு வளர்ந்தவருக்கு சென்னை மீதான ஆர்வம் அதிகமானது. அது சார்ந்த தேடல், அவரைப் பத்திரிகையாளராக்கியது.
எழுத்துக் கனவு
11-ம் வகுப்புப் படித்தபோது இதழியல் கனவு உருக்கொண்டதாகச் சொல்லும் க்ருபா, சென்னை எம்.ஓ.பி. வைணவக் கல்லூரியில் மின்னணு ஊடகவியல் பயின்றார். ஊடகம் பற்றிய தொழில்நுட்ப அறிவு கிடைத்துவிட்டதால், அடுத்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் மேற்படிப்பைத் தேர்ந் தெடுத்தார் “இந்தியச் சமூகம், சாதி, பெரியார், அம்பேத்கர் எனப் பல்வேறு விஷயங்களைப் பேசும் பேராசிரியர் கருப்பையா என்னுடைய சிந்தனையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்” என்று தன் ஆசிரியரை மதிப்புடன் நினைவுகூர்கிறார்.
2008-ல் ஆங்கில நாளிதழ் ஒன்றின் இணைப்பிதழ்கள் பிரிவில் நிருபராகப் பணியில் சேர்ந்தக்ருபா கலை, இலக்கியம், சமூகம் ஆகியவை பற்றியும் ‘மெட்ராஸ் ப்ளஸ்’ என்ற இணைப்பிதழில் சென்னை பற்றியும் எழுதத் தொடங்கினார். லக்ஷ்மி க்ருபா என்ற பெயரில் பத்திரிகையில் எழுதிவந்தவர், பெயரில் இருந்தே ஒருவரைப் பற்றிய முன்முடிவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் போக்கில் சிக்கிக்கொள்வதைத் தவிர்க்க நினைத்தார். அதனால், புனைவெழுத்துகளில் க்ருபா ஜி என்ற பெயரைப் பயன்படுத்தத் தொடங்கியதாகச் சொல்கிறார்.
“2009-ல் புனைவு எழுதத் தொடங்கினேன். எழுத்தாளர் அனிதா நாயர் நடத்திய படைப்பிலக்கியப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டது என் எழுத்தை மேம்படுத்த உதவியது” என்று தன் புனைவெழுத்து முயற்சிகளைப் பற்றிக் கூறுகிறார். ஆங்கில நாளிதழ் ஒன்றில் ‘மிஸ். ரெப்ரசன்டேஷன்’ என்ற பெயரில் 100 வாரங்களுக்குத் தொடர் எழுதினார். “திரையில் பெண்கள் சித்தரிக்கப்படும் விதத்தை ஒரு பெண்ணின் பார்வையிலிருந்து அணுகும்போது எப்படி இருக்கும் என்று சொல்ல முயன்றதன் விளைவே இந்தப் பத்தி” என்கிறார்.
தி மெட்ராஸ் மேக்
“படைப்புகளை வெளியிடுவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் தொழில்முறை சாராத எழுத்தாளர்களின் படைப்புகளை மட்டுமே வெளியிடும் இணையதளச் சிறுபத்திரிகைகள் உலகின் பல நாடுகளில் உள்ளன. படைப்புகளை வெளியிடுவதில் தொடக்கத்தில் எனக்கும்கூட அந்தச் சிக்கல் இருந்தது. அதன் விளைவாகவே மெட்ராஸின் பெயரில், ‘தி மெட்ராஸ் மேக்’ என்ற இணைய இதழைத் தொடங்கினேன்.
அதில் வெளியான படைப்புகளைத் தொகுத்து ‘தி மெட்ராஸ் மேக்: ஆன்தாலஜி ஆஃப் கன்டெம்ப்ரரி ஃபிக்ஷன்’ என்ற பெயரில் புத்தகமாகக் கொண்டுவந்தோம். கிரவுட் ஃபண்டிங் முறையில் உருவான இந்தத் தொகுப்பில் இடம்பெற்ற படைப்புகளின் எழுத்தாளர்களுக்குச் சன்மானத் தொகையும் வழங்கப்பட்டது. தொடர்ந்து நான்கு ஆண்டுகள் வெளியான இதழ், சில காரணங் களால் தொடர முடியாமல் போனது” என்கிறார் க்ருபா.
நதிகள் மறப்பதில்லை
“டோக்கியோவின் சுரங்கப் பாதையில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல் பற்றி ஜப்பானிய எழுத்தாளர் ஹாருகி முரகாமியின் புத்தகம் என்னைத் தீவிரமாக பாதித்தது. ஆனால், எங்கோ அமெரிக்காவிலோ ஜப்பானிலோ நிகழ்பவையே முக்கியமானவை; இங்கே நடப்பவற்றைக் கண்டுகொள்ளத் தேவையில்லை என்ற மனப்பான்மையில்தான் நாம் இருக்கிறோமோ என்று தோன்றியது.
மனிதத் தவறுகளால் சென்னையில் வெள்ளம் ஏற்படுத்தப்பட்டபோது, இப்படியெல்லாம்கூட நடக்குமா என்ற மிகப் பெரிய கேள்வி எழுந்தது. முன்னறிவிப்பு இல்லாமல் எப்படித் தண்ணீரைத் திறந்துவிடுவார்கள்? இப்போதும்கூட அந்த வெள்ளம் அபத்தமானதாகவே இருக்கிறது. சென்னை வெள்ளம் உளவியல்ரீதியாக என்னைத் தீவிரமாகப் பாதித்தது. மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் இதை யார் படிப்பார்கள் என்ற கேள்வியையும் தாண்டி, அந்த வெள்ளத்தின் பின்னணியைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும் என்ற அவசியத்தை உணர்ந்துதான் இந்தப் புத்தகத்தை எழுதினேன்” என்று ‘ரிவர்ஸ் ரிமம்பர்: #சென்னைரெய்ன்ஸ் அண்ட் த ஷாக்கிங் ட்ரூத் ஆஃப் எ மேன்மேடு ஃபிளட்’ என்ற தன்னுடைய புத்தகம் உருவான விதத்தை விவரிக்கிறார். இந்தப் புத்தகத்தைத் தமிழில் கொண்டுவரும் முயற்சியிலும் க்ருபா இருக்கிறார்.
கலை, அரசியல், சினிமா என்று மெட்ராஸின் வரலாறு ஆர்வத்தைக் கிளறக்கூடியது. அதைப் பற்றிய எந்தப் புரிதலும் அக்கறையும் அழகியலும் இல்லாமல் நகரமே இன்று திக்குமுக்காடிக்கொண்டிருக்கிறது. இப்படியாகச் சென்னையின் வரலாறு பற்றி ஒருபுறமும் பேரழிவுகள் பற்றி மற்றொருபுறமும் பரவலாக நிலவும் அலட்சியம் குறித்து வலுவான கேள்வி எழுப்புகின்றன க்ருபாவின் எழுத்துகள்.
அவலங்களைத் தடுக்கத் தீர்வை நோக்கி நகர வேண்டியதன் அவசியத்தையும் க்ருபா ஜி உணர்த்தியிருக்கிறார். மக்கள் சோதனைக்கு ஆளாக்கப்படுகிற நிகழ்வுகள் அனைத்திலும் அரசியல் இருப்பதைப் போல் சென்னைப் பெருவெள்ளத்துக்குப் பின்னால் இருக்கும் அரசியலும் அவசியம் உணரப்பட வேண்டும் என்பதே தன் நோக்கம் என்று குறிப்பிடுகிறார் க்ருபா ஜி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT