Published : 13 Oct 2019 11:30 AM
Last Updated : 13 Oct 2019 11:30 AM
பாரததேவி
பிஞ்சைக்குக் கணவன் சென்ற பிறகு யோசித்தபடியே உட்கார்ந்திருந்த செந்திக்கு வீட்டில் கிடக்கும் நெல்லைக் குத்த மனதே வரவில்லை. இன்னைக்குத் குத்தித் தின்னுரலாம். ஒரே நிமிசத்துல தைப்பொங்க வந்திருமே. அப்ப ஊரெல்லாம் நெல்லுச்சோறு ஆக்குவாக. நம்ம புள்ளைக நெல்லுச் சோறில்லாம மத்த புள்ளைகளைப் பார்த்து ஏங்கிப்போயி நிக்குமே. அப்ப என்ன செய்ய என்று யோசித்தவள் ஒரு முடிவோடு அவளுக்குத் தெரிந்த வீட்டில் போய் வேலைக்கு வருகிறேன் என்று சொல்லி ஒரு மரக்கால் குதிரைவாலியை வாங்கிக்கொண்டு வந்தாள்.
இதைக் காயப்போட வெயில் வேணுமா என்ன? வரையோட்டில் போட்டு வறுத்துக் குத்திருவோம் என்று அடுப்பைப் பற்றவைத்தாள். முருகனுக்கு ஈர உழவு என்பதால் மாடுகளை உழவில் பூட்டிய உடனே வயிறு பசிப்பது போலிருந்தது. பசியை மறப்பதற்காக முருகன், ‘நடக்காத மாட்டோட நான் படுத பாட்டோட ஈரப்புழுங்கலோட என் பொண்டாட்டி என்ன பாடு படுதாளோ’ என்று பாடிக்கொண்டே உழுதான்.
குதிரைவாலியும் புளிச்சகீரையும்
வறுத்த குதிரைவாலி பொரிந்து உமி லேசாகத் திறந்திருக்க, உரலில் போட்ட உடனே நன்றாகக் குத்துப்பட்டது. காயப்போட்ட தானியத்தையாவது புடைத்துப் புடைத்து முதல் குத்து, இரண்டாங் குத்து என்று மூணு தடவை குத்த வேண்டும். இந்த வறுத்த தானியம் முதல் குத்திலேயே அரிசி வேறு உமி வேறாக ஒரே நொடியில் பிரிந்துவிட்டது. செந்திக்குச் சந்தோச மென்றால் அப்படியொரு சந்தோசம். அப்போதே உலை வைத்துச் சோற்றைக் காய்ச்சினாள். கொல்லையில் கிடந்த புளிச்சகீரையைப் பிடுங்கி, சட்டி நிறைய கடைந்தாள். புள்ளைகளை வரிசையாக உட்கார வைத்து, வயிறு நிறையச் சோற்றைப் போட்டாள். அவளுக்கும் பசித்தது.
ஆனாலும், ரொம்ப புத்திசாலித் தனத்தோடு தான் குதிரைவாலியை வறுத்துக் குத்தியதை நினைத்துப் பெருமை கொண்டாள். அவளுக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது. தனக்குள் அலைந்துகொண்டிருந்த சிலிர்ப்பையும் மகிழ்ச்சியையும் புருசனிடம் சொல்வதோடு தானும் அவன் கூடவே சாப்பிட வேண்டு மென்று நினைத்தாள். உடனே தூக்குப்போனியில் இரண்டு, மூன்று உருண்டைகளைப் போட்டுக்கொண்டு கீரையையும் ஊற்றிக்கொண்டு பிஞ்சையை நோக்கி நடந்தாள்.
புருசனைப் பார்க்கும் பேராவல்
தினமும் நடக்கும் வழிதான். ஆனால், இன்றைக்கென்னவோ செந்திக்கு அது வழியாகத் தெரியவில்லை. பூச்சொரியும் காடாகத் தெரிந்தது. காடுகளில் வேலை செய்தவர்களையெல்லாம் இவளே வலிய வலியக் கூப்பிட்டு விசாரித்தாள். முகமெல்லாம் பொலிவுடன் மின்னியது. இதற்குள் அவர்களின் வயல் வந்துவிட்டது.
பொழுது மேலே ஏறிடுச்சி. எந்நேரம் சாப்பாடு வருமோ என்று ஏக்கத்தோடு உழுதுகொண்டிருந்த முருகன், தன் மனைவி இவ்வளவு சீக்கிரத்தில் வருவாள் என்று நினைக்கவில்லை. ஒருவேளை கஞ்சி கொண்டு வராமல்தான் வருகிறாளோ என்று நினைத்தான். ஆனால், அவள் கையில் தூக்குப் போனி இருந்தது. அதைவிட அவள் முகம் பொங்கிக் கிடப்பதைப் பார்த்ததும் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
தொலைவில் வரும்போதே, “என்ன செந்தி, இந்நேரத்துக்கே பிஞ்சைக்கு வந்துட்டே. கஞ்சிதேன் கொண்டு வந்தியா இல்ல வெறும் புளிச்சத்தண்ணியதேன் தூக்குப் போனிக்குள்ள ஊத்திட்டு வந்தியா?” என்று கேட்குமுன்னே செந்திக்குப் பொறுக்கவில்லை. “மச்சான் மாடுகளை அவுத்து வரப்பில மேயவிட்டுட்டு இப்படி வாவ மரத்தடி நெனலுக்கு வாரும்” என்றவள், வாகை மரத்தடியை நோக்கி நடந்தாள். முருகனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால், செந்திக்கு முகமெல்லாம் வெளிச்சமாயிருப்பதைப் பற்றி யோசித்தவாறே மாடுகளை அவிழ்த்து, வரப்பில் மேயவிட்டுவிட்டு வாகை மரத்தடிக்கு முருகன் சென்றான்.
இடைவிடாத பேச்சு
அவனுக்கு ஒரு உருண்டை சோற்றை எடுத்து வைத்தாள். சோற்றைச் சாப்பிட்ட முருகனுக்கு, வழக்கமாகச் சாப்பிடும் சோறுபோல் இல்லாமல் இன்றைக்கென்று சோறு ருசியாக இருந்தது. “என்ன செந்தி, இன்னைக்குச் சோறு இம்புட்டு ருசியா இருக்கு? நீ என்ன மாயம் செஞ்சே? நமக்குக் கஞ்சி வர இன்னும் ரெண்டு நாளிய ஆவுமின்னு நெனைச்சிக்கிட்டு இருந்தேன்” என்றான் தான் சாப்பிடுவதையே நம்ப முடியாமல். செந்தியும் தான் செய்த வேலையைப் பற்றிப் பெருமையோடு சொன்னாள். முருகனுக்கு அப்போதே அவளை அணைத்துக்கொள்ள வேண்டுமென்று இருந்தது. ஆனால், காடு முழுக்க ஆட்கள் வேலை செய்து கொண்டிருந்ததால் தன் ஆசையைத் தனக்குள்ளேயே அடக்கிக்கொண்டான்.
செந்தி தன் மடியிலிருந்த வெற்றிலையை எடுத்தவள் அதில் சுண்ணாம்பைத் தடவியவாறே, “மச்சான் இன்னைக்கு நீரு உழவடிக்கப் போக வேண்டாம். வெத்தலையப் போட்டுக்கிட்டு ஆசையாகப் பேசிக்கிட்டு இருப்போம்” என்றாள். முருகனும் அவளை உரசியபடி உட்கார்ந்தவாறே, “அது மட்டுமில்லை செந்தி. இனிமே தினமும் தானியத்தை விடியு முன்னமே வறுத்து வச்சிரு. நானு குத்திக்கொடுத்திருதேன். இனி நமக்கு ஈர தானியத்தைப் பத்தி ஒரு கவலையுமில்லை” என்றான் சந்தோசத்துடன்.
ஆந்தையின் கோபம்
அந்த மரத்தில் மறைவாக அடைந்திருந்த ஆந்தை ஒன்று இவர்கள் போவார்கள் போவார்கள் என்று பார்த்தது. அவர்கள் போகாமல் பேசிக்கொண்டே இருக்கிறார்கள் என்று தெரிந்ததும் அதற்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. ‘ம்..ம்ம்..ம்’ என்று உறுமிக்கொண்டே பறந்து வந்து இவர்களுக்குச் சற்று தூரத்தில் நின்றவாறு உற்றுப் பார்த்தது. அதைப் பார்த்த செந்திக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
“இன்னைக்குத்தேன் என் புருசன்கூடச் சந்தோசமா பேசிக்கிட்டு இருப்போமின்னு உட்கார்ந்திருக்கேன். உம்மொவரையக் காமிச்சிட்டயா? இனி வெளங்குனாப்புலதான்” என்றவாறு அங்கிருந்த மண்கட்டியை எடுத்து அதை நோக்கி வீசினாள்.
ஆந்தைக்கு அதற்கு மேல் கோபமாயிருந்தது. ‘இந்த மனிதர்கள் எல்லாப் பறவைகளையும் ஆசையாகப் பார்க்க விரும்புகிறார்கள். அவற்றோடு பழகவும் விரும்புகிறார்கள். ஆனா என்னைக் கண்டா மட்டும் எதுக்கு இம்புட்டுக்கு இச்சலாத்திப்படுறதோடு எரிச்சலும் படுதாக. சொல்லப்போனா இந்த மயிலும் குயிலும் என்ன அழகு? இந்த மாடப்புறாவும் மைனாவுந்தேன் என்ன அழகு? மூணாம்பிறை காய்ச்சலுக்கு எனக்கு மொவரைதேன் கொஞ்சம் வீங்கியிருக்கு. மத்தபடி எனக்கென்ன கொறச்சல்’ என நினைத்துகொண்ட ஆந்தை அந்த இடத்தை விட்டுப் பறந்துபோனது.
முருகனுக்கு இந்த மழைக்காலத்திலும் எப்படியும் கடன் வாங்கியாவது குத்தி அரிசியைக் கண்டுபிடித்துவிடலாம் என்ற தைரியம் வந்த பிறகு, கூடவே இந்த தடவை ஆழமா உழுது நல்லா வெள்ளாம செஞ்சி நாமளும் பணக்காரகளா ஆவணுமிங்கற தெம்பும் வந்தது. அதனால், காளைக்கு வயிறு நிறைய தீமியைப் போட்டு, கொஞ்சம் பருத்தி விதையும் ஆட்டிவிட்டு அதோட கழுத்தைத் தடவிக் கொடுத்ததோட முதுகையும் தடவிக் கொடுத்துவிட்டுத்தான் காளைகளை உழவுக்குக் கூட்டிட்டுப் போனான்.
(நிலா உதிக்கும்)
கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: arunskr@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT