Published : 27 Jul 2019 08:03 PM
Last Updated : 27 Jul 2019 08:03 PM

வாழ்ந்து காட்டுவோம் 16: முதியோருக்கு நல்வாழ்வு

உலக மக்கள்தொகையில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ள நம் நாட்டில், விஞ்ஞான வளர்ச்சி, மருத்துவ வசதி போன்றவற்றால் மனிதர்களின் வாழ்நாள் அதிகரித்திருக்கிறது. அதனால், முதியோர்களின் என்ணிக்கையும் அதிகரித்துவருகிறது.

இந்தியாவில் 2011-ல் நடத்தப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள்தொகையில் 10.5 சதவீதத்தினர் முதியோர். இந்திய அரசு 60 வயது தொடங்கி அதற்கு மேற்பட்ட வயதினரை மூத்த குடிமக்கள் என்று வரையறுத்துள்ளது. கேரளாவுக்கு அடுத்தபடியாக அதிக முதியோர்களைக் கொண்ட மாநிலம் தமிழகம். ஆனால், முதியோரை நாம் நல்லவிதமாகப் பராமரிக்கிறோமா என்ற கேள்விக்குப் பெரும்பாலும் எதிர்மறையான பதில்தான் விடையாகக் கிடைக்கிறது. முதியோரின் உலகத்தை நாம் புரிந்துகொள்ள முயல்வதில்லை. தள்ளி நின்று பார்த்துவிட்டுக் கடந்துவிடுகிறோம். 

ஆனால், முதியோரைப் பலவிதமான பிரச்சினைகள் பாதிக்கின்றன. பலவீனம், ஞாபக மறதி, காரணமில்லாத எரிச்சல், கோபம், நோய், முதுமையால் ஏற்படும் உடல் தளர்வு, புறக்கணிக்கப்படுதல், தனிமை, வறுமை, சமூக அந்தஸ்தில் சரிவு போன்றவை முதியோர் எதிர்நோக்கும் முக்கியப் பிரச்சினைகள்.

பராமரிப்பின்றி அவதிப்படும் முதியோருக்கு உதவும் நோக்கில் 2007-ல் ‘பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம்’ இயற்றப்பட்டு, அதற்கிணங்க தமிழ்நாடு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு விதிகள் 2009-ல் வகுக்கப்பட்டன. பெற்றோர் அல்லது மூத்த குடிமக்கள் தங்களைப் பராமரித்துக்கொள்ளப் போதுமான பொருளாதார வசதியோ சொத்துக்களோ எதுவும் இல்லாதபோதும், உரிய பராமரிப்பு கிடைக்கவில்லையென்றால் இந்தச் சட்டத்தின்கீழ் அவர்களுடைய மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள் ஆகியோரிடருந்து பராமரிப்புத் தொகை பெறலாம்.

கட்டணமில்லா பஸ்  பாஸ்

மூத்த குடிமக்கள் குளிர்சாதன வசதி இல்லாத சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக அனைத்துப் பேருந்துகளிலும் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம். இதற்கென மாதத்துக்கு பத்து டோக்கன்கள் வழங்கப்படும். பேருந்து நடத்துநரிடம் 
இந்த டோக்கன்களைக் கொடுத்து கட்டணமின்றிப் பயணம் செய்யலாம். இதற்கான விண்ணப்பப் படிவத்தைப் போக்குவரத்துத் துறையின் இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அல்லது சம்பந்தப்பட்ட பஸ் டெப்போக்களில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சம்பந்தப்பட்ட பஸ் டெப்போக்களில் கொடுத்து அடையாள அட்டையையும் டோக்கன்களையும் பெற்றுக்கொள்ளலாம்.

எந்தெந்த பஸ் டெப்போக்களில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது என்ற விவரத்தைப் போக்குவரத்துத் துறையின் இணையதளத்தில் காணலாம். விண்ணப்பங்கள் கொடுப்பதற்கெனக் கடைசி தேதி என்று எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. தேவைப்படுவோர் இதற்கான விண்ணப்பத்தை எwப்போது வேண்டுமானாலும் அளிக்கலாம்.

எப்படி விண்ணப்பிப்பது?

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக இணையதளத்தில் (www.mtcbus.org) முழுமையான தகவல்களுடன் விண்ணப்பப் படிவம் வெளியிடப்பட்டுள்ளது.

ஆவணங்கள்

# விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் தேதியில் 60 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். 

# பாஸ்போர்ட் அளவில் 2 ஒளிப்படங்கள் (விண்ணப்பத்திலும் அடையாள அட்டையிலும் ஒட்டுவதற்காக), வயதுச் சான்றாக ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், பள்ளிச் சான்றிதழ் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை இணைத்து, கையெழுத்திட்டு விண்ணப்பிக்க வேண்டும்.

நிபந்தனைகள்

# விண்ணப்பித்தவர்களுக்கு, அடையாள அட்டையுடன் டோக்கனும் வழங்கப்படும். இந்த அட்டையையும் டோக்கனையும் நடத்துநர்களிடம் காண்பித்துப் பயணம் செய்யலாம்.

 #விண்ணப்பதாரர் நேரில் வந்தால் மட்டுமே அடையாள அட்டை வழங்கப்படும். 

# மாதந்தோறும் தலா பத்து டோக்கன் வழங்கப்படும். ஒரு டோக்கனை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். 

# அந்த டோக்கன் மூலம் அந்த பஸ்சின் கடைசி நிறுத்தம்வரை அவர்கள் பயணிக்கலாம்.

# குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகள் தவிர, மற்ற மாநகரப் பேருந்துகள் அனைத்திலும் அவர்கள் பயணம் செய்யலாம்.

ஆதரவற்ற முதியோர்

ஆதரவற்ற நிலையில் உணவுக்கு வழியின்றி வாடும் முதியவர்களுக்காக முதியோர் ஓய்வூதிய உதவித் தொகைத் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. கணவன் அல்லது மனைவி போன்ற மிக நெருங்கிய உறவுகள் இல்லாமல் இருப்பவர்கள், மிக நெருங்கிய உறவுகள் அல்லது பிள்ளைகள் இருந்தும் அவர்களது ஆதரவு கிடைக்காமல் துன்பப்படும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஆதரவற்ற முதியோர் என்று குறிப்பிடப்படுகின்றனர்.

60 வயதுக்கு மேற்பட்டவர்கள், எந்தவித ஆதரவுமின்றி வாழும் முதியோர்கள் ஆகியோருக்கு மாதம் ரூ.1,000 வீதம் ‘முதியோர் ஓய்வூதிய உதவித் தொகை’ அரசு மூலம் வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை ஆதரவற்ற முதியோர் எனக் கருதப்படும் ஆண்களும் பெண்களும் வட்டாட்சியர் அலுவலகங்களில் கிடைக்கும் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்திசெய்து, வயது, இருப்பிடச் சான்றுகளை இணைத்து அளிக்க வேண்டும்.

வயதுச் சான்று

தற்போது குடும்ப அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை போன்ற இரு ஆவணங்களையும் அடிப்படையாகக் கொண்டு வயதுச் சான்றிதழ் நிரூபணம்செய்யப்படுகிறது.

இருப்பிடச் சான்று

தமிழ்நாடு அரசு இருப்பிடச் சான்று மற்றும் பரிந்துரை அளிக்க விண்ணப்பிப்பவர், தான் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த நகர்மன்ற/மாமன்ற உறுப்பினர்கள், கிராமப் பஞ்சாயத்துத் தலைவர், நகர்மன்றத் தலைவர், மாநகர்மன்றத் தலைவர் (மேயர்), ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர், மாவட்டப் பஞ்சாயத்துத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், மத்திய அல்லது மாநில அரசு பதிவுபெற்ற அதிகாரிகள், முதியோர் இல்ல நிர்வாகிகள் போன்றவர்கள் இருப்பிடம் மற்றும் பரிந்துரைக்கான சான்றுகளை அளிக்கலாம். ஆனால், இறுதியாக இருப்பிடச் சான்று வட்டாட்சியர் அலுவலகத்தில் பெறப்பட்டதாக இருக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் ஆய்வு

இந்த விண்ணப்பங்கள் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து கிராம நிர்வாக அலுவலருக்கு அனுப்பப்பட்டு விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் உண்மைதானா என்று ஆய்வு செய்யப்படும். பின்பு அவரின் பரிந்துரை பெறப்படும்.

உதவித்தொகை

கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து பெறப்பட்ட ஆய்வுக்குப் பின் உள்வட்ட வருவாய் ஆய்வாளரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவாய் அலுவலரின் பரிந்துரையின் பேரில் வட்டாட்சியர் அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட துணை வட்டாட்சியர் மூலம் விண்ணப்பதாரருக்கு, மாதம் ரூ.1,000 உதவித் தொகையாக வழங்க உத்தரவுகளைப் பிறப்பிக்கின்றனர்.

இந்த உத்தரவுக்குப் பின்பு விண்ணப்பித்தவருக்கு அவர் இறக்கும்வரைக்கும் மாதந்தோறும் உதவித்தொகை தபால் அலுவலகப் பணவிடை (Money Order) வழியாக அளிக்கப்பட்டுவந்தது. தற்போது விண்ணப்பதாரர்கள் தங்களுக்கென வங்கிக் கணக்கு ஒன்றைத் தங்களது வீட்டுக்கு அருகில் இருக்கும் ஏதாவது வங்கி அல்லது அஞ்சலகம் போன்றவற்றில் தொடங்க வேண்டும். கணக்கு தொடங்கப்பட்டுள்ள வங்கி அல்லது அலுவலகத்தில் மாதா மாதம் ஓய்வூதியத் தொகை செலுத்தப்பட்டுவிடும். இதற்கான ஸ்மார்ட் கார்டு மூலம் தங்களின் வங்கிக் கணக்கிலிருந்து இத்தொகையை விண்ணப்பதாரர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

(உரிமைகள் அறிவோம்)
கட்டுரையாளர், மாநில அளவிலான சிறப்புப் பயிற்றுநர்.
தொடர்புக்கு: somurukmani@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x