Published : 27 Jul 2019 07:46 PM
Last Updated : 27 Jul 2019 07:46 PM
இரண்டு, மூன்று பிள்ளைகளைப் பெற்றுவிட்டு புருசன்காரன் செத்துப்போனால் அவள் பாடு பெரியபாடுதான். அப்போது ஒரு நாள் கூலி ஐம்பது பைசா. அதை வைத்துக்கொண்டு அவள் குழந்தைகளை வளர்க்கப் படும்பாடு சொல்லி முடியாது. பத்து வயதிலேயே அந்தப் பிள்ளைகளையும் தன்னோடு கூட்டிக்கொண்டு போவாள். ஆள்கணக்குக்கு அந்தப் பிள்ளையை வைத்திருப்பாளே தவிர, அந்தப் பிள்ளையின் வேலையையெல்லாம் இவள்தான் செய்வாள்.
பிஞ்சைக்காரி நல்லவளாக இருந்தால் இதற்கு ஒப்புக்கொள்வாள். இல்லாவிட்டால் ‘இத்தீனிப்பிள்ளைக்கு அத்தீனி கிளிராம மின்னு’ இவனுக்கெல்லாம் ஆளோடு ஆளா கூட்டிட்டு வந்து நீ கொத்து வாங்கப் பாக்கிறியா என்று விரட்டிவிடுவார்கள்.
வயக்காட்டில் கழியும் பொழுது
புருசன் செத்துவிட்டால் இந்தப் பாடு, இருந்தாலோ அதிலும் கோபக்காரனாகவும் சந்தேகம் பிடித்தவனாகவும் இருந்தால் சொல்லவே வேண்டாம். இந்தப் பெண்கள் எப்போதும் வாய்ப்பிள்ளையும் கைப்பிள்ளையுமாகத்தான் இருப்பார்கள். வீடு முழுக்க அண்டியும் சவலையுமாகப் பிள்ளைகள் இருந்தாலும் அந்தப் பெண் வயிற்றில் அஞ்சு மாதமோ ஆறு மாதமோ பிள்ளை வளர்ந்துகொண்டு இருக்கும்.
அப்போதெல்லாம் மின்சாரம் என்ற பேச்சே எங்கும் கிடையாது. அதனால் காளை மாடுகளை வைத்து கூனையில்தான் இறைத்தார்கள். புருசன் முதலில் காளைகளை மட்டும் கவனித்துவிட்டு, “நானு பிஞ்சைக்குப் போறேன் நீ ‘வாமடைக்கு’ (இறைக்கும்போது முதலில் நீர் போகுமிடம்) தண்ணி போவதுக்குள்ள வந்துசேரு” என்று சொல்லிவிட்டுப் போய்விடுவான்.
காலையில் பிஞ்சைக்குப் போகிறவர்கள் பொழுது அடையத்தான் வீடுவந்து சேர்வார்கள். அதற்கு இடையில் பால் குடிக்கும் பிள்ளை இருந்தால் மூத்த பிள்ளைகள் அதைத் தூக்கிக் கொண்டு காட்டுக்கு வருவார்கள். காடுகள் தூரத்திலிருந்தால் இந்தப் பெண்கள் பாலைக் கறந்து வெண்கலச் செம்பிலிட்டு அதில் கொஞ்சம் பச்சை நெல்லையும் போட்டுவிட்டு வருவார்கள். பால் கெட்டுப்போகாமல் இருப்பதற் காக இப்படிச் செய்வார்கள்.
புருசன் இறைக்கப் போனால் பெண்கள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ‘கரட்டு உழவு’ என்று உழவு உண்டு. தரிசாகக் கிடக்கும் அந்தப் பிஞ்சையைப் புருசன் உழுதால் இவர்கள் கட்டிதட்டப் போக வேண்டும். பிஞ்சையில் அவன் வாய்க்கால் போட்டால் அவள் வரப்பு போடுவதற்காகப் போக வேண்டும். விதை போட, நாற்று நட என்று எல்லா வேலைக்கும் இந்தப் பெண்கள்தாம் அவன் பின்னால் போக வேண்டும்.
இப்படி அவர்கள் புறப்படும்போது மூத்தது இரண்டு தவிர எல்லாம் இவர்களின் காலைக் கட்டிக்கொண்டு அழும். எல்லாப் பிள்ளைகளையும் சாப்பிட வைத்து அவர்களுக்கெல்லாம் தலைக்கு எண்ணெய் வைத்து அவிச்ச பயறு, நிலக்கடலையென்று ஏதாவது தின்பண்டம் செய்து கொடுத்து அவர்களை விட்டு விலகிப்போவதற்குள் தண்ணீர் வாமடை நிறைந்து வாய்க்காலுக்குப் போய்விடும்.
அங்கம்மாவைக் காணோம்
இந்தப் பெண்களின் தலையைக் கண்ட உடனே அவர்களின் புருசன்களுக்கு ஆவேச சாமி வந்துவிடும். கையிலிருக்கும் சாட்டையைத் தூக்கிக்கொண்டு அவர்களை அடிக்க வந்துவிடுவார்கள். இப்படித்தான் அங்கம்மாவுக்கு நிறைமாதம். சித்திரை வெயில் கொளுத்துகிறது. நிலத்தில் பெரிய பெரிய கட்டியாக இருக்கிறது. புருசன் கட்டிதட்ட இவளும் அவன் கோபத்துக்குப் பயந்து கொண்டு கட்டியைத் தட்டுகிறாள்.
பிள்ளை வலி வந்துவிட்டது. புருசனிடம் சொன் னால் விடமாட்டான். பிறகு நாம் நட்ட நடுக்காட்டில் சுடுவெயிலில் பிள்ளையைப் பெத்துக்கிட்டு சீரழிஞ்சிக் கிடக்க வேண்டியதுதான் என்று நினைத்தவள் புருசனிடம் தண்ணி குடிச்சிட்டு வாரேன் என்று சொல்லிவிட்டு சேலையைத் தார்ப்பாய்ச்சிக் கட்டிக்கொண்டு ஒரே ஓட்டமாக வீட்டுக்கு ஓடிவந்துவிட்டாள். வீட்டுக்குள் நுழைந்ததுமே பிள்ளை பிறந்துவிட்டது. பிள்ளையின் அழுகைச் சுத்தம் கேட்டு எல்லாப் பெண்களும் ஓடி வந்து இவளுக்கு உதவினார்கள்.
இதற்குள் தண்ணீர் குடிக்கப் போனவள் இன்னும் வரவில்லையே என்று நினைத்தவன் ஒருவேளை நிழலில் போய் உட்காந்திருப்பாளோ என்று சுற்றும் முற்றும் தேடியிருக்கிறான். பிறகு கிணற்றில் போய் பாத்திருக்கிறான். எங்கேயும் அங்கம்மாவைக் காணோம். உடனே அவனுக்குக் கோபம் வந்தவரத்துச் சொல்ல முடியாது.
அப்படியே சாட்டையோடு வீட்டுக்கு ஓடி வீட்டில் பெண்கள் கூட்டம் இருப்பதைப் பார்த்து, “என்ன விசயம் எதுக்கு இம்புட்டுப் பேரு கூடியிருக்கீக” என்று கேட்டிருக்கிறான். அதில் ஒருத்தி ஆசையோடு, “எப்பா உனக்கு அழகான ஆம்பளப் புள்ளை பிறந்திருக்கு” என்று சொல்லவும் அவனுக்கு இன்னும் கொஞ்சம் ஆவேசம் வந்துவிட்டது.
கெட்டவசவாக வஞ்சிக்கொண்டு, “கட்டிதட்ட பயந்துகிட்டு இங்க வந்து புள்ளயப் பெத்துக்கிட்டாளாக்கும். இனி ஒரு மாதக் கணக்கில் வெளியேற மாட்டாளாக்கும். விலவுங்க அவளை அந்தச் சாட்டையால நாலு விளாசுனாத்தேன் என் மனசு ஆறும்” என்று சாட்டையோடு வர, அவன் அம்மாவோ, “இங்க கொண்டாப்பா சாட்டைய” என்று வாங்கிக்கொண்டு அவனையே சாட்டையால் பளீர் பளீரென்று வீசினாள்.
அய்யய்யோ அய்யய்யோ என்று துள்ளியவன், “எதுக்காத்தா என்ன அடிக்கே?” என்று கேட்டதும், “ஏண்டா உனக்குப் பொண்டாட்டி ஆகும், புள்ள ஆவாதாக்கும். அவளாங்காட்டி விடிஞ்சதிலிருந்து வலிச்ச வலியெல்லாம் பொறுத்துகிட்டு உன்கூட கட்டிதட்ட வந்திருக்கா. வேற ஒருத்தின்னா உன் மூஞ்சிய தட்டியிருப்பா” என்று சொல்லவும் அவன் அமைதியானான்.
டவுனில் வேலை
இப்படித்தான் பிரமனுக்கும் கருக் காணிக்கும் கல்யாணம் முடிந்தது. அந்த வருசம் மழையே பேயாமல் விளைச்சலும் கம்மியாகிவிட்டது. பிரமன் உடனே, “இத்தனை வருசமும் நல்லா மழைபேஞ்சு நாடே செழிச்சிச்சி. நானும் வருசம் நாலு மூட நெல்லுக்குக் கருது அறுத்திருவேன். நானு உன்னக் கட்டுன நேரம் மழையே இல்லாம போச்சு. நீ ராசியில்லாதவ” என அது இதுவென அவளை வஞ்சி இருக்கிறான்.
கருக்காணியோ, இப்பத்தேன் நமக்குக் கல்யாணம் ஆயிருக்கு. இப்பவே கோவம், குத்தமின்னு பெத்தவ வீட்டுலே போயி நின்னா அவளுக்கும் சடவா இருக்கும். நமக்குப் பெறவு பிறந்த தங்கச்சிகளப் பொண்ணு கேட்டு வர வேணும் அஞ்சுவாகன்னு நினைச்சி புருசன் பேசிய பேச்சுக்கெல்லாம் எந்தப் பதிலும் சொல்லாம பேசாமா இருந்துட்டா.
டவுனுல கார்மேகம்னு ஒரு பண்ணையாரு இருந்தாரு. அவருக்கு ஐம்பது ஏக்கர் வரை தோட்டம் துரவுன்னு நிறைய இருந்தது. இந்த பிரமன் அவர் கிட்டப் போயி வேலை கேட்டான். அவரு, உனக்குக் கல்யாணம் முஞ்டிசிருச்சான்னு கேட்க இவனும் முடிஞ்சிருச்சின்னு சொன்னான்.
அவன் சொன்தைக் கேட்ட பண்ணையாரு, “அப்ப உன் பொண்டாட்டியைக் கூட்டிட்டு வா. நானு உங்களுக்கு வீடு தாரேன், அதுல தங்கிக்கிட்டு வேலை செய்யுங்க. உங்களுக்கு அரிசி பருப்போட சம்பளமும் போட்டுத் தாரேன்”னு சொன்னாரு. அவனுக்கு சந்தோசமின்னா அப்படியொரு சந்தோசம். உடனே பொண்டாட்டிய போயி கூட்டிட்டு வந்துட்டான்.
இரண்டு பேரும் பண்ணையார் காட்டுல ஓடி ஓடி வேலை செய்ய, பண்ணையாரும் அவங்கள நல்லா கவனித்துக்கொண்டார்.
ரெண்டு வருசம் போனது. கருக்காணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு இடது கையில் ஆறு விரல்கள் இருந்தன. அதுபோலவே பண்ணை யாருக்கும் வலது கையில் ஆறு விரல்கள் இருந்தன. பண்ணையார் அவர்களுக்கு வேணுங்கிற வசதி செஞ்சதோட ஒரு கிராமில் தங்க மோதிரம் எடுத்துப் போட்டார்.
அந்தக் காலத்தில் ஒரு கிராம் தங்கம் என்பது பெரிய விஷயம்.
தன் மவனுக்குப் பண்ணையார் மோதிரம் போட்டதில் பிரமனுக்குக் கர்வமும் பெருமையும் ஏறியிருந்தது. எப்போதும்போல் இல்லாமல் தெருவில் தெனாவட்டாக நடந்தான். தன்னிலும் கொஞ்சம் வசதியில்லாத வர்கள் பேசவந்தால் முகத்தை திருப்பிக் கொண்டு போசாமலே போனான்.
(நிலா உதிக்கும்)
கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: arunskr@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT