Published : 21 Jul 2019 10:45 AM
Last Updated : 21 Jul 2019 10:45 AM
தமிழ் முல்லை
“இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம் என அனைவரும் உறுதியேற்று இருக்கிறோம். ஆனால், இன்றைக்கோ நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தையே அச்சுறுத்தும் விரும்பதகாத நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன” எனத் தன்னுடைய முதல் நாடாளுமன்ற உரையிலேயே நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளார் திரிணமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா.
கொல்கத்தாவில் பிறந்த மஹுவா மொய்த்ரா, மேற்கு வங்கத்தின் கிருஷ்ணா நகர் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 18 வயதிலேயே அவருக்கு அரசியல் ஆர்வம் ஏற்பட்டது. ஆனால், அதற்கான நேரத்தை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தார். மாசாசூசெட்ஸ் மவுண்ட் ஹோல்யோக் கல்லூரியில் படித்த அவர், ஜே.பி. மார்கன் வங்கியின் துணைத் தலைவராகப் பணியாற்றினார்.
கல்லூரியில் படித்து, பத்து ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது. அப்போது அவருடைய நண்பர்கள் அனைவரும் வங்கிகளில் மேலாளர்களாக இருந்தனர். “நானும் மற்றவர்களைப் போல் ஒரே பாதையில் சென்றுகொண்டிருந்தது எனக்குப் பிடிக்கவில்லை. இன்னும் பத்து ஆண்டுகள் கழித்து என் கல்லூரி நண்பர்களைச் சந்திக்கும்போது நான் வங்கி மேலாளராக இருக்க விரும்பிவில்லை. அப்போது அவர்கள் முன் வேறு ஒரு நபராக இருக்க வேண்டும்” என்ற சொன்ன மஹுவா, தான் சொன்னதை மெய்ப்பிக்க வங்கிப் பணியைத் துறந்தார். 2009-ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர், ராகுல் காந்தியின் நம்பிக்கைபெற்ற அரசியல் பேச்சாளராக விளங்கினார். ‘‘காங்கிரஸின் கை சாதாரண மக்களின் கை. காங்கிரஸ், பொதுமக்களின் சிப்பாய்” என்ற கோஷத்தை வங்க இளைஞர்களிடம் பிரபலப்படுத்தியதில் மஹுவாவுக்குப் பெரும்பங்கு உண்டு.
பின்பு உட்கட்சிப் பூசலால் காங்கிரஸில் இருந்து விலகி மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அக்கட்சியின் சார்பில் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றார். கட்சி சார்பாகத் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொள்ளும் மஹுவா, கச்சிதமான வாதத்தால் எதிர் தரப்பினரைத் தடுமாறச் செய்பவர்.
கட்டிப்போட்ட முதல் பேச்சு
நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மஹுவா, ஜூன் 25 அன்று நாடாளுமன்றத்தில் தன் முதல் பேச்சை நிகழ்த்தினார். அரசியல் அனுபவம் குறைவு, அதுவும் பெண் என்பதால் அவரது பேச்சும் சுவாரசியமில்லாமல் பெயரளவுக்குத்தான் இருக்கும் எனப் பலரும் நினைத்தனர். ஆனால், மஹுவாவின் முதல் நாடாளுமன்ற உரை பக்குவமடைந்த பேச்சாளரின் உரைபோல் அமைந்திருந்தது. கேட்டோரை ஈர்க்கும் வகையிலும் கேளாதோரையும் கேட்கத் தூண்டும் வகையிலும் பேசினார் மஹுவா.
நாடு பாசிசத்தை நோக்கி சென்றுகொண்டிருப்பதற்கான ஏழு முக்கிய அம்சங்களைத் தன் பேச்சில் அவர் சுட்டிக்காட்டினார். “முதலாவதாக இந்திய நாட்டை தேசியவாதம் என்ற பெயரில் பிளவுபடுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன” என்றார் அப்போது கூச்சலிட்ட ஆளுங்கட்சியினரைத் ‘தொழில்முறை ஹேக்கர்கள்’ எனக் குறிப்பிட்டு அவர்களின் விமர்சனங்களைப் புறந்தள்ளினார்.
“அமைச்சர்கள் தங்களுடைய கல்விச் சான்றிதழைக்கூடக் காட்ட முடியாத தேசத்தில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இங்கே வாழ்ந்துவரும் மக்களிடம் அவர்கள் இந்நாட்டின் குடிமக்கள்தான் என்பதற்கான ஆதாரங்களைக் கேட்பது எந்தவகையில் நியாயம்?” என்றார்.
“இரண்டாவதாக, நாட்டில் வெறுப்பு அரசியல் அதிகரித்துள்ளது. 2014 முதல் தற்போதுவரை சிறுபான்மையினர், தலித் மக்கள் மீதான் வன்முறை அதிகரித்துள்ளது. கும்பல் வன்முறையால் ராஜஸ்தானைச் சேர்ந்த பெஹ்லு கான், சமீபத்தில் ஜார்க்கண்டில் அடித்துகொல்லப்பட்ட தப்ரேஸ் அன்சாரி ஆகியோரே இதற்குச் சாட்சி. இந்தப் பட்டியல் முடிவில்லாமல் நீண்டுக்கொண்டேபோகிறது” என்றார்.
பொய் உண்மையாகுமா?
நாட்டின் முக்கியமான ஐந்து ஊடகங்களை ஆளும் அரசு தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதை மூன்றாவது காரணமாக மஹுவா குறிப்பிட்டார். “இந்த ஊடகங்கள் விவசாயிகள் தற்கொலை பற்றியோ வேலையின்மை குறித்தோ விவாதிப்பதில்லை. அதற்கு மாறாக அரசின் பொய்யான வாக்குறுதிகளை மீண்டும் மீண்டும் மக்களிடம் சேர்த்து அவர்களை நம்பவைக்க முயல்கின்றன. இதற்காகவே செய்தி, ஒளிபரப்புத் துறையில் 120 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அரசுக்கு எதிரான கருத்துகளை ஊடகங்கள் வெளியிடுகின்றனவா என்பதைக் கண்காணிக்க இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நான்காவது, சிறு குழந்தைகளைப் பயமுறுத்த பூதம் வந்துவிடும் என அம்மா சொல்லுவார். ஆனால், தற்போது ஒட்டுமொத்த நாடும் அடையாளம் தெரியாத பூதங்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது. ராணுவத்தினரின் மரணம் 106 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால், அவர்களின் தியாகங்கள் ஒற்றை மனிதரின் சாதனையாக விளம்பரப்படுத்தப்படுகிறது” என்ற மஹுவா, வலிந்து திணிக்கப்படும் மதவாதக் கருத்துகளை ஐந்தாவது காரணமாகக் குறிப்பிட்டார்.
இருண்ட காலத்தை நோக்கி
“குடியுரிமை மசோதா போன்றவை ஒரே ஒரு சமூகத்தைக் குறிவைத்துதான் கொண்டுவரப்படுகின்றன. நாட்டிலுள்ள 8.12 கோடி ஏக்கர் நிலத்தைவிட ஆளுங்கட்சினருக்கு (அயோத்தியின்) 2.77 ஏக்கர் நிலம்தான் முக்கியமானதாக உள்ளது. ஆறாவது, மாற்றுக் கருத்து உள்ளவர்கள் மீதான வன்முறை. அரசியலமைப்புச் சட்டத்தின்படி அறிவியல் கண்டுபிடிப்புகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். ஆனால், அறிவியல் கண்டுபிடிப்புக்கான ஊக்கத்தொகைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
பள்ளிப் பாடப்புத்தகத்தில்கூடப் புராணக் கதைகள் அறிவியலாகக் கற்பிக்கப்படுகின்றன. இதனால் நாடு மீண்டும் இருண்ட காலத்துக்குச் சென்றுவிடும் அபாயம் உள்ளது. ஏழாவது, நம்பகத்தன்மை கொண்ட தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் அழிக்கப்படுகிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்றப்படுகின்றனர். நடந்து முடிந்த 17-வது நாடாளுமன்றத் தேர்தலில் மட்டும் 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. இதில் 27 ஆயிரம் கோடி ரூபாயை பாஜகவினர் செலவிட்டுள்ளனர். இங்கு நான் சுட்டிக்காட்டிய ஏழு அம்சங்கள் பாசிசத்துக்கான அறிகுறிகளாக அமெரிக்காவின் ஹோலோகாஸ்ட் நினைவு அருங்காட்சியகச் சுவரொட்டியில் இடம்பெற்றவை. தற்போது இந்தியாவிலும் பாசிசத் தன்மை அதிகரித்துவருகிறது. இந்த நாடாளுமன்றத்தில் உள்ள அனைவரும் இந்த பாசிச போக்குக்கு எதிராக அணிதிரள வேண்டியது அவசியம். 17-வது நாடாளுமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாம் வரலாற்றில் எந்தப் பக்கம் நிற்கப்போகிறோம் என்பதைத் தீர்மானிக்க வேண்டியது அவசியம்” என்றார் மஹுவா. இவருடைய பேச்சுக்குப் பல தரப்பிலிருந்து வாழ்த்தும் விமர்சனமும் வந்தவண்ணம் உள்ளன. மேற்கு வங்கத்தை ஆளும் திரிணமுல் கட்சியினர், அங்குள்ள இடதுசாரி இயக்கங்கள் மீது நடத்தும் வன்முறைகள் மஹுவா குறிப்பிட்ட பாசிசத்துக்கான வரையறைக்குள் வராதா என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT