Published : 25 May 2014 02:19 PM
Last Updated : 25 May 2014 02:19 PM

வீட்டில் இருக்கிறது மாற்றத்துக்கான சாவி

இந்தியச் சமூகத்தில் பெண்களின் நிலை என்ன? கிராமமோ, நகரமோ படித்த பெண்கள் அலுவலக வேலைக்குச் செல்கிறார்கள். படிக்காதவர்கள் கூலித் தொழிலாளிகளாகப் பாடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் இல்லத்தரசி என்னும் முழுநேரப் பணியில் இருக்கிறார்கள். சிலர் அரசியலிலும் களம் காண்கிறார்கள்.

உழைக்கும் மகளிர்

இன்று நாடு முழுவதும் பேசப்படுகிற ‘வளர்ச்சி’யில் இவர்களுக்கும் பங்கு இருக்கிறது என்பதை இந்தப் பெண்கள் அனைவரும் உணர்வார்களா? இந்திய பொருளாதாரத்தைப் பிரதிபலிக்கும் ரூபாய் நோட்டுகளின் ஒவ்வொரு பைசாவிலும் இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் சுள்ளி பொறுக்கிக்கொண்டிருக்கிற பெண்ணுக்கும் பங்கு இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியுமா? இவர்கள் அனைவருக்கும் அனைத்து இடங்களிலும் சமநீதியும், சமஉரிமையும் கிடைக்கிறதா? குறைந்தபட்சம் இவையெல்லாம் தங்கள் உரிமை என்பதாவது இந்தப் பெண்களுக்குத் தெரியுமா? இப்படி நீண்டுகொண்டே போகிற கேள்விகளுக்குப் பதில் தேடும் பணியில் இருக்கிறார் வஹிதா நிஸாம். ஏ.ஐ.டி.யு.சி-யின் தேசியச் செயலாளராகவும் அகில இந்திய உழைக்கும் மகளிர் அமைப்பின் தேசிய அமைப்பாளரகவும் இருக்கிறார். ஏ.ஐ.டி.யு.சி சார்பில் வெளிவரும் Working Women என்ற காலாண்டு இதழின் ஆசிரியரும் இவரே.

ஆடு மேய்க்கும் பெண்ணோ, அடுக்களையில் சமையல் செய்யும் அம்மாவோ அனைவருமே உழைக்கும் மகளிர்தான் என்று சொல்கிறார் வஹிதா. அதைப் பற்றிய புரிதலை அந்தப் பெண்களுக்கு உருவாக்குவதோடு, அமைப்புசாரா உழைக்கும் மகளிருக்கான உரிமையைப் பெற்றுத் தருவதற்காக அரசாங்கத்திடம் தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறார்.

விழுப்புரம் மாவட்டத்தில் நடுத்தர முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த வஹிதாவுக்கு, வீடுதான் மாற்றுச் சிந்தனையை வளர்த்தது.

பாதை போட்ட குடும்பம்

“என் அப்பா அரசுப் பள்ளி ஆசிரியர். அம்மா இல்லத்தரசி. பள்ளி விடுமுறை நாட்களில் கடலூர் பக்கத்தில் இருக்கும் நெல்லிக்குப்பம் கிராமத்தில் இருக்கும் எங்க அத்தை வீட்டுக்குப் போவோம். அத்தை ஷாஜாத்தியும், மாமா கோவிந்தராஜும்தான் என் மாற்றத்துக்கான ஆரம்பப் புள்ளி. மாமா, மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்தார். அவர் பணிபுரிந்த நிறுவனத்தின் தொழிலாளர் சங்கத்திலும் பொறுப்பில் இருந்தார். அவரைப் பார்க்க தொழிலாளர்கள் அடிக்கடி வீட்டுக்கு வருவார்கள். அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருப்பேன். அத்தை ஜனநாயக மாதர் சங்கத்தில் இருந்தார். சங்கத்தின் உறுப்பினர் படிவங்களையும், சந்தா படிவங்களையும் எடுத்துக்கொண்டு வீடு வீடாக அத்தையுடன் செல்வேன். ஒவ்வொரு ஏரியாவிலும் ரேஷன், தண்ணீர் போன்றவை தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கிறதா என்று அத்தை கேட்டு வரச் சொல்வார். பள்ளி வயதில் அப்படிச் செய்வது எனக்குப் பெருமிதமாக இருந்தது. அவர்களோடு சேர்ந்து தேர்தல் பிரசாரத்துக்குக் கிளம்பிவிடுவேன். மாமாவை எல்லோரும் ‘காம்ரேட்’ என்றுதான் சொல்வார்கள். அர்த்தம் புரியாத வயதிலேயே அந்த வார்த்தை மேல் ஈர்ப்பு ஏற்பட்டது. அர்த்தம் புரிந்தபோது எனக்கான களம் எது என்பது புரிந்தது” என்று பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார் வஹிதா.

பார்வையின் விசாலம்

மருத்துவம் படிக்க ஆசைப்பட்டவருக்குக் குடும்பச்சூழலும் வறுமையும் தடை போட, பி.எஸ்சி. நியூட்ரிஷியன் படித்திருக்கிறார். கல்லூரியில் படிக்கும்போது இவர் களப்பணிகளில் ஈடுபடுவது தெரிந்ததும் குடும்பத்தில் கண்டிப்பு எழுந்திருக்கிறது. இருந்தும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இவருடைய மாமா மகளுடன் சேர்ந்து சில கூட்டங்களுக்குச் சென்றிருக்கிறார். மேற்படிப்பைத் தொடர முடியாமல் வேலைக்குப் போக வேண்டிய சூழல் உந்தித்தள்ள, 1987-ல் ஆந்திரா வங்கியில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். அங்கே ஏ.ஐ.பி.ஏ-ல் உறுப்பினராகச் சேர்ந்த பிறகு வஹிதாவின் பார்வையும் பயணமும் விசாலமாயின.

அலங்காரப் பதுமைகளா பெண்கள்?

“1991-ல் புதிய பொருளாதாரக் கொள்கையை அமல்படுத்தினார்கள். அது சாதாரண மக்களை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்று தெரிந்துகொள்வதற்காகப் பல விஷயங்களைப் படிக்க நேர்ந்தது. பிறகு கம்யூனிஸ்ட் கட்சியின் மகளிர் பிரிவில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தபோது அரசியல் ரீதியான அணுகுமுறை குறித்த தெளிவு ஏற்பட்டது. புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவாகச் சந்தையில் குவிந்த அழகு சாதனப் பொருட்கள் பெண்களை அலங்காரப் பொருளாக முன்னிலைப்படுத்துவதை எதிர்த்து குரல் கொடுத்தோம். ஏ.ஐ.டி.யு.சி-ல் இணைந்த பிறகு அமைப்புசாரா பெண் தொழிலாளர்களுக்காகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்” என்று சொல்லும் வஹிதா, பெண்களை இரண்டாம் பாலினமாக நடத்துவது தவறு என்கிறார்.

பலம் நிறைந்தவர்கள் பெண்கள்

“உடலால் ஆண்களைவிட பெண்கள் பலவீனமானவர்கள் என்ற கருத்து காலங்காலமாக மக்கள் மனதில் திணிக்கப்பட்டுவருகிறது. பெண்ணுக்கும் ஆணுக்கும் உடல்ரீதியாகச் சில வேறுபாடுகள் உண்டு. ஆனால் பருவமடைதல், குழந்தைப் பேறு, மெனோபாஸ் போன்ற எத்தனையோ உடலியல் மாற்றங்களைப் பெண்கள் தாங்கிக்கொள்கிறார்கள். இவற்றோடு வரும் வலியையும் பொறுத்துக்கொள்கிறார்கள். வீடு, அலுவலகம் என இரண்டு இடங்களிலும் தங்கள் உழைப்பைக் கொடுக்கிறார்கள். இத்தனை வேலைகளைச் செய்யும் பெண்களை, வலி சுமக்கும் பெண்களை, எப்படி உடல்ரீதியாக பலவீனமானவர்கள் என்று சொல்லலாம்? சொல்லப் போனால் ஆண்களைவிட அவர்களுக்குப் பலம் அதிகம். ஆனால் பெண்ணுக்கு என்று தனிப்பட்ட அடையாளம் எதுவும் இங்கே இல்லை. இன்னாரின் மகளாகவோ, மனைவியாகவோ, தாயாகவோ மட்டும் பெண் அறியப்படுகிறாள். பெண்ணுக்குப் பாதுகாப்பு தருகிறோம், பெருமைப்படுத்துகிறோம் என்று சொல்லியே அவளை அடிமையாக்கிவிட்டோம். இந்த நிலையை மாற்றி ஆணும், பெண்ணும் சமம், ஆணுக்குரிய உரிமைகள் அனைத்தும் பெண்ணுக்கும் உண்டு என்ற தெளிவை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் எங்கள் நோக்கம். அதில் வெற்றியும் பெற்று வருகிறோம்” என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்.

தேவை சமநிலை

பெண்களுக்குப் பொருளாதார சுதந்திரம் மிக அவசியம் என்கிறார் இவர். படிப்பறிவின்மை, அதனால் ஏழ்மை, ஏழ்மையால் தொடரும் படிப்பறிவின்மை என்ற சங்கிலிக்குள் இன்று இந்தியப் பெண்கள் பலர் சிக்கிக் கிடக்கிறார்கள். அதில் இருந்து மீண்டு கல்வியும், வேலைவாய்ப்பும் பெறும்போது ஓரளவுக்கு ஆண்-பெண் சமநிலையை எதிர்பார்க்கலாம் என்கிறார். வேலை தேடி நகரங்களுக்குக் குடிபெயரும் பெண்களின் அவலநிலையையும் பதிவுசெய்கிறார்.

“வீட்டு வேலை செய்யும் பெண்களும் தொழிலாளர்கள்தான். ஆனால் தமிழகத்தில் அவர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம்கூட நிர்ணயம் செய்யப்படவில்லை. அதை வலியுறுத்தி மனு கொடுக்கச் சென்ற எங்களிடம், ‘எங்க வீட்ல வேலை பார்க்கிற அம்மா பைக்ல வந்துட்டு சும்மா ரெண்டு வேலைய செய்துட்டு ஹாயா கிளம்பிடுவாங்க. அவங்களே என்னைவிட அதிகமா சம்பாதிப்பாங்க’ என்று சிரித்துக்கொண்டே சொல் கிறார் ஒரு அமைச்சர். இப்படிப் பொறுப்பற்றவர்களின் கையில் இருக்கும் பதவியால் என்ன மாற்றத்தைக் கொண்டுவர முடியும்?” என்று கேட்கும் வஹிதா, பெண்களுக்குப் பணியிடப் பாதுகாப்பு இப்போதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது என்கிறார்.

குடும்பத்தில் தொடங்கும் மாற்றம்

பெண்களை இரண்டாம் பட்சமாக நடத்துகிற ஆண்கள் குற்றவாளிகள் அல்ல. அவர்கள் மனதில் புரையோடிக் கிடக்கிற ஆணாதிக்க மனோபாவம்தான் அவர்களை அப்படிச் செய்யத் தூண்டுகிறது. அதை எப்படி களைவது? குடும்பங்களில் இருக்கிறது அந்த மாற்றத்துக்கான திறவுகோல் என்று தீர்வு சொல்கிறார் வஹிதா.

பெண்களை இரண்டாம் பட்சமாக நடத்துகிற ஆண்கள் குற்றவாளிகள் அல்ல. அவர்கள் மனதில் புரையோடிக் கிடக்கிற ஆணாதிக்க மனோபாவம்தான் அவர்களை அப்படிச் செய்யத் தூண்டுகிறது. அதை எப்படி களைவது? குடும்பங்களில் இருக்கிறது அந்த மாற்றத்துக்கான திறவுகோல் என்று தீர்வு சொல்கிறார் வஹிதா.

“என்னைச் சுற்றி இருக்கிறவர்களுக்கும் என் சொந்தங்களுக்கும் என் இரு மகன்களும் எப்போதும் பாவம்தான். ‘பாவம் அவனுங்க, தனியா விட்டுட்டு வெளியூருக்குக் கிளம்பிடுறே’ன்னு என் அம்மாவே அடிக்கடி சொல்லுவாங்க. என் மகன்களும் சில சமயம், ‘மத்த அம்மா எல்லாம் விதவிதமா சமைச்சு கொடுத்தனுப்பறாங்க’ என்று அழுதது உண்டு. என்னால் முடிந்தவரை என் நிலையை அவர்களுக்கு உணர்த்தியிருக்கிறேன். இதோ, மகன்கள் இருவரும் வளர்ந்த நிலையில் என்னைப் பெருமிதமாகவே பார்க்கிறார்கள். போன் எடுக்க முடியாத அளவுக்கு நான் சோர்ந்து போனாலும், ‘உன்னால் முடியும்மா. ஏதோ ஒரு தேவைக்காகத்தானே உனக்கு போன் செய்யறாங்க. எடுத்துப் பேசு’ என்று உற்சாகம் தருகிறார்கள். ஆண்மகன்களின் இந்தப் புரிதல் ஒவ்வொரு வீட்டிலும் நிச்சயம் தேவை” என்கிறார் வஹிதா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x