Published : 18 May 2014 03:58 PM
Last Updated : 18 May 2014 03:58 PM

பெண்ணியம் பேசிய பேரறிவு

கல்விச் சாலையின் நிழலில்கூட ஒதுங்காமல், அறிவுச் சுடராக ஒளிர்ந்த மேதைகளின் பட்டியல் மிகவும் பெரியது. அந்தப் பட்டியலில் முக்கியமானவர் கணித மேதை மேரி சோஃபி ஜெர்மெய்ன்.

பேங்க் ஆஃப் ஃபிரான்சில் இயக்குநராக இருந்த அம்புரோஸ் ஃபிரான்ஸுவாஸுக்கு மகளாக 1776-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி சோஃபி பிறந்தார். பிரெஞ்சுப் புரட்சியின் தொடக்க காலகட்டமான அன்றைய சூழலில் பெண்கள் கல்வி கற்க அனுமதி இல்லை. ஆனாலும், சோஃபி சுயமாக மொழியைக் கற்றுக்கொண்டார்.

அம்புரோஸ் தனது வீட்டில் மிகப் பெரிய நூலகம் ஒன்றை அமைத்திருந்தார். அதனால் சிறு வயது முதலே நிறைய புத்தகங்களைப் படிக்கும் வாய்ப்பு சோஃபிக்கு வாய்த்தது. குறிப்பாக ழீன் எடினோ மாண்டுக்லே எழுதிய ஹிஸ்டரி ஆஃப் மேத்தமேடிக்ஸ் நூலை விரும்பிப் படித்தார். அதில்தான் ஆர்க்கிமிடிஸின் துயர மரணம் குறித்து அவர் அறிந்துகொண்டார். தன்னைக் கொல்ல வந்தவனைக்கூட கவனிக்க முடியாத அளவுக்கு கணிதம் அத்தனை சுவாரசியமானதா என்று வியப்படைந்த சோஃபி, அதன் பிறகு கணித நூல்களை வாசிக்கத் தொடங்கினார்.

1794-ம் ஆண்டு பாரீஸில் தொழில்நுட்பக் கல்லூரி தொடங்கப்பட்டது. ஆனால், பெண் என்கிற காரணத்தால் சோஃபியைக் கல்லூரியில் சேர்க்க மறுத்துவிட்டது நிர்வாகம். சோர்ந்து போயிருந்த சோஃபிக்கு ஒரு வழி கிடைத்தது. வீட்டிலிருந்தபடியே கற்கும் பாடத்திட்டத்தில் சேர்ந்திருந்த ஆண்டனி அகஸ்ட் பிளாங்க் என்கிற மாணவன் சில காரணங்களால் பாரீஸை விட்டு வெளியே செல்ல நேரிட்டது. அதையறிந்த சோஃபி அவனது பெயரில் பாடத்திட்டங்களைப் பெற்று கற்கத் தொடங்கினார்.

அட்ரின் மேரி லெகந்தர் என்பவர் எழுதிய நூல் ஒன்றில் ஃபெர்மட் எண்ணியல் தேற்றத்தின் இறுதி சமன்பாட்டை (FLT) தீர்க்கவே முடியாது என்று குறிப்பிட்டிருந்தார். சோஃபி அதைச் சவாலாக எடுத்துக்கொண்டு, அதைத் தீர்க்கும் வழியை கண்டுபிடித்தார். Xn + Yn = Zn என்கிற சமன்பாட்டுக்கான தீர்வுதான் கணித உலகம் சோஃபியைத் திரும்பிப் பார்க்கக் காரணமாக அமைந்தது.

பிற்காலத்தில், உலோகங்களின் நீட்சி குறித்த அவரது கணித நிரூபணங்கள் அவரைப் பற்றிய மதிப்பை உயர்த்தின. அவருக்கு பிரான்ஸின் புகழ்பெற்ற இன்ஸ்டிடியூட் ஆஃப் அகாடமி அமைப்பில் உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்பட்டது. அந்த அமைப்பின் முதல் பெண் உறுப்பினர் சோஃபிதான். இதைத் தவிர அவருக்கு எவ்வித கௌரவமும் அவர் உயிருடன் இருக்கும்வரை வழங்கப்படவில்லை.

திருமணமே செய்துகொள்ளாமல் கணித ஆய்வுகளிலேயே தனது வாழ்க்கையைச் செலவிட்ட சோஃபி, இறுதிக் காலத்தில் புற்றுநோயால் நலிவடைந்தார். 1831-ம் ஆண்டு ஜூன் மாதம் 27-ம் தேதி அவர் காலமானார். அவர் இறந்து 6 ஆண்டுகளுக்குப் பின் காடிங்கன் பல்கலைக்கழகம் சோஃபிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

பெண்களுக்கான உரிமைகளுக்காகப் பலரும் பல கோணங்களில் போராடியிருக்கிறார்கள். சோஃபி அந்தப் போராட்டத்துக்குத் தனது பேரறிவைப் பயன்படுத்திக்கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x