Published : 30 Jun 2019 11:12 AM
Last Updated : 30 Jun 2019 11:12 AM

வாசிப்பை நேசிப்போம்: நம்பிக்கை தரும் வாசிப்பு

பள்ளிப் பருவத்திலிருந்தே பத்திரிகைகளையும் பொது அறிவை வளர்க்கக்கூடிய ‘துளிர்’ மாத இதழையும் வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டது. கல்லூரி சென்ற நாட்களில் அறிவியலின் நவீன நுட்பங்கள் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ளும் ஆவலில் ஆங்கிலப் பத்திரிகைகளைப் படிக்கத் தொடங்கினேன். ஆனால், ஆறு மாதங்களுக்கு மேல் பத்திரிகையைத் தொடர்ந்து வாங்க முடியாத அளவுக்குப் பொருளாதாரச் சிக்கல். அதற்காக எதையும் படிக்காமல் இருக்க முடியாதே. கடை களிலிருந்து வீட்டுக்கு எந்தப் பொருளைக் காகிதப் பொட்டலத்தில் வாங்கிவந்தாலும் முதல் வேலையாக அதைப் பிரித்துப் படித்துவிடுவேன். சிறு துண்டு எங்கே கண்ணில் பட்டாலும் அதை எடுத்து வாசிப்பேன். இளைஞர் பணிக்குழுவில் இணைந்த நாள்முதல் வழிகாட்டிப் புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அடிக்கடி கூறுவார்கள். அதன்படி கட்டுரைகள், சிறுகதைகள், அரசியல் - சமூக விழிப்புணர்வு வார இதழ்கள், பெண்கள் குறித்த கட்டுரைகள் ஆகியவற்றைத் தொடர்ந்து வாசித்துவருகிறேன்.

ச. தமிழ்ச்செல்வனின் சிறுகதைகள்,  பொன்னியின் செல்வன் போன்ற நூல்களைத் திரும்பத் திரும்ப வாசித்து வருகிறேன். மனம் சோர்ந்துவிடுகிற போதெல்லாம் புத்தகம் வாசித்து உற்சாகத்தை மீட்டுக்கொள்கிறேன். முன்பு பொழுதுபோக்காக இசை கேட்பேன். இன்று அதையும் வாசிப்பே வாங்கிக்கொண்டு விட்டது. வேலை கிடைக்காமல் மனம் உடைந்த வேளையில் வாசிப்பே எனக்குத் தோள்கொடுத்தது. வாசிப்பது எனக்குள் தன்னம்பிக்கையை ஏற்படுத்துகிறது. என்னுடைய குடும்பத்தினருக்கும் நண்பர் களுக்கும் வாசிப்பின் மேன்மையை எடுத்துக் கூறி வருகிறேன். வாழ்நாள் முழுவதும் வாசிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.

- அ. அபிஷா ராஜூ,  நாகர்கோவில்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x