Published : 09 Jul 2017 01:08 PM
Last Updated : 09 Jul 2017 01:08 PM
உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்று பள்ளியில் பாடம் படித்துவிட்டு வரும் குழந்தை வீட்டுக்கு வருகிறது. தொலைக்காட்சியில் நகைச்சுவை என்ற பெயரில் பருமனாக இருக்கிறவர்களையும் உயரத்தில் குறைந்தவர்களையும் விதவிதமாகக் கிண்டலடித்து, அடித்து உதைப்பதையும் அவற்றைப் பார்த்து வீட்டில் இருப்பவர்கள் சிரிப்பதையும் பார்க்கிறது. அப்போது குழந்தைக்குப் பள்ளியில் படித்த பாடம் மறந்துவிடுவது இயல்புதானே? சினேகாவின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பிரச்சினையும் இதைப்போலத்தான்.
சினேகா 30 வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் பெண். அவர் என்னை சந்தித்தபோது இரண்டு விதமான பிரச்சினைகளை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.
ஆண்கள் மீது கோபம்
சினேகாவை அதுவரை ஆறு, ஏழு பேர் பெண் பார்த்துவிட்டுச் சென்றிருக்கின்றனர். ஆனால் எல்லா இடங்களிலிருந்தும் ஏதோ ஒரு காரணத்துக்காக இவரைத் தவிர்த்திருக்கின்றனர்.
“இன்னும்கூட மாதத்துக்கு ஒரு வரன் வந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். நான் என்ன காட்சிப் பொருளா? இந்த ஆம்பளைங்களை நினைச்சாலே பத்திக்கிட்டு வருது” என்றார். இது ஒரு பிரச்சினை.
தன் மீதே வெறுப்பு
“என் நிறம், உயரம், உடல் வாகு, தலை முடி… எதுவுமே நல்லா இல்லை. எனக்கே என்னைப் பிடிக்கல. என்ன பண்றதுன்னே தெரியல” என்றார். இது இன்னொரு பிரச்சினை.
இரண்டில் அவர் முக்கியமாக நினைக்கும் பிரச்சினையைப் பற்றிப் பேச முடிவெடுத்தேன். தன்னையே வெறுப்பதைப் பற்றிப் பேசுவதை சினேகா விரும்பினார்.
தன்னையே வரைந்த ஓவியம்
ஏறக்குறைய 10, 12 அமர்வுகள் சினேகாவுடன் நடந்தன. என் கணிப்பில் சினேகா மிகவும் புத்திசாலிப் பெண். எந்தவொரு வேலையையும் மிகவும் கவனமாக, கச்சிதமாக, குறித்த நேரத்தில் நேர்த்தியாகச் செய்துமுடிக்கும் திறமை அவரிடம் இருந்தது. ஆனால் அவரது புறத் தோற்றத்தைக் குறித்த மதிப்பீடு மிகவும் மோசமாக இருந்தது. சினேகா மிகச் சிறந்த ஓவியரும்கூட என்பதால் ஒரு அமர்வில் எதுவும் பேசாமல் அவரையே ஓவியமாக வரையச் சொன்னேன்.
சினேகா பார்த்து வரைவதற்கு வசதியாக அவருக்கு எதிரில் ஒரு நிலைக் கண்ணாடியை வைத்திருந்தேன். ஒரு மணி நேரம் நாங்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அவர் வரைந்து முடித்த ஓவியத்தை என்னிடம் காண்பித்தார். அந்த ஓவியத்தைப் பார்த்ததும் மின்சாரம் பாய்ந்ததுபோல் ஒரு அதிர்ச்சியை நான் அனுபவித்தேன். தன்னை அவ்வளவு கொடூரமாக அவர் ஓவியமாக வரைந்திருந்தார்.
சிரிக்கும் கண்கள். சற்றே பூசினாற்போல் உடல் வாகு. அடர்ந்த சுருண்ட கேசம். சிரித்தால் மின்னல் வெட்டியதுபோல் பல் வரிசை. வசீகரிக்கும் கன்னக் குழி. என் பார்வையில் சினேகா மிக அழகான பெண்.
அவரையே வரைந்த ஓவிய பிம்பத்துக்கும் சினேகாவுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் தெரிந்தது. அது அவரது மனதில் அவரைப் பற்றிய எண்ணத்துக்கும் யதார்த்தத்தில் அவருக்கும் உள்ள வித்தியாசம் என்பது எனக்குப் புரிந்தது.
தோழியின் அறிவுரை
சிறு வயது நினைவுகளுக்கு சினேகாவை கொண்டு சென்றபோது, பள்ளிச் சிறுமியாக இருந்த நினைவுகளை மிகவும் மகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டார். அவருடைய நெருங்கிய தோழிக்கு அவரை மிகவும் பிடிக்குமாம்.
“அப்போது சிறுமி சினேகா எப்படி இருப்பார்?” என்று கேட்டதற்கு, அதுவரை அவரிடமிருந்து வெளிப்படாத ஒரு உற்சாகத்தோடு பேசினார்.
“சிவப்பு நிறத்தில் நிறைய சதுரங்களுடன் கூடிய பள்ளி ஆடையில் குட்டி தேவதையாக இருப்பாள். அவள் சிரிக்கும்போது அவளது கன்னத்தில் அழகாகக் குழி விழும்” என்று தன்னையே வர்ணித்தார். அப்போது அவரது கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்துகொண்டிருந்தது.
அப்போதே சினேகா கொஞ்சம் பூசினாற்போல்தான் இருந்திருக்கிறார். சினேகாவுக்கு அறிவுரையாக அவருடைய தோழி எதையோ கூற, அது சினேகாவுக்குப் பிடிக்காமல் போய்விட்டது. ஆனால் அப்போதே கொஞ்சம் கவனமாக இருந்திருந்தால், தோழி சொன்னதைக் கேட்டிருக்கலாமோ என்று அதன்பின் பல சந்தர்ப்பங்களில் நினைத்து நினைத்து ஏங்கியிருக்கிறார் சினேகா.
கால ஓட்டத்தில் தோழி சென்ற இடம் தெரியவில்லை. நட்பு சென்ற இடம் தெரியவில்லை. ஆனால் உணவு விஷயத்தில் தோழி சிறுவயதில் எச்சரித்தது, அதைத் தான் கடைப்பிடிக்காமல் போனது மட்டும் ஒரு வடுவாக சினேகாவின் மனதில் தங்கிவிட்டது.
“காரணமில்லாமல் உங்கள் மீது நீங்களே ஏன் வெறுப்பை வளர்த்துக்கொள்ள வேண்டும்? அன்றைக்கு உங்கள் தோழி சொன்னதை புரிந்துகொள்ள முடியாத மனப் பக்குவத்தில் நீங்கள் இருந்திருக்கலாம். அன்று அவர் சொன்னதைப் பொருட்படுத்தாமல் இருந்ததை நினைத்து இப்போது வருந்துகிறீர்கள். ஆனால் இப்போது உங்களை குறைசொல்பவர்களின் பேச்சை நீங்கள் பொருட்படுத்துவதுதானே உங்கள் பிரச்சினைக்கு அடிப்படைக் காரணம்?” என்றேன்.
“உண்மைதான். இனி யாராவது என்னுடைய உடல் பருமனைப் பற்றியோ நிறத்தைப் பற்றியோ பேசினால், அதை நான் கண்டுகொள்ளப் போவதிலை. அது போன்ற பேச்சை தவிர்க்கச் சொல்வேன்” என்றார்.
உருவத்தை வைத்து ஒருவரைப் பற்றி முன்தீர்மானிப்பது எப்படித் தவறோ, அதைவிட பெரிய தவறு நம் தோற்றத்தை நாமே மதிக்காமல் இருப்பது. ஆரோக்கியமும் அழகும் தோற்றத்திலோ நிறத்திலோ இல்லை என்பதை சினேகாவுக்குப் புரியவைத்தேன். தன்னுடைய தோற்றத்தை ஏற்றுக்கொள்வது, தகுந்த உடற்பயிற்சி, உணவு முறைகள் போன்றவற்றைப் பற்றி தொடர்ந்து அவரிடம் பேசிவருகிறேன்.
கட்டுரையாளர், மனநல ஆலோசகர்
தொடர்புக்கு: shobana.jayaraman@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT