Published : 16 Jul 2017 12:00 PM
Last Updated : 16 Jul 2017 12:00 PM
சமீபத்தில் புவனேஸ்வர் நகரத்தில் நடந்துமுடிந்த 22-வது ஆசியத் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் பிரகாசித்தவர்களில் இந்திய இளம் தடகள வீராங்கனை பியூ சித்ராவின் வெற்றி தனித்துவம் வாய்ந்தது. பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சித்ரா 4 நிமிடங்கள் 17.92 நொடிகளில் இலக்கை அடைந்து தங்கப் பதக்கத்தை வென்றார். எல்லைக்கோட்டைத் தொடும்போது பெய்த மழைகூட, அவரது வெற்றியைத் தடுக்க முடியவில்லை.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் முண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இவர். கூலி வேலை செய்யும் ஏழைப் பெற்றோரின் நான்கு குழந்தைகளுள் ஒருவர். இந்த வெற்றியின் மூலம் ‘குவீன் ஆப் ஆசியா இன் தி மைல்’ பட்டத்தை வென்று, நேரடியாக உலக சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளார். தனது வெற்றிக்குப் பயிற்சியாளர் சிஜின் என்.எஸ். தான் காரணம் என்று கூறியுள்ளார். ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் வென்ற கேரளத்தைச் சேர்ந்த மூன்றாவது தடகள வீராங்கனை என்ற பெருமையை சித்ரா பெற்றுள்ளார்.
தனியாக வாழும் பெண்ணும் தத்தெடுக்கலாம்
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், நாற்பது வயதை எட்டிய தனித்து வாழும் பெண்கள் முன்னுரிமையுடன் குழந்தைகளைத் தத்தெடுக்கலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குழந்தையை வளர்க்கப் போதிய பொருளாதார வசதி இருந்தால் போதும். குழந்தைகளைத் தத்தெடுப்பதற்கான காத்திருப்பு காலம் அதிகமாக இருக்கும் சூழ்நிலையில், தனித்து வாழும் பெண்களுக்கு தற்போது கிடைத்துள்ள முன்னுரிமை ஆறுதல் அளித்துள்ளது. இதற்கு முன்னர் தனித்து வாழும் ஆண்கள், பெண்கள், தன்பால் உறவாளர்கள் ஆகியோர் குழந்தைகளைத் தத்தெடுக்க முடியாத சூழல் இருந்துவந்தது. பெண்களைப் பொறுத்தவரை இந்த அறிவிப்பு ஆதரவானது என்றாலும், அரசே சில குடும்ப முறைகளுக்கு ஆதரவாகவும் வேறு சில குடும்ப முறைகளுக்குப் பாகுபாடு காண்பிப்பதாகவும் எதிர்ப்புக் குரல்களும் எழுந்துள்ளன.
ரயில் நிலையங்களில் தாய்ப்பால் அறைகள்
இந்தியாவில் நூறு ரயில் நிலையங்களில் உள்ள காத்திருப்பு அறைகளில் தாய்மார்கள் சங்கடமின்றிக் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதற்காகத் தனி அறைகள் அமைக்கப்பட உள்ளன. ஒரு சிறிய மேஜையும் நாற்காலியும் கொண்ட, சுற்றிலும் திரைச்சீலை போட்ட இடமாக அது இருக்கும். மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி, ரயில்வே அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதியதையடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வசதி நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில் நிலையங்களுக்கும் விரிவாக்கப்படும் என்றும் ரயில்வே அமைச்சகம் உறுதியளித்துள்ளது.
இந்திராவின் கதை
இறந்து முப்பது ஆண்டுகள் ஆன பின்னரும் இந்தியர்களின் நினைவில் அழியாமல் இடம்பிடித்திருக்கும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி குறித்துப் பெண் பத்திரிகையாளர் சகரிகா கோஷ், ‘இந்திரா: இந்தியாஸ் மோஸ்ட் பவர்ஃபுல் பிரைம் மினிஸ்டர்’ என்ற நூலை எழுதியுள்ளார். பாதுகாப்பு உணர்வற்ற மகள், துரோகத்துக்குள்ளான மனைவி, தேசிய நாயகி, கடுமையான சர்வாதிகாரி என்ற அட்டைப்படக் குறிப்பே புத்தகத்தின் உள்ளடக்கத்தை நமக்குச் சொல்லிவிடுகிறது. இந்திராவின் ஆளுமையை ஆண்களே அதிகமாக வடிவமைத்தனர் என்று கூறும் சகரிகா கோஷ், ஆண்களின் வெறுப்பின் மத்தியிலேயே தன்னை தக்கவைத்துக்கொண்ட சக்தி அவர் என்றும் குறிப்பிடுகிறார்.
இந்திராவின் மரணத்துக்குப் பிறகு இந்திய மக்கள் மத்தியில் அவரது செல்வாக்கு வளர்ந்துவருவதாகக் கூறும் சகரிகா, அவருடைய ராஜ்காட் நினைவிடத்தைவிட இந்திராவின் நினைவு அருங்காட்சியகத்துக்குப் பார்வையாளர்கள் அதிகமாக வருவதைச் சுட்டிக்காட்டுகிறார். வட மாநில மக்களைவிடத் தென்னிந்தியர்களிடம் இந்திராவுக்கு அதிக செல்வாக்கு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவின் முதல் திருநங்கை நீதிபதி
தேசிய லோக் அதாலத் அமர்வு நீதிபதியாக முதன்முறையாகத் திருநங்கை ஜோதியா மண்டல் மேற்கு வங்க மாநிலத்தின் உத்தர் தினஜ்பூர் மாவட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். ‘ஜட்ஜ்ஷிப் ஆன் தி டூட்டி’ என்ற சிவப்புப் பெயர்ப் பலகையுடன் கூடிய வெள்ளை காரில் அவர் நீதிமன்றத்துக்கு வந்தது, இந்தியத் திருநங்கைகள் சமூகத்தைப் பொறுத்தவரை ஒரு வரலாற்றுப் பெருமைமிக்க நிகழ்ச்சி. தெருக்களில் யாசகம் எடுத்து பின்னர் சமூகப் பணியாளராக மாறி, தற்போது நீதிபதியாக அவர் பொறுப்பேற்றிருக்கிறார். வங்கிக் கடன்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்கும் பணிகளை ஜோதியா செய்வார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT