Published : 30 Jul 2017 12:28 PM
Last Updated : 30 Jul 2017 12:28 PM
உ
த்தரபிரதேசத் தலைநகர் லக்னோவைச் சேர்ந்த பெண்கள், பாலியல் வன்முறையை எதிர்த்துப் போராட யாரையும் எதிர்பார்க்காமல் தற்காப்பு என்னும் வலிமையான ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள். 2010-ம் ஆண்டிலிருந்து இயங்கிவரும் ‘தி ரெட் பிரிகேடு’ (The Red Brigade) என்ற தன்னார்வ அமைப்பு லக்னோ சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் தற்காப்புப் பயிற்சியை வழங்கிவருகிறது.
பாலியல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் ஒன்றிணைந்து நடத்தும் இந்த அமைப்பை உஷா விஸ்வகர்மா, அஜய் பட்டேல் இருவரும் தொடங்கினார்கள். லக்னோ, கான்பூர், வாராணசி, டெல்லி, மும்பை, குருகிராம், பதோஹி உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை 16,000 பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் இந்த அமைப்பு தற்காப்புப் பயிற்சியை வழங்கியிருக்கிறது. இந்தியாவில் பத்து லட்சம் பெண்களுக்குத் தற்காப்புப் பயிற்சியளிக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு இயங்கிவருகிறது ‘தி ரெட் பிரிகேடு’.
இந்த அமைப்பின் செயல்பாடுகளைப் பற்றி கத்தார் நாட்டைச் சேர்ந்த ‘அல் ஜஸீரா’ (Al Jazeera) தொலைக்காட்சி அலைவரிசை ஆவணப்படம் ஒன்றைச் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது. ‘இந்தியாஸ் பவர் கேர்ள்ஸ்’ (India's Power Girls) என்கிற பெயரில் வெளியான இந்த ஆவணப்படம் சர்வதேசக் கவனத்தை ஈர்த்தது. பதினைந்து நிமிடங்கள் ஓடும் இந்த ஆவணப்படம், இளம்பெண்கள், பெண்கள் பாதுகாப்புக்காக ரெட் பிரிகேட் அமைப்பு எப்படிப்பட்ட போராட்டங்களை முன்னெடுக்கிறது என்பதை விளக்குகிறது.
லக்னோவில் இந்த அமைப்பு செயல்படும் மடியாவ் பகுதி, ஆறு ஆண்டுகளுக்கு முன்புவரை இளம்பெண்களுக்குப் பாதுகாப்பற்றதாக இருந்தது. இந்தப் பகுதியில் பாலியல் தாக்குதல்கள், வன்புணர்வு நிகழ்வுகள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருந்தன. இந்த அமைப்பு செயல்படத் தொடங்கிய பிறகு நிலைமை மாறியிருக்கிறது. இளம்பெண்களுக்குத் தொந்தரவு தரும் இளைஞர்களை அவர்கள் வீட்டுக்குச் சென்று இழுத்துவந்து, பொது இடத்தில் வைத்துப் பாடம் கற்பிக்கின்றனர் ‘ரெட் பிரிகேடு’ பெண்கள்.
மீள உதவுவோம்
பதினேழு வயதாகும் அஃப்ரீன் கான், ‘ரெட் பிரிகேடு’ அமைப்பின் பொறுப்பாளர்களில் ஒருவர். ஆறு வயதில் பாலியல் தாக்குலுக்குள்ளான அஃப்ரீன், இந்த அமைப்புடன் இணைந்து சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் தற்காப்புப் பயிற்சிகளை வழங்கிவருகிறார். பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தும் வீதி நாடகங்கள், பாதிக்கப்பட்ட பெண்களின் நீதிக்கான போராட்டங்கள், பிரச்சாரங்கள் போன்றவை லக்னோவில் இவரது தலைமையில் நடைபெறுகின்றன.
“ஏதாவது ஒரு பாலியல் வன்முறை வழக்கு பற்றி எங்களுக்குத் தெரிய வந்தவுடன் நாங்கள் களத்தில் இறங்கிவிடுவோம். முதலில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து, அவர்கள் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு உதவுவோம். வழக்கை நாங்களே முன்நின்று நடத்துவோம். பாதிக்கப்பட்டவர் சிறுமியாக இருந்தால், அவருடைய கல்விக்கு நாங்கள் உதவுவோம்” என்று இந்த ஆவணப்படத்தில் சொல்கிறார் அஃப்ரீன். குழந்தைப் பருவத்தில் பாலியல் தாக்குதலுக்குள்ளான வலியை அஃப்ரீனின் வார்த்தைகள் வழியே நமக்குக் கடத்துகிறது இந்த ஆவணப்படம்.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைத் தடுப்பதற்கு அரசு அதிகாரிகளிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறது இந்த அமைப்பு.
பெண்களுக்கான கழிப்பறைகளை அதிகரிப்பது, பாதுகாப்பை உறுதிசெய்யும் கண்காணிப்பு கேமராக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, இளம்பெண்களுக்குத் தற்காப்புப் பயிற்சியளிப்பது, பெண் காவலர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்றினால் பாலியல் குற்றங்கள் குறையும் என்கிறது ‘ரெட் பிரிகேடு’.
உரிய நேரத்தில் அரசும் தன் கடமையைச் செய்ய வேண்டியது அவசியம். ரெட் பிரிகேடு பற்றிய தகவல்களுக்கு: redbrigade-lucknow.org. இந்தியா’ஸ் பவர் கேர்ள்ஸ் ஆவணப்படத்தைப் பார்க்க: www.youtube.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT