Published : 09 Jul 2017 01:07 PM
Last Updated : 09 Jul 2017 01:07 PM
யாரும் பிறக்கும் நொடியில் யாராகப் போகிறோமென அறிவதில்லை. பிறந்து, வளர்ந்து, இறக்கும் வாழ்க்கையின் நடுவில் எத்தனை எத்தனை போராட்டங்களும் மாற்றங்களும் நிகழ்கின்றன! வாழ்வின் இறுதிப் புள்ளியில் நாம் யாராக மறைகிறோம் என்பதை நம் பெருவாழ்க்கைக் கதைகள் தீர்மானிக்கின்றன.
நான் எழுத்தாளர் ஆக வேண்டுமென்று ஏழாம் வகுப்பில் சலிப்பு நிறைந்த ஒரு கணக்கு வகுப்பில் தோன்றியது. பக்கத்தில் பட்டிமன்றப் பேச்சாளர் பொ.ம. ராசமணியின் மகள் சித்ரா. ஜன்னலுக்கு வெளியே ஒரு தென்னை மரம் காற்றில் அசைய, அதைப் பற்றி ஒரு சிறுகவிதை எழுதினேன். அது பிறகு குழந்தைப் பருவத்துத் தனிமை தீர அதிலேயே தஞ்சம்கொண்டேன். மனம் ஒரு தனி உலகில் சஞ்சரிக்கும், ஒரு புது உலகை உருவாக்கும் வரம் என நான் தெரிந்துகொண்டேன். சில்வியா ப்ளாத்தின் கவிதை சொல்வது போல் கண்ணை மூடினால் திறக்கும் உலகம் என் படைப்புலகம் ஆனது.
தெற்குப் பகுதியிலிருந்து எழுதவந்த பள்ளி மாணவியாக ஒரு வார இதழுக்கு என் கதையை அப்பாவின் கை பிடித்து மவுண்ட் ரோட்டைக் கடந்து கொண்டு போய் கொடுத்தது இன்னும் மனதிலிருக்கிறது. கதை வெளியான பிறகு எழுத்தின் மூலமாகக் கிடைத்த பல சொந்தங்களே இன்றும் என் வாழ்வில் குடும்ப பந்தங்களாகத் தொடர்கின்றன.
எந்தக் காலத்திலும் எழுதுவதை நிறுத்தி விடாதே என்று சொன்ன சத்தீஷ் வைத்தியநாதன் அண்ணா, சாப்பிட பணமில்லாவிட்டால்கூட என் முதல் தொகுப்பைப் போட சைக்கிள் மிதித்து கச்சேரி தெருவில் இருந்த அச்சகத்துக்குப் போய் என் முதல் சிறுகதைத் தொகுப்பை வெளிவரச் செய்த ஜெகன், வீட்டுக்கு வந்து, “நல்லா எழுதுற... எழுதுறதை விட்டுறாத” என்று சொன்ன மாலன் என்று எழுத்து இன்றுவரை தந்த உறவுகள் ஏராளம்.
நான் எழுத ஆரம்பித்த தொண்ணூறுகளில் எனக்கு வாசிப்பனுபவம் மிகவும் கம்மி. கிறிஸ்தவக் குடும்பச் சூழலில் அம்மா வாசித்த வெகுஜன இதழ்கள் மட்டுமே நான் வாசித்தவை. அத்தனை வெளிப்பழக்கம் இல்லாத சூழலில், மனதுக்கு தோன்றியதை எழுதிவந்த காலமது. ஜெகன் பல உலக இலக்கியங்கள் அறிமுகப்படுத்திய காலகட்டமும் அதுவே.
அப்போது என் அப்பாவின் சைக்கிள் தொலைந்துபோனதை வைத்து நான் ஒரு கதை எழுதினேன். அது வெளியானபோது அப்போது மதுரையில் வசித்த ஒரு எழுத்தாளர் அது நல்ல கதை என பாராட்டி எனக்குக் கடிதம் எழுதியது நன்றாக நினைவிருக்கிறது. ஒரு சிறிய தாளில் குறுகின லிபிகள் கொண்ட எழுத்து அது. பின்னர் அந்தக் கதை ஒரு தொகுப்பில் வந்தபோது ஒரு விமர்சனக் கூட்டத்தில் அதே எழுத்தாளர், வெகுஜனப் பத்திரிகையில் வந்ததால் அந்தக் கதையைத் தன்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை என்று பேசினார்.
அந்த முக்கியமான எழுத்தாளர், வெகுஜனப் பத்திரிகைகளில் தீபாவளி மலருக்காகக் கதைகள் கேட்கப்படும்போது புளகாங்கிதப்பட்டு எழுதிய கடிதங்களை நானே சில பத்திரிகை அலுவலகங்களில் பார்த்திருக்கிறேன். அந்தக் கூட்டத்தில் இன்னொரு கவிஞர் சரமாரியாகக் குடித்துவிட்டு, “மலின வெகுஜன ஊடகத்தில் எழுதுபவருக்கு என்ன விமர்சனக் கூட்டம்?” என்றார். உடனே ஒரு எழுத்தாளர் சங்கத்து முக்கியப் பிரமுகர், அந்தக் கவிஞர் தன் ‘கருத்தை’ இறுதியில் சொல்லியிருக்கலாம் என்று பேசினார்.
தமிழ் இலக்கிய அரசியலில் பெண்களின் இடத்தை மற்றவர்கள் எப்படி நிர்ணயிக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளத் தொடங்கியது அங்கிருந்துதான். இங்கிருக்கும் சாதி அரசியலை நினைத்தால் குமட்டும். ஒரு நாளிதழில் என் தொகுப்பைப் பற்றி ஒரு எழுத்தாளர் எழுதியபோது, “அவர் உங்க சாதிக்காரர்தானே. அதான் எழுதியிருக்கிறார்” என்று சொன்ன பெரும் எழுத்தாளர், இன்றும் சாதி எதிர்ப்பு மாநாடுகளில் பேசுகிறார். பரிசுகளிலோ விருதுகளிலோ விருது குழுக்களிலோ எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால் பெண்ணுக்கு அங்கீகாரம் கிடைத்தால் அதை கொச்சைப்படுத்தும் மனிதர்களுடன் எனக்கு உடன்பாடில்லை.
பெண் எழுத வருவது எத்தனை கடினமானது என்பதை இதைத் தட்டச்சு செய்யும் ஒடிக்கப்பட்ட என் வலது கை விரல்கள் அறியும். எழுதுகிற ஒவ்வொரு பெண்ணுக்குப் பின்னாலும் வெளியே சொல்லப்படாத, சொல்லப்பட்ட கதைகள் உண்டு. அதை மனிதத்தன்மையுடன் அணுகும் ஆண் எழுத்தாளர்கள் மிகச் சொற்பம். அவமானங்களை வாரியிறைப்பதன் மூலம், தகுதியில்லாத தன்மை நிறைந்த மனநிலைக்குத் தள்ளுவதன் மூலம் தனது நிலையற்ற தன்மைகொண்ட பதற்றத்தைத் தணித்துக்கொள்கிறார்கள் அவர்கள்.
ஆண் எழுத்தாளர்கள் உருவாக்கும் பீடங்கள் அவர்களைக் கடவுள் என அவர்களின் பின்னால் அலையும் கூட்டத்தை நம்பவைக்கிறது. ஜெயமோகனின் கொச்சையான கூற்றுக்கு எதிராக ஒரு அறிக்கை தயார் செய்தபோது அதில் கையெழுத்து போடாமல் விலகிய எழுத்தாளர்களுக்கான காரணங்களில் முக்கியமானது, ‘அவர் என்னை பாராட்டி எழுதிருக்கார், ‘அவரும் நானும் ஒரே சாதி.’
வெளிப்படையாக உச்சரிக்கப்படாத மனநிலைகள், பெண்கள் எழுதுவதை விரும்புவதில்லை. ஆனால் இவற்றையெல்லாம் தாண்டியே பெண்கள் இயங்க வேண்டியிருக்கிறது. அந்த மனநிலையைப் பெறுவது கடும் தவநிலைதான். திடீரென பெய்யும் மழையில் முளைத்த காளான் போல பல ‘விமர்சகர்கள்’, பெண் எழுதியது என்னும் மாயக் கண்ணாடி வைத்துப் படைப்பைப் பார்ப்பார்கள். அவையெல்லாமே கொச்சைப்படுத்தப்பட்டு இருக்கும். பதில் சொன்னால், நீ அரைக் கிழவிதானே என்பார்கள். இதை அமைதியாகப் பார்க்கும் கேவலமான கூட்டம் ஒன்று உண்டு. இன்பாக்ஸில் வந்து அவன் அப்படி சொல்லியிருக்கக் கூடாது என்பார்கள்.
விக்கிரமாதித்யன் சமீபத்தில் பெண்கள் கவிதை எழுதுவது பற்றி ஏதோ சொல்ல, சமூக வலைத்தளங்களில் கொதித்தார்கள். அவர் சொன்னதற்குப் பெண்ணியவாதிகள் பதில் சொல்லவில்லையா என்றார்கள். பின் பெண்ணியம் பற்றி விவாதிப்பார்கள். நான் ஒன்றில் மட்டும் தெளிவாகி விட்டேன். நான் எழுத வேண்டும். எழுதுவேன். எனக்கு அது மட்டுமே முக்கியம்.
அதுவே எழுதிக்கொண்டிருக்கும் எல்லாப் பெண்களுக்கும் மிக முக்கியமான கடமை.
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: dhamayanthihfm@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT