Published : 16 Jul 2017 11:57 AM
Last Updated : 16 Jul 2017 11:57 AM
செங்கல், மணல், சிமென்ட் போன்றவற்றால் ஆன கட்டிடம், வீடாக உருமாறுவதற்கு அன்பு அவசியம் தேவை.சிலரது வீட்டுக்குள் நுழைந்தால் வாஷிங் மெஷின் உயரத்துக்குத் துணிகள் குவிந்துகிடக்கும். படுக்கை அறை முழுவதும் பென்சில், சாக்பீஸில் சுவர் ஓவியங்கள் பார்த்துச் சிரிக்கும். கிச்சனில் இருக்க வேண்டிய டீஸ்பூன், டீ வடிகட்டி, இடுக்கி எல்லாம் வரவேற்பறையில் இறைந்து கிடக்கும். ஹாலில் இருக்கவேண்டிய டிவி ரிமோட்டோ கிச்சன் அலமாரியில் தஞ்சமடைந்திருக்கும். எது எப்படியோ, அந்த வீட்டிலிருப்பவர்களிடம் அன்பு மட்டும் இருந்தால்போதும், வீடு சொர்க்கமாகிவிடும்.
சில வீடுகளில் வைத்த பொருள் வைத்த இடத்தில் ஒழுங்காக இருக்கும். பார்த்துப் பார்த்து அழகாக, சுத்தமாகப் பராமரிப்பார்கள். ஆனால் வீட்டிலிருப்பவர்களிடையே நல்லுறவை எதிர்பார்க்க முடியாது. விளைவு, எப்போதும் கூச்சல், குழப்பம், சண்டைதான். இதற்கு அர்த்தம் ஏனோதானோவென்று வீட்டைப் பராமரிப்பவர்களின் வீட்டில்தான் அன்பு சூழ்ந்திருக்கும் என்பதல்ல. எல்லோரும் அக உணர்ச்சிகளுக்கு தரும் முக்கியத்துவத்தைவிட, புற அழகுக்கும் வசதிகளுக்கும் அதிக முக்கியத்துவம் தருபவர்களாக மாறிக்கொண்டிருக்கிறோம் என்பதுதான்.
அலுவலகப் பிரச்சினைகளை எல்லாம் செருப்பைப் போல வீட்டுக்கு வெளியே விட்டுவிட்டு வீட்டுக்குள் நுழைவேன் என்பார்கள் சிலர். “வீடுன்னா அப்படி இப்படின்னுதான் இருக்கும். வச்சது வச்ச மாதிரியே இருக்கிறதுக்கு இது என்ன மியூஸியமா?’ என்று தன்னுடைய கண்டிப்பான அப்பாவிடம் ஒரு தமிழ்ப்பட கதாநாயகன் சொல்வது ஞாபகத்துக்கு வரலாம். குடும்பத்தில் அளவான கண்டிப்புடன் கூடிய ஆதரவு எல்லோரிடத்திலும் பரஸ்பரம் இருக்கும்பட்சத்தில், வீடே அன்புமயமாகும் என்னும் உண்மையைத்தான் வித்யாவிடம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சொன்னேன்.
அலுவலகம், வீடு இரண்டிலுமே நேர்த்தியை எதிர்பார்ப்பவர் வித்யா. அவருக்கு 10 வயதிலும், 4 வயதிலும் இரண்டு குழந்தைகள். பொதுவாகக் குழந்தைகள் நன்றாகப் படித்து, சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் வாழ வேண்டும் என்று எல்லா தாய்மார்களும் விரும்புவது இயல்புதான். ஆனால், வித்யா என்னிடம் சொன்னதில் அந்த இயல்பைக் காண முடியவில்லை.
கண்டிப்பும் தண்டனையும்
“குழந்தைகள் நன்றாகப் படிக்க வேண்டும், பள்ளியில் நல்ல பெயர் வாங்க வேண்டும், ஒழுக்கத்தில் சிறந்தவர்களாக இருக்க வேண்டும், நல்ல பழக்கவழக்கங்களோடு வளர வேண்டும் என்று நினைக்கிறேன். காலையில் சீக்கிரம் எழுந்துகொள்ளும் பழக்கத்தையும் இரவில் சீக்கிரம் தூங்கும் பழக்கத்தையும் ஏற்படுத்துகிறேன். வாரத்துக்கு ஒரு முறை வெளியே கூட்டிப்போவது, ஐஸ்கிரீம் வாங்கித் தருவது போன்றவற்றில் எந்தக் குறையும் வைப்பதில்லை. ஆனால், நான் சொன்ன விஷயங்களைக் குழந்தைகள் தொடர்ந்து செய்யாமல் போகும்போது, எனக்குப் பயங்கரமாகக் கோபம் வருகிறது. உரத்த குரலில் கடுமையாகப் பேசுகிறேன். ரொம்பவும் பதற்றமடைந்துவிடுகிறேன். சில நேரம் குழந்தைகள் படிக்காமல், சொல்வதைக் கேட்காமல் இருக்கும்போது அவர்களைக் கண்மூடித்தனமாக அடித்தும் விடுகிறேன். இந்தக் கோபம் எனக்குப் பிடிக்கவில்லை. குழந்தைகளிடம் இப்படி நடந்துகொள்வதும் எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் என்னை மீறி ஒவ்வொரு நாளும் இப்படித்தான் நடந்துகொள்கிறேன்” என்று கதறி அழுதார் வித்யா. ஒரு தாயாக அவரது துன்பத்தை, என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.
விதைபோட்ட தந்தை
எங்களின் இந்த உரையாடலின் தொடர்ச்சியாகத்தான், “இந்தக் கோபத்தால் எங்களின் தந்தையை எங்களுக்குப் பிடிக்காமல் போனதுபோல், என்னுடைய குழந்தைகளுக்கு என்னைப் பிடிக்காமல் போய்விடுமோ என்று அஞ்சுகிறேன்” என்ற வித்யா, அவருடைய தந்தையைப் பற்றிச் சொன்னார்.
வித்யாவின் தந்தை, வீட்டில் ஒரு ராணுவ அதிகாரிபோல் நடந்துகொள்வாராம். இப்படித்தான் தூங்க வேண்டும், இந்த நேரத்துக்குள் எழுந்துவிட வேண்டும், காலையில் இத்தனை மணிக்குள் குளித்து முடித்து, படித்துவிட்டுச் சிற்றுண்டி சாப்பிட வேண்டும் என எல்லாமே அவரது கட்டுப்பாட்டில்தான் ‘டான் டான்‘ என்று நடக்க வேண்டும் என்பாராம். எங்கும் அழைத்துச் செல்லமாட்டாராம். அன்பாகப் பேசமாட்டாராம். அப்பாவுடனான வித்யாவின் அதிகபட்ச ஞாபகம், அவர் காட்டிய கண்டிப்பாக மட்டுமே இருக்கிறது.
இடத்தை மாற்றுங்கள்
ஆலோசனைக்காக வித்யாவுடன் எட்டு முறை பேசினேன். கோபத்தைக் குறைப்பதற்குப் பதிலாக கோபம் வரும்போது நான் என் குழந்தைகளிடம், “அம்மாவுக்கு நீ இப்படிப் பண்றது கோபமா வருது. 10 நிமிஷம் நான் ரூமில் இருந்துட்டு வர்றேன். என்னை தொந்தரவு பண்ணாதே” என்று சொல்லிவிட்டு, 10 நிமிடம் கழித்து என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, குழந்தையிடம் பொறுமையாகப் பேசுவேன். சற்று நேரத்துக்கு முன்பு அடம்பிடித்த என்னுடைய பையன் அப்போது பொறுமையாகக் கேட்டுக்கொள்வான். கோபம் வந்தால் உடனே அந்த இடத்தைவிட்டு அகன்றுவிடுவது நமக்கும் நல்லது. யார் மீது நாம் கோபப்படுகிறோமோ அவர்களுக்கும் நல்லது” என்று வித்யாவிடம் சொன்னேன்.
நாம் வேறு; தந்தை வேறு
கண்டிப்புடன் நடந்துகொள்வதாலேயே குழந்தைகள் உங்களை வெறுக்கமாட்டார்கள். ஏனென்றால் உங்களின் கண்டிப்பு வேறு, உங்கள் தந்தை உங்களிடம் காட்டிய கண்டிப்பு வேறு. அதோடு, அவர் குழந்தைகளிடம் எதிர்பார்க்கும் விஷயங்களைப் பட்டியலிடுமாறு வித்யாவிடம் சொன்னேன். அதன்பிறகு, அதில் அவர்களே தன்னிச்சையாக செய்யக்கூடிய விஷயங்களையும் குறிப்பிடச் சொன்னேன். அவரின் தாயுள்ளம் இதைக் குழந்தை தனியாகச் செய்வானா, அதைச் செய்ய முடியுமா என்று பெரும்பாலானவற்றை அடித்தது. அதோடு கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டுவர வாயோ புன்னகைக்கவும் செய்தது.
குழந்தைகளிடம் அதட்டி வேலை வாங்கவே முடியாது. அவர்களோடு அதிகம் நீங்கள் பேச வேண்டும். அது நிச்சயம் கட்டளையாக இருக்கக் கூடாது. உரையாடலாக இருக்க வேண்டும் என்றேன். ஒருமுறைக்கு இருமுறை நான் சொன்னதை மனதுக்குள் திரும்பச் சொல்லிப் பார்த்துக்கொண்ட வித்யா, அப்படியே நடந்துகொள்வதாக எனக்கு வாக்கும் கொடுத்தார்.
கட்டுரையாளர், மனநல ஆலோசகர்
தொடர்புக்கு: shobana.jayaraman@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT