Published : 23 Jul 2017 03:56 PM
Last Updated : 23 Jul 2017 03:56 PM
மாத்ருபூமியில் முதல் நாள் விடுமுறை
மும்பையைச் சேர்ந்த யூடியூப் நிறுவனமான கல்ச்சர் மெஷின், பெண் ஊழியர்களுக்கு மாதவிடாயின் முதல் நாளை சமீபத்தில் விடுமுறையாக அறிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து கேரள ஊடக நிறுவனம் மாத்ருபூமி தன் பெண் ஊழியர்களுக்கு இதேபோல் முதல்நாள் விடுமுறையை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு குறித்து மாத்ருபூமியின் கூடுதல் நிர்வாக இயக்குநர் எம்.வி. ஷ்ரேயம்ஸ் குமார், “கல்ச்சர் மெஷின் நிறுவனத்தின் அறிவிப்பைப் பற்றிக் கேள்விப்பட்டபோது, அது சிறந்த முடிவு என்று தோன்றியது. பெண் ஊழியர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு அது கூடுதல் விடுமுறை நாளாகத் தரப்படும். நோய் விடுப்பாகவோ தற்செயல் விடுப்பாகவோ கணக்கில் கொள்ளப்படாது” என்று கூறியுள்ளார். இந்தோனேசியா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளில் பெண் ஊழியர்களுக்கு மாதவிடாயின் முதல்நாள் விடுமுறை அளிக்கும் நடைமுறை உள்ளது.
அரசுப் பள்ளியில் பெண் ஐ.ஏ.எஸ். மகள்
சென்னையைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி லலிதா, தன் மகளை மாநகராட்சிப் பள்ளியில் சேர்த்துள்ளார். 2010-ம் ஆண்டில் குடிமைப்பணியில் சேர்ந்த இவர், 2013 முதல் 2014 வரை கல்வித்துறை துணை ஆணையராகப் பணியாற்றினார். தன் மகள் தருணிகா கருவில் இருந்தபோதே, அவள் பிறந்த பின்னர் அரசுப் பள்ளியில் சேர்க்க முடிவெடுத்துவிட்டதாக இவர் கூறியுள்ளார். பெரும்பாலோர் தங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்க்கத் தீவிர ஆர்வம் காட்டிவரும் நிலையில் இவர் எடுத்துள்ள முடிவு பாராட்டைப் பெற்றுள்ளது. அரசுப் பள்ளிகள் குறித்து நிலவிவரும் தவறான கண்ணோட்டத்தை மாற்றுவதற்கான சிறிய முயற்சி இது என்றும் அவர் கூறியுள்ளார்.
பாடலுக்கு எதிராக மாநகராட்சி நோட்டீஸ்
மும்பையில் பருவமழைக்குப் பிறகு தண்ணீர் தேங்கியதால் ஏற்பட்ட கொசுத்தொல்லை குறித்தும் மும்பை மாநகராட்சி நிர்வாகத்தின் பாராமுகம் குறித்தும் பாடகி மாலிஷ்கா, ரெட் எஃப்.எம்-ல் பாடிய பாடல் மும்பைவாசிகள் மத்தியில் பிரபலமானது. இதையடுத்து சிவசேனா கட்சியைச் சேர்ந்த இருவர் மாலிஷ்கா மீது மும்பை மாநகராட்சி நிர்வாகம் ரூ. 500 கோடி அபராதம் விதித்து அவமதிப்பு வழக்கு தொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அவரது செயல் மும்பையின் நற்பெயரைக் கெடுக்கும் முயற்சி என்றும் விமர்சித்தனர். சிவசேனா கட்சி சார்பாக ‘மும்பையைப் பற்றி ஏதாவது நல்லதாகப் பேசு’ என்று கூறும் எதிர்ப்பாடலும் உருவாக்கப்பட்டது. பிரச்சினை இத்துடன் நிற்கவில்லை. மும்பை மாநகராட்சி நிர்வாகம் மாலிஷ்காவின் வீட்டிலுள்ள தொட்டிச் செடிகள் அப்பகுதியில் கொசுக்களை உற்பத்தி செய்வதாகக் கூறி, அவர் வீட்டுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கிராமப் பெண்களின் இணைய விவாதம்
மத்தியப் பிரதேச மாநிலம் பூந்தேல்கண்ட் நகரத்திலிருந்து முழுக்கவும் பெண்களால் நடத்தப்படும் ‘கபர் லஹரியா’ கிராமச் செய்தி இதழ் நீண்டகாலமாக வந்துகொண்டிருக்கிறது. அதன் இணையதளமும் முழுக்கவும் பெண்களால் நடத்தப்படுகிறது. சாதாரண மக்களின் அன்றாட நிகழ்வுகளைப் பற்றி படாடோபமின்றி எளிமையான மொழியில் செய்திகளைத் தரும் இணையதளம் இது. இந்தச் செய்தி இணையதளத்தின் இணையத் தலைவர் கவிதா, ‘தி கவிதா ஷோ’ என்ற நிகழ்ச்சியைச் சமீபத்தில் தொடங்கியுள்ளார். இதன் முதல் அத்தியாயத்திலேயே சம்பிரதாய திருமணச் சடங்குகள் மாறியுள்ள விதம் குறித்து விமர்சிக்கப்பட்டுள்ளது. பெண்ணுடலைச் சந்தைப்பொருளாக மாற்றும் பாலிவுட் பாடல்கள், திருமண நிகழ்ச்சிகளில் பெண்களை எப்படிக் கூசவைக்கின்றன என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. ஆன்ட்டி ரோமியோ படைகள், கசாப்புக் கடைகள் மூடல், பெண் பத்திரிகையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் போன்றவை குறித்தும் இந்நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT