Published : 23 Jul 2017 04:05 PM
Last Updated : 23 Jul 2017 04:05 PM
வெந்நீர் வைக்கத் தெரியாத ஆண்கள் பலர் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். இவர்கள் பெயரில்தான் சமையல் எரிவாயு இணைப்பு, குடும்ப அட்டை உட்பட இன்னபிற அரசு ஆவணங்களும் இருக்கும். காரணம், அவர்கள்தான் குடும்பத் தலைவர்கள். குடும்பத்தை நடத்துவதற்கு அவர்களின் வருமானம் உதவுவதால், அவர்கள் குடும்பத் தலைவர்களாகச் சமூக அமைப்பில் அறியப்படுகிறார்கள். ஆனால், பணத்தால் மட்டுமே குடும்பம் நடந்துவிடுமா? இப்படிப்பட்ட குடும்பத் தலைவர்கள் சிலர் சிறிதும் குற்றவுணர்வு இல்லாமல், “அவ வேலைக்கெல்லாம் போகலை. வீட்ல சும்மாதான் இருக்கா” என்று தங்கள் மனைவியைப் பற்றிச் சொல்வார்கள்.
ஒப்பீடு தேவையில்லை
கண் விழித்தது முதல் இரவு உறங்கப்போகும்வரை வீட்டின் அனைத்து வேலைகளையும் இடுப்பொடியச் செய்து, கணவருக்கும் குழந்தைகளுக்கும் வேண்டியதைச் செய்து கொடுத்து, வீட்டை நிர்வகிக்கும் பெண்களைப் பார்த்து ‘சும்மாதான் இருக்கிறா’ என்று எப்படிச் சொல்ல முடிகிறது அவர்களால்? ஆனால், இப்படிப்பட்ட எண்ணம் சில பெண்களுக்கும் இருக்கும் என்பதை வினிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்னிடம் பேசியபோது தெரிந்துகொண்டேன்.
வினிதா, முப்பதுகளில் இருப்பவர். இரண்டு குழந்தைக்குத் தாய். “அன்பான கணவர். முத்தாக இரண்டு குழந்தைகள். பலரும் பார்த்துப் பொறாமைப்படும் வாழ்க்கை என்னுடையது. ஆனாலும் அக்கம் பக்கம் வீடுகளில் இருக்கும் என் வயதையொத்த பெண்களைப் போல் நான் நார்மலாக இல்லையோ என்று தோன்றுகிறது” என்றார் வினிதா.
வீட்டில் வேலையாள் கிடையாது. எல்லாவற்றையும் வினிதாவே பார்த்துப் பார்த்துச் செய்துவந்தார். தைராய்டு பிரச்சினையால் ஏற்பட்ட உடல் பருமனைக் குறைப்பதற்காக யோகாசன வகுப்புக்கு வாரத்துக்கு இரண்டு முறை சென்றுவருவதாகக் கூறினார். வீட்டுக்கு அருகில் இருக்கும் பெண்கள் சிலர் வேலைக்குச் செல்வதைப் பார்த்த வினிதா, அவர்களைப் போல் தன்னால் வேலைக்குச் செல்ல முடியவில்லையே என்று நினைத்திருக்கிறார். அதனால் உருவான தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடுதான், தான் நார்மல் இல்லையோ என்று அவரை நினைக்க வைத்திருக்கிறது. வினிதாவைப் பொறுத்தவரை ஏதாவது ஓர் அலுவலகத்திலோ கடைகளிலோ வேலை செய்வதைத்தான் திறன்மிக்கச் செயலாக நம்பிக்கொண்டிருந்தார்.
இக்கரைக்கு அக்கரை பச்சை
வேலைக்குப் போகிறவர்களிடம் கேட்டால்தான் அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பது தெரியும் என்று வினிதாவிடம் சொன்னேன். அவர்களைப் பற்றி எதுவும் தெரியாமல், உங்களை அவர்களுடன் ஒப்பிட்டுக்கொள்வது தவறு என்றும் சொன்னேன். நமக்கு எப்போதுமே மற்றவரைப் பார்க்கும்போது அவர்கள் நார்மலாகவும் நன்றாகவும் இருப்பதுபோல் தெரியும். அவர்களுக்கு நாம் நார்மலாக இருப்பதாகத் தெரியும்.
வினிதாவின் திறமைகளை அவருக்குச் சுட்டிக்காட்டினேன். அவர் பம்பரமாகச் சுற்றி வேலை செய்வதால்தான், வீடு வீடாக இருக்கிறது என்பதையும் சொன்னேன். கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் இருந்த வினிதா, “நீங்கள் சொல்றது சரிதான் மேடம்… நான்தான் அவ்வளவு வேலையும் செய்யறேன். ஆனா அதை நானே உணரவில்லை” என்றார். அவர் கண்களில் லேசாகக் கண்ணீர் எட்டிப்பார்த்தது.
உங்களுக்கான நேரம் எது?
வினிதாவுக்கு இருந்த இன்னொரு பிரச்சினை உடல் பருமன். அதற்காக அவர் யோகா வகுப்புக்குப் போனாலும், அந்தப் பயிற்சியை அன்றாடம் செய்ய நேரம் ஒதுக்க முடிவதில்லை என்ற ஆதங்கம் அவருக்கு இருந்தது. குழந்தைகளை நேரத்துக்குப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும், கணவருக்கு வேண்டியதைச் செய்துகொடுத்து அனுப்ப வேண்டும் என்று திட்டமிடுகிற நீங்கள், உங்கள் ஆரோக்கியத்துக்காக ஏன் நேரம் ஒதுக்குவதில்லை என்று கேட்டபோது, அவரிடம் பதில் இல்லை. தொடர்ச்சியாக அவர் செய்யும் வேலைகளையே மீண்டும் மீண்டும் பட்டியலிட்டபடி இருந்தார்.
என் வாழ்க்கையில் ஆரோக்கியத்துக்காக நான் கடைப்பிடிக்கும் ஒரு யோசனையை அவருக்குச் சொன்னேன். சில யோகாசனங்களுக்கு நெருக்கமாக நீங்கள் அன்றாடம் செய்யும் வேலைகள் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா என்று கேட்டேன். சிறிது நேரம் யோசித்த வினிதா, “ஆமாம் மேடம். நான் காய் அரியும்போது, துணி துவைக்கும்போது, கூட்டிப் பெருக்கும்போது இப்படிப் பல வேலைகளின்போதும் சில அசைவுகளைப் பிரத்யேகமாகச் செய்யும்போதும், அவை சில யோகாசனங்களைச் செய்வதுபோல்தான் இருக்கும்” என்றார் முகத்தில் பிரகாசத்துடன்.
மகிழ்ச்சி தரும் பயிற்சி
நெகிழ்வுத் தன்மை உடலில் மட்டுமல்ல, எண்ணத்திலும் செயலிலும் அதிகரித்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். படிக்கும் இடமோ பணி செய்யும் இடமோ குடும்பமோ, நாம் இருக்கும் இடம் எதுவாக இருந்தாலும் சரி, நம் மனதில் இறுக்கத்தைத் தளர்த்திக்கொள்ள வேண்டும். வாழ்க்கையில் நெகிழ்வுத் தன்மை இருந்தால், நம் மீது நமக்கே மதிப்பு வரும். அடுத்தவரை மதிக்கும் எண்ணமும் வரும்.
என்னால்தான் முடியும் என்பது அகங்காரம். பிறர் செய்வதைப் போல் என்னால் எதுவுமே செய்ய முடியாது என்று நினைப்பது தாழ்வு மனப்பான்மை. என்னாலும் முடியும் என்பது தன்னம்பிக்கை. இந்தத் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வதற்கு நெகிழ்வுத் தன்மை இருந்தால் போதும் என்பதை வினிதாவுக்குச் சொன்னேன். அவர் புரிந்துகொண்டார் என்பதை அவரது முகம் தெளிவாகக் காட்டியது.
கட்டுரையாளர், மனநல ஆலோசகர்
தொடர்புக்கு: shobana.jayaraman@gmail.com
தொகுப்பு: பைரவி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT