Published : 02 Jul 2017 12:43 PM
Last Updated : 02 Jul 2017 12:43 PM
ஒரு படத்தில் இடம்பெற்ற நகைச்சுவைக் காட்சி இது. ஒரு தேநீர்க் கடையில் இரண்டு பேர் எதிரும் புதிருமாக அமர்ந்திருப்பார்கள். திடீரென்று அவர்களிடையே வாக்குவாதம் நடக்கும். அவர்கள் அடிதடியில் இறங்கத் தயாராகும்போது வடிவேலு அவருக்கே உரிய பாணியில் அவர்களை விலக்கிவிடுவார். ஆனால், உண்மையில் அவர்கள் இருவரும் உறவினர்கள். அவர்கள், “நாங்க இன்னிக்கு சண்டை போட்டுக்குவோம் நாளைக்கு சேர்ந்துக்குவோம்… நீ யாருய்யா எங்களுக்கு நடுவுல” என்றபடி வடிவேலுவை அடித்துச் சட்டையைக் கிழித்து அனுப்புவார்கள். இதைச் சாதாரண நகைச்சுவைச் காட்சியாக ஒதுக்கிவிட முடியாது. நமக்குச் சம்பந்தமில்லாத விஷயங்களில் மூக்கை நுழைத்தால் விளைவு இதுதான் என்பதை விளக்கும் பாடமாகவே இதைப் பார்க்கிறேன். கனிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தம்பதியின் கதையும் இதைத்தான் சொல்கிறது.
கனிகா என்னிடம் மிகவும் விரக்தியாகப் பேசினார். “என் கணவர் எந்த விதத்திலும் என்னைப் புரிந்துகொள்வதில்லை. எப்போதும் எங்கள் பேச்சு சண்டையில்தான் முடிகிறது. நாளுக்கு நாள் நிலைமை மிகவும் மோசமாகிக்கொண்டே போகிறது. இது இப்படியே நீடிப்பதில் எங்கள் இருவருக்குமே விருப்பம் இல்லை” என்றார்.
“உங்களுக்குத் திருமணமாகி எத்தனை வருஷம் ஆகிறது?’’ என்றேன்.
“ஆறு மாதங்கள்தான்’’ என்றார்.
“பேசலாம் வாருங்கள்” என்றேன்.
கனிகா, தன் கணவர் சந்துருவுடன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வந்தார். சந்துரு, “கனிகாவுடன் எப்படிப் பேசுறதுன்னே தெரியல. மொத்தத்துல எங்களுக்குள்ள பொருத்தமே இல்லன்னு நினைக்கிறேன்” என்றார்.
கனிகாவோ, “எந்தவொரு விஷயத்தையும் இவர் புரிஞ்சிக்கிறதே இல்லை. சின்ன விஷயத்திலகூடக் கவனம் இல்லை. நாலு முறை சொன்னாதான் புரிஞ்சிப்பாரு… அய்யய்யோ கொடுமைடா சாமி” என்று அலுத்துக் கொண்டார்.
இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சொன்னாலும்,அவர்களுக்குள் தங்களின் திருமண உறவு தொடர வேண்டும் என்ற ஆவல் இருப்பதை உணர்ந்தேன். அதற்கு நான் உதவ வேண்டும் என்ற தவிப்பு அவர்களிடம் இருப்பதும் தெரிந்தது.
உறவு முறையில் நடந்த திருமணம் அவர்களுடையது. திருமணத்துக்கு முன் அறிமுகமானவர்கள்தானே, அப்போது எப்படிப் பேசிக்கொள்வீர்கள் என்று கேட்டேன்.
“அப்போல்லாம் நல்லாதான் பேசிக்கிட்டோம். சினிமா, டிவி டாக்-ஷோ இப்படிப் பல விஷயத்தைப் பத்தியும் ரொம்ப நேரம் பேசிக்கிட்டு இருப்போம்” என்றனர்.
அவர்களுடன் தொடர்ந்து பேசினேன். சிறிது நேரம் அவர்களுக்குள் ஏதாவது பேசச் சொன்னேன். அப்போது அவர்களின் உரையாடலில் நான் கவனித்த விஷயம், கனிகா, சந்துருவின் பெற்றோரைக் குற்றம் சொன்னார். சந்துரு, கனிகாவின் பெற்றோரைப் பற்றிக் குறை கூறினார். அவர்களின் உரையாடலை நிறுத்தச் சொல்லி, ஏன் இப்படி என்று கேட்டேன்.
இறந்த காலம் எதற்கு?
திருமணத்தின் போதே இரண்டு குடும்பங்களுக்குள்ளும் மோதல் வெடித்திருக்கிறது. மணப்பெண் வீட்டார் சொன்னதைச் செய்யவில்லை என்று மணமகன் வீட்டாரும், மணமகன் வீட்டார் மாற்றி மாற்றிப் பேசுகின்றனர் என மணப்பெண் வீட்டாரும் பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொண்டனர். திருமண நாளில் இரண்டு குடும்பங்களுக்கிடையே பற்றிய அந்த வெறுப்புத் தீ, கணவனும் மனைவியுமாக ஆன பின்னும் அவர்களைச் சுட்டெரித்துக்கொண்டே இருப்பது புரிந்தது.
“எல்லாத் திருமணத்திலும் இரண்டு குடும்பங்களுக்குள் பிரச்சினைகள் வரும்தான். அதற்காக அந்தப் பிரச்சினைகளைக் கணவனும் மனைவியும் காலம் முழுவதும் பேசிக்கொண்டிருந்தால், அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்” என்றேன்.
சமாதானத்தில் முடிந்த சண்டை
“உண்மைதான் நாங்கள் இதுவரை திருமணத்தின்போது நடந்த விஷயங்களைத்தான் மாற்றி மாற்றிப் பேசி, சண்டை போட்டுக்கொண்டிருந்தோமே தவிர, நிகழ்காலத்தைப் பற்றியோ எதிர்காலத்தைப் பற்றியோ யோசிக்கவே இல்லை” என்றனர்.
சந்துரு, “எனக்கு இப்படியே போவதில் விருப்பமில்லை. இனிமேல் கனிகாவின் குடும்பத்தைப் பற்றிப் பேசுவதில்லை என்று முடிவெடுத்துவிட்டேன்” என்றார். கனிகாவும் அதையே சொன்னார்.
“ஆறு மாதமாகச் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறீர்கள். இனிமேல் போட மாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?” என்றேன்.
“ஒருவேளை கனிகா என் குடும்பத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தால், கோபப்படாமல் என் கைவிரல்களை மேல்நோக்கி உயர்த்திக் காட்டுவேன். இந்தக் குறிப்பைப் புரிந்துகொண்டு மேற்கொண்டு அவர் பேசாமல் இருக்க வேண்டும்” என்றார் சந்துரு.
“இதற்கு நானும் உடன்படுகிறேன். ஒருவேளை சந்துரு என் குடும்பத்தைப் பற்றிய பேச்சை எடுத்தால், நானும் என் கைவிரல்களை மேலே உயர்த்திக் காட்டுவேன். அவர் பேசாமல் இருக்க வேண்டும்” என்றார் கனிகா.
அக்கறைக்கான பொதுவான அர்த்தம்
“திருமணமாகி ஒருவர் மீது ஒருவர் பரஸ்பரம் எந்தளவுக்கு அக்கறையாக இருக்கிறீர்கள்?” என்று கேட்டேன்.
“எனக்கு நன்றாக சமைக்கத் தெரியும். விதவிதமாகச் சமைத்துத் தருவதன் மூலமாகவே அவருக்கு என்னுடைய அக்கறையைப் புரியவைக்க முயன்றேன்” என்றார் கனிகா.
சந்துருவோ, “எனக்கு வேண்டிய உடையைக்கூட நான் வாங்கியதில்லை. எல்லாமே எனக்கு அம்மாதான் பார்த்துப் பார்த்துச் செய்வாங்க. என்னைப் பத்தி எனக்கே அக்கறை இல்லாதப்போ என் மனைவியை அக்கறையா பார்த்துக்கணும்னுகூட இதுவரை நினைச்சதில்ல. அது தப்புன்னு இப்ப புரியுது” என்றார் கனிகாவைப் பார்த்தபடி.
“இப்படியொரு ஏக்கமான பேச்சை, இன்னொரு பக்கத்தை சந்துருவிடமிருந்து நான் எதிர்பார்க்கவில்லை” என்ற கனிகாவின் கரங்கள் சந்துருவின் கரங்களை ஆதரவாகப் பற்றிக்கொண்டன.
இருவருக்குமே அக்கறை பற்றிய புரிதல் வெவ்வேறாக இருந்தது. ஒருவருக்குச் சமைத்துப் போடுவதுதான் அக்கறைக்கான அர்த்தமாக இருந்தது. இன்னொருவருக்குத் தன் மீதே அக்கறை இல்லை. தாய் வேறு மனைவி வேறு என்ற புரிதலை சந்துரு உணர ஆரம்பித்தார். யாருடைய இடத்தையும் யாரும் நிரப்ப முடியாது. அவரவர்களுக்கான வாழ்க்கையை வாழ்வது அவரவர் கையிலிருக்கிறது என்பதை அடுத்தடுத்த அமர்வுகளில் கணவனும் மனைவியும் புரிந்துகொண்டனர்.
பல மாதம் கழித்து சமீபத்தில் கனிகாவும் சந்துருவும் பேசினார்கள்.
“இப்பல்லாம் சண்டையே போடறதில்லையா?” என்றேன்.
“சண்டை வரத்தான் செய்யுது. ஆனாலும் அந்தச் சண்டையை விளையாட்டாக முடித்துக்கொள்ளத் தெரிந்துகொண்டோம்” என்றனர் கனிகாவும் சந்துருவும்.
கட்டுரையாளர், மனநல ஆலோசகர்
தொடர்புக்கு: shobana.jayaraman@gmail.com
தொகுப்பு: பைரவி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT