Last Updated : 16 Jul, 2017 12:02 PM

 

Published : 16 Jul 2017 12:02 PM
Last Updated : 16 Jul 2017 12:02 PM

பார்வை: நடிகைகளின் போராட்ட வெற்றி!

தென்னிந்தியாவின் பிரபல நடிகை கடந்த பிப்ரவரி 17 அன்று கடத்தப்பட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார். இந்தச் சம்பவம் நடந்து நான்கு மாதங்களுக்குப் பிறகு மலையாளத்தின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான திலீப், இதில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாகக் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இந்த நான்கைந்து மாத காலத்தில் இந்த வழக்கு ஒரு நடிகைக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல், அதற்கு எதிராக நடந்த காவல்துறை நடவடிக்கை என்பதைத் தாண்டிப் பொதுவெளிக்கு வந்துள்ளது.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு மலையாள சினிமாவில் நிலவும் நடிகைகளுக்கான பாதுகாப்பின்மை குறித்து முன்னணி நடிகைகள் பலர் வெளிப்படையாக கருத்துத் தெரிவித்தனர். பார்வதி, நடிப்பதற்கான தேதியுடன் படுக்கையையும் பங்கிட வேண்டி நிர்ப்பந்திக்கப்பட்டதால்தான் இடையில் தனக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என ஒரு நேர்காணலில் தெரிவித்தார். மூத்த தமிழ்/மலையாள நடிகையான ஷர்மிளாவும் இதே போன்ற ஓர் அனுபவத்தைப் பகிர்ந்தார். நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என பல தரப்பிலிருந்து இந்த நெருக்கடி தரப்படுவதாகச் சொல்லப்படுகிறது.

‘அம்மா’ அமைப்பின் அலட்சியம்

மலையாள நடிகர்/நடிகை நலன்களுக்காகத் தொடங்கப்பட்ட ‘அம்மா’ என்னும் சங்கம், இது தொடர்பாக எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ‘அம்மா’ பொதுக்குழு கூட்டம் தொடர்பாக விளக்கம் அளிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பில் அமைப்பின் தலைவரான இன்னசண்ட், “நடிகைகள் மோசமானவர்களாக இருந்தால், அவர்கள் தங்கள் படுக்கையைப் பங்கிட வேண்டிவரும்” எனச் சொன்னார். இந்தக் கருத்தை ‘அம்மா’ என்ற அமைப்பு எப்படிச் செயல்படுகிறது என்பதற்கான ஆதாரமாகக் கொள்ளலாம்.

நடிகை கடத்தப்பட்டதற்கு மறுநாள் அவருக்கு ஆதரவாகக் கொச்சியில் ‘அம்மா’ சார்பில் கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால், அதற்குப் பிறகு பத்து நாட்கள் இடைவெளியில் கொச்சியில் நடந்த ‘அம்மா’ அமைப்பின் பொதுக்குழு உறுப்பினர் கூட்டத்தில், இந்தச் சம்பவம் குறித்துப் பேசக்கூட அதன் முக்கியத் தலைவர்கள் விரும்பவில்லை. அதைத் தொடர்ந்து நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தலைவர் இன்னசண்ட், துணைத் தலைவர் கணேஷ்குமார், செயற்குழு உறுப்பினர் முகேஷ், செயலாளர் இடவேளை பாபு ஆகியோர் இந்தச் சம்பவம் குறித்துக் கேள்வி கேட்ட பத்திரிகையாளர்களைக் கடுமையான சொற்களால் விமர்சித்தனர். இவற்றையெல்லாம் மேடையில் அமர்ந்திருந்த பொதுச்செயலாளரான மம்மூட்டியும், துணைத் தலைவரான மோகன்லாலும் பேசாமல் பார்த்துக்கொண்டிருந்தனர். “பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட நடிகையையும், அது சார்ந்த கூட்டுச்சதியில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட திலீபையும் நாங்கள் ஒன்றாகத்தான் பார்ப்போம்” எனச் சொன்னார்கள். இது பெரும் விவாதத்துக்கு உள்ளானது.

‘அம்மா’வின் இந்தக் கூட்டம் வட இந்தியாவில் நடத்தப்படும் காப் பஞ்சாயத்துக்களுக்கு இணையானதாக விமர்சிக்கப்பட்டது. இந்தச் சங்கத்துக்கு இதுவரை ஒரு பெண் தலைவர்கூட நியமிக்கப்பட்டதில்லை. முக்கியத் தலைவர் அறுவரில் ஒருவர்கூடப் பெண் இல்லை. செயற்குழு உறுப்பினர்கள் 12 பேரில் ரம்யா நம்பீசன், குக்கூ பரமேஸ்வரன் ஆகிய இருவர் மட்டுமே பெண்கள். இப்படியொரு அமைப்பில் ஒரு நடிகைக்கு எப்படி நீதி கிடைக்கும்?

முதல் குரல்

‘அம்மா’வின் இந்தச் சர்ச்சைக்குரிய கூட்டம் நடப்பதற்கு முன்பே நடிகைகளுக்காக ‘சினிமா மகளிர் கூட்டமைப்பு’ (Women in Cinema Collective-WCC) என்னும் அமைப்பு நடிகை மஞ்சு வாரியர், ரீமா கலிங்கல், பார்வதி, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட முன்னணி நடிகைகள், பீனா பால் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோரது முயற்சியால் தொடங்கப்பட்டது. மலையாள நடிகர்/நடிகை நலனுக்காகத் தொடங்கப்பட்ட ‘அம்மா’, நடிகைகளின் பிரச்சினையைப் பேசாததால் இந்த அமைப்பு அதைக் கையில் எடுத்தது. பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளான நடிகைக்கு ஆதரவாகத் தனது முதல் குரலை எழுப்பியது.

நடிகர் திலீப் தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க முன்னணித் தொலைக்காட்சியில் தோன்றிப் பேசும்போது, நடிகையைக் கடத்திப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாகச் சரணடைந்த சுனில், நடிகைக்கு நன்கு அறிமுகமானவர்தான். ஒருவகையில் நடிகையும் இதற்குக் காரணம் எனச் சொன்னார். இதற்கெல்லாம் மேலாக ‘அம்மா’வுக்கு ஏன் ஒரு பெண் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை?’ என்னும் கேள்விக்கு அதன் தலைவர் இன்னசண்ட், “திறமையுள்ள பெண்கள் இன்னும் வரவில்லை” எனச் சொன்னார்.


அம்மா பொதுக்குழு கூட்டத்தில் பின்னே குக்கூ பரமேஸ்வரன்

பெண்ணுக்குக் கிடைக்காத நீதி

சினிமாத் துறையின் உள்ளே திலீபுக்குத் திரண்ட ஆதரவில் ஒரு பங்குகூட நடிகைக்கு ஆதரவாகத் திரளவில்லை. திலீபால் தான் வாய்ப்புகளை இழந்ததாக இந்தச் சம்பவம் நடந்ததற்கு முன்பே பகிரங்கமாக அந்த நடிகை அறிவித்திருந்தபோதும், 'அம்மா' அமைப்பு அதைப் பொருட்படுத்தவில்லை.

இது ஒரு பக்கம் இருக்க, இந்த வழக்கு விசாரணை தொடங்கியபோதே கேரள முதல்வர் பினராயி விஜயன், “இதில் கூட்டுச் சதி இல்லை” என்றார். ஆக, ஆளும் கட்சியின் ஆதரவும் திலீபுக்கு இருப்பது இதன் மூலம் உறுதியானது எனப் பரவலான பேச்சு அடிபட்டது. முதற்கட்ட விசாரணைக்கு அழைக்கப்பட்ட திலீப் விடுவிக்கப்பட்டதற்கான காரணமும், அவரது அரசியல் செல்வாக்குதான் எனச் சொல்லப்பட்டது. திலீபுக்காக ‘அம்மா’ கூட்டத்தில் வாதிட்ட நடிகர்கள் முகேஷ், கணேஷ் குமார், இன்னசண்ட் ஆகியோர்தான் ஆளும் இடது ஜனநாயக முன்னணி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பது முக்கியமானது. திலீபின் சொந்தத் தொகுதியான ஆலுவா காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அன்வர் சதாத் , எதிர்கட்சிகளின் விமர்சனத்தைப் பொருட்படுத்தாது கைதுசெய்யப்பட்ட திலீபை சந்தித்துப் பேசினார்.

முதல் குற்றவாளி கைதுசெய்யப்பட்ட பிறகும் நீண்டுகொண்டிருந்த இந்த விசாரணையில் நான்கு மாதங்களுக்குப் பிறகு இந்தக் கைதுச் சம்பவம் நடத்தப்பட்டதற்குப் பின்னால் டபுள்யூ.சி.சி.யின் பங்கு முக்கியமானது. அதன் முக்கியச் செயல்பாட்டாளரான மஞ்சு வாரியர், சம்பவத்துக்கு மறுநாள் நடந்த 'அம்மா' கூட்டத்தில், “இதில் ஒரு பெரிய கூட்டுச்சதி உள்ளது” என முதன்முதலாகச் சொன்னார். நடிகையை அவமதித்த நடிகர்கள் மீது பெண்கள் வாரியத்தில் டபுள்யூ.சி.சி. சார்பாகப் புகார் அளிக்கப்பட்டது.

இந்த அநீதியை சினிமாவைத் தாண்டிப் பொதுவெளியில் பெண்களுக்கு ஆதரவான போராட்டமாக மாற்ற, இந்த அமைப்பின் செயல்பாடுகள் உதவின. பத்திரிகைகளையும் எதிர்க் கட்சிகளையும் அரசையும் இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் ஒன்றுதிரட்டினர். இத்தனைக்கும் பிறகுதான் திலீப் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். ‘அம்மா’வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.

அந்த வகையில் டபுள்யூ.சி.சி. போன்ற அமைப்புகள் சினிமாவுக்கு மட்டுமல்ல, பெண்கள் பங்கேற்கும் ஒவ்வொரு துறைக்கும், நிறுவனத்துக்கும் தேவை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x