Published : 09 Jul 2017 01:08 PM
Last Updated : 09 Jul 2017 01:08 PM
எந்த விதமான வரியாக இருந்தாலும் அதன் சாதக பாதகங்களுக்குப் பெண்களும் ஆளாவார்கள். தற்போது அமல்படுத்தப்பட்டிருக்கும் சரக்கு மற்றும் சேவை வரியும் (ஜிஎஸ்டி) அதற்கு விதிவிலக்கல்ல. ‘சுண்டைக்காய் கால் பணம் சுமைக்கூலி முக்கால் பணம்’ என்று சொல்வார்கள். அதுபோலத்தான் ஒரு பொருளின் மீது ஒவ்வொரு நிலையிலும் வரி விதிக்கப்பட்டு நுகர்வோரின் கையைச் சேரும்போது அதன் விலை பலூன் போலப் பெருத்துவிடுகிறது.
தற்போது நமக்குத் தெரிந்தது ஜிஎஸ்டி வரியின் சதவீதங்கள் மட்டும்தான். ஆனால் பொருட்களுக்கு கிடைக்கும் input credit கணக்கில் எடுக்கப்பட்டு உண்மையான விலை அறியப்பட்டால்தான் இந்தத் திட்டம் தான் செய்ய நினைத்ததை அடைய முடியும். இதற்குச் சில மாதங்கள் நாம் காத்திருக்க வேண்டும்.
கையைக் கடிக்காத பட்ஜெட்
தற்போதையை வரிவிதிப்பைக் கருத்தில்கொண்டு மாத பட்ஜெட் போடும்போது சிலவற்றைக் கடைப்பிடிக்கலாம்.
காய்கறிகளுக்கு வரி கிடையாது, ஆனால் பதப்படுத்தப்பட்ட காய்கறிகளுக்கு வரி உண்டு என்பதால் பதப்படுத்தப்பட்ட, புட்டிகளில் அடைத்து விற்கப்படும் உணவு வகைகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். இது உடலுக்கு மட்டுமல்ல பணப்பைக்கும் நல்லது.
ஹோட்டல்களின் மேல் அதிகபட்ச வரி போடப்படுகிறது. அதேபோல் குளிர்சாதனம் இணைக்கப்பட்டவையும் அதிக வரிக்குட்பட்டவை. எனவே, வெளியில் அடிக்கடி சாப்பிடுவதைக் கொஞ்சம் கட்டுக்குள் வையுங்கள். கூடுமானவரை குளிர்சாதன அறையைத் தவிர்த்து பொதுவான உணவகங்களில் சாப்பிடுங்கள்.
போன் பில், சினிமா டிக்கெட்டுகள் (இது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும்), வங்கிக் கட்டணங்கள் அதிகரிக்கும். அவசியம் ஏற்பட்டால் மட்டுமே இவற்றைப் பயன்படுத்துங்கள்.
வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் வாங்கும் பொருட்களின் விலையும் ஏறும். அதனால் அடிக்கடி ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதைக் குறைக்கலாம்.
பிள்ளைகளின் படிப்புச் செலவில் மாற்றம் இருக்காது. ஆனால் பயிற்சி வகுப்புகளுக்கான கட்டணம் அதிகரிக்கும் என்பதால் நாலு இடங்களில் விசாரித்துவிட்டுப் பிறகு குழந்தைகளை சேருங்கள்.
ரயில் கட்டணங்கள் அதிகரிக்கும். அதற்காகப் பயணம் செய்யாமல் இருக்க முடியாது. அதனால் முன்கூட்டியே பயணத் திட்டத்தை முடிவு செய்து அதற்கேற்ப பணத்தைச் சேமித்துக்கொள்ளுங்கள்.
சிக்கனமே கைகொடுக்கும்
சமையல் எரிவாயுவின் மேல் இதுவரை வரி விதிக்கப்பட்டதில்லை. தற்போது 5% வரிக்கு உட்பட்டு இனி 32 ரூபாய்வரை ஒரு சிலிண்டரின் விலை அதிகரிக்கலாம். அதனால் எரிவாயு சிக்கனம் தேவை இக்கணம் என்பதை மனதில் வையுங்கள்.
இனி நெய் பதார்த்தங்கள் தீபாவளிக்குத்தான். காரணம் வெண்ணெய்,நெய் மீதான வரியிலும் ஏற்றம். இந்தத் தீபாவளியும் வான வேடிக்கை இல்லாமல்தான். பட்டாசுகளின் மேல் முதல்முறையாக வரி. சுற்றுச் சூழலின் நன்மை கருதி பட்டாசுகளைக் குறைத்துக்கொள்ளலாம்.
சோப்பு, பால், முட்டை, காய்கறிகள்,மோர், உப்பு, பிராண்ட் அல்லாத மைதா, கோதுமை, கடலை மாவு, சுத்தமான தேன், பாக்கெட்டுகளில் அடைக்கப் படாத உணவு தானியங்கள், பனை வெல்லம், பனீர் இவற்றுக்கு 0% வரி. டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களில் இவற்றை வாங்கும்போது இவற்றின் மேல் வரி போடாமல் இருக்கிறதா என்பதைச் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
ஆனால், சர்க்கரை, டீ, வறுத்த காப்பிக்கொட்டை, சமையல் எண்ணெய், குழந்தைகளுக்கான பால் பவுடர் ஆகியவற்றின் மீது 5% வரி என்பதால் இவற்றின் விலையிலும் ஏற்றம். அதனால் வரும் மூன்று மாதங்களில் பொருட்களின் ஏற்ற இறக்கம் பார்த்து அதற்கேற்ப பட்ஜெட்டை மாற்றி அமைத்துக்கொள்ளுங்கள்.
இப்போது அலுவலகத் தேவைக்கு வருவோம். இருசக்கர வாகனம், கார் போன்றவை தற்போது அவசியப் பொருளாகிவிட்டன. ஆனாலும் பணத்தேவைக்கு ஏற்ப மாதத் தவணையில் கட்டிவிடலாம் என்று லீசில் எடுக்கிறோம். ஆனால், வரி குறைக்கப்பட்டதால் கார், ஸ்கூட்டர் விலையில் இறக்கம். தவணை வாடகையில் வரி ஏற்றம். மாதத்தவணையில் எடுத்திருந்தால் இந்தக் கூடுதல் சுமை ஏற்படும்.
சாக்லேட் எடு கொண்டாடு
வரி விலக்கின் காரணமாக, வீடு வாங்குவது ஒரு சேமிப்புமுறையாக மாறிவிட்டது. இதில் கவனம்கொள்ள வேண்டியது, மனையின் விலைக்கு வரி கிடையாது.
மிக முக்கியமாக நம் நிதிநிலையை மாற்றக்கூடியது இன்ஷுரன்ஸ் பாலிசிகள் மீதான காப்பீட்டுச் சந்தா அதிகரித்துள்ளது. வருமான வரி 80சி பிரிவின் கீழ் கொடுக்கப்படும் விலக்கின் நிமித்தம் பாலிசிகள் அனைவராலும் எடுக்கப்படுகின்றன. இந்த வரி அதிகரிப்பினால் பிரீமியம் 800 ரூபாய் முதல் 1000 ரூபாய்வரை அதிகரிக்கும்.
அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் மாத நிதிநிலையில் துண்டு விழாதிருந்தால், ஒரு சாக்லேட் எடுத்துக் கொண்டாடலாம். ஆம், சாக்லேட்டுகளின் மேல் வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. அதற்காக சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவலைகொள்ள வேண்டாம். இன்சுலின் மீதான வரிசற்று குறைக்கப்பட்டிருக்கிறது. மற்ற மருந்துகளின் விலையிலும் மாற்றம் இருக்கலாம்.
இதுவரை இல்லாமல் பெட்ரோலியப் பொருட்களின் மேல் விதிக்கப்பட்ட வரியைத் தயாரிப்பாளர்கள் கட்டப்போகும் வரியிலிருந்து குறைத்துக்கொள்ளலாம். இதன் காரணமாக, எல்லாப் பொருட்களுமே விலை குறைய வேண்டும். இது நடக்குமா? திட்டத்தைக் கொண்டுவந்த அரசாங்கம் நிர்ணயிக்கப்பட்ட விலைகளையும் தன் கண்காணிப்புக்குள் கொண்டுவந்தால் மட்டுமே இது சாத்தியம்.
கட்டுரையாளர், நிதி ஆலோசகர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT