Published : 16 Jul 2017 12:01 PM
Last Updated : 16 Jul 2017 12:01 PM

என் பாதையில்: அம்மா எப்படி அபசகுனமாவார்?

என் சித்தப்பா மகன் திருமண வரவேற்புக்கு அம்மாவுடன் சென்றேன். மண்டபத்துக்குள் நுழைந்ததுமே மணமேடைதான் முதலில் கண்ணில்பட்டது. மணப்பெண், மெலிந்த தேகத்துடன் உலகத்தின் பாரங்கள் ஏறாத முகத்துடன் ரோஜா மாலையும் கழுத்துமாக பூரிப்புடன் அமர்ந்திருந்தாள். மாப்பிள்ளையோ முகமெல்லாம் பல்லாக ரோஜா மாலையுடன் வருவோர் போவோரிடமெல்லாம் கைகுலுக்கிக்கொண்டு பிஸியாக இருந்தான்.

எங்களைக் கண்டதும் ஒரு பெருங்கூட்டம் சூழ்ந்துகொண்டு ஆர்வத்துடன் நலம் விசாரித்தது மகிழ்ச்சியாக இருந்தது. அம்மாவுக்கு அதைவிட மகிழ்ச்சி. சொந்தங்களைப் பார்த்ததும் பழைய நினைவுகள் எல்லாம் கரை புரண்டு ஓடின.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நான் அன்றுதான் பல உறவினர்களை முதன்முதலாகப் பார்த்தேன். நன்றாக எண்ணெய் தேய்த்த முடியை கையாலேயே வாரி கொண்டையாகப் போட்டு, மல்லிகை சூடி, மஞ்சள் முகங்களில் குங்குமப் பொட்டு வைத்து, பின்பக்கம் கொசுவம் வைத்த சேலை கட்டிச் சிரித்த முகத்துடன் சத்தமாக பேசியபடியே வளையவந்தனர் பெண்கள். பட்டு வேட்டி சட்டையுடனும் பளீர் சிரிப்புடனும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது ஆண்கள் கூட்டம். அந்த இடம் முழுக்க நகர்ப்புற வாசனை மறைந்து கிராமத்து மணம் வீசி மனதை ரொம்பவே கிறங்கடித்தது.

நான் இப்படி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தபோதே எல்லோரையும் சாப்பிட அழைத்தார்கள். டைனிங் ஹாலில் மர பெஞ்சு, மர டேபிள் போட்டிருந்தார்கள். மண் தரை சாணம் தெளிக்கப்பட்டு ஈரமாக இருந்தது. கலர் பொடிகளால் பெரிதாகக் கோலம் போட்டிருந்தார்கள். ஆட்கள் அமர அமர கேட்டுக் கேட்டு இட்லி, இடியாப்பம், கேசரி, சப்பாத்தி, குருமா, சாம்பார், தேங்காய்ச் சட்னி, வடை என்று சத்தமாகப் பேசிக்கொண்டே வைத்தார்கள். பேச்சுச் சத்தம், மைக்கில் பேசும் சத்தம், பாட்டுச் சத்தம், பாத்திரங்கள் சத்தம் என அந்தப் பகுதியைச் சத்தம்தான் ஆண்டுகொண்டிருந்தது. ஆனால், கொஞ்சம்கூட எரிச்சல் தரவில்லை. காதுக்கு இனிமையாக இருந்தது.

எத்தனையோ உறவினர்களை அறிமுகப்படுத்திய சித்தப்பா, மணப்பெண்ணின் தாயை அறிமுகப்படுத்தவில்லை என்று அப்போதுதான் ஞாபகம் வந்தது. உடனே, “பானுவோட அம்மா எங்க சித்தப்பா? நான் இன்னும் அவுங்கள பார்க்கலை” என்ற என் கேள்வி சித்தப்பாவை அதிர்ச்சியடையவைத்தது. “என்ன கேக்கறமா நீ? தாலி அறுத்தவுங்க எப்படிக் கல்யாணத்துக்கு வருவாங்க? அது அபசகுனம் இல்லையா?”, அவர் சொன்னது எனக்குப் புரியவே சில நிமிடங்கள் பிடித்தது. அப்படியே உறைந்து போனேன்.

பெற்ற தாய் ஒரு பெண்ணுக்கு அபசகுனம் ஆவாரா? ஆக முடியுமா? என்ன ஒரு முட்டாள்தனமான நம்பிக்கை இது. திடீரென்று என் முன்னே இருந்த அனைவருமே காணாமல் போனார்கள். முகம் தெரியாத அந்த அம்மா மட்டும் தனியே தெரிந்தார். அவர் தன்னந்தனியே கணவர் துணை இல்லாமல் சோறு ஊட்டியபோது, “நீங்கள் ஊட்டாதீர்கள், அது அபசகுனம். நாங்கள் ஊட்டுகிறோம்” என்று யாராவது சொல்லியிருப்பார்களா? அவர் மகளைப் பள்ளிக்கு அனுப்பிய காலத்தில், “நீங்கள் படிக்க வைக்காதீர்கள், அது அபசகுனம். நாங்கள் படிக்கவைக்கிறோம்” என யாராவது முன்வந்திருப்பார்களா?

அதுகூட வேண்டாம். “கணவர் இல்லாத நீங்கள் அனுப்பிய நகைகள் அபசகுனம். சீர்செனத்திகள் அபசகுனம், அதனால் வேண்டாம்” என்று யாராவது திருப்பியனுப்பினார்களா? பெருமையாக எல்லோர் பார்வையிலும் படும்படிதானே அவற்றையெல்லாம் அடுக்கி வைத்திருக்கிறார்கள்? இந்தப் பாத்திரம் பண்டத்தில் வராத அபசகுனம் அந்த அம்மா நேரில் வந்தால் மட்டும் வந்துவிடுமா?

இதுவே அந்தப் பெண்ணின் அப்பா உயிருடன் இருந்து அம்மா இல்லாமல் இருந்திருந்தால் நிலைமையே தலை கீழாக அல்லவா இருந்திருக்கும்! அவரே முன்னின்று எல்லாவற்றையும் நடத்தியிருப்பார். கூடவே புது அம்மாவும் நின்றிருப்பார். “தாயில்லாத பெண்ணை நல்லா படிக்கவச்சு எப்பிடி கட்டிக் குடுத்துருக்கான் பாரு” என்று அவரைச் சகட்டுமேனிக்குப் புகழ்ந்து தள்ளியிருப்பார்கள். என்னவொரு விந்தையான உலகம் இது! உறவுகளை நல்ல முறையில் பேணி மகிழ்ச்சியாக வாழத்தெரிந்த இந்த மக்களுக்கு, ஒரு பெண்ணின் துயரம் மட்டும் புரியாமல் போனது எப்படி? பெற்ற மகளின் திருமணத்தைக் கண்குளிரப் பார்க்கமுடியாமல் அந்தத் தாயின் மனம் எப்படித் தவித்திருக்கும்? இன்னும் நெருடிக்கொண்டுதான் இருக்கிறது அந்த நிகழ்வு.

- ஜே .லூர்து, மதுரை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x