Published : 29 Jul 2017 06:11 PM
Last Updated : 29 Jul 2017 06:11 PM

அகம் புறம்: சாப்பிடக்கூட அதிகாரம் தேவை!

ணவர், குழந்தைகள், வீட்டுப் பெரியவர்கள் உட்பட அனைவருக்கும் உணவைப் பரிமாறிவிட்டு கடைசியாக மிச்சமானதைப் பெண்கள் சாப்பிடும் பழக்கம் இந்தியக் குடும்பங்களில் காலங்காலமாக இருந்துவருகிறது. இந்த வழக்கத்தால் பெண்கள் மோசமான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுகிறார்கள்.

ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கான அடிப்படைக் காரணம் வறுமை என்று நம்புகிறோம். ஆனால், ஏழைக் குடும்பங்களில் ஆண்களைவிட அந்தக் குடும்பத்தின் பெண்களும் குழந்தைகளும் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் இருக்கிறார்கள். இதற்கான காரணத்தைக் கண்டறிய ஃபிரீடம் ஃபிரம் ஹங்கர் இந்தியா, கிராமீன் ஆகிய அறக்கட்டளைகள் ஆய்வு நடத்தின. பசியில் வாடும் பெண்களும் குழந்தைகளும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அதில் தெரியவந்தது.

குடும்பத்தின் அச்சாணியாக ஆணை மட்டுமே ஏற்றுக்கொண்டு, அவர்களுடைய தேவைக்கு மட்டுமே முதலிடம் தரும் தந்தைவழிச் சமூக முறையே இந்தச் சிக்கலின் ஊற்று. ஆய்வில் விடை கண்டறியப்பட்ட பிறகு, அதை மாற்றுவதற்கான பரிசோதனை முயற்சியிலும் இந்த அமைப்புகள் இறங்கின. அதன் விளைவே ‘ராஜஸ்தான் ஊட்டச்சத்துத் திட்டம்’. இரண்டாண்டுகளாக நடைபெற்றுவரும் இந்த முயற்சியின் விளைவாக ராஜஸ்தானில் உள்ள சிரோஹி, பன்ஸ்வாரா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பழங்குடிப் பெண்களின் ஆரோக்கியம் மேம்பட்டிருக்கிறது.

புதிய அணுகுமுறை

குடும்பத்தில் அதிகாரம் செலுத்த முடியாத பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் குறைந்த அளவிலேயே உணவு கிடைக்கிறது. இதனால் அவர்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கு ஆளாகிறார்கள். எனவே, ஏழ்மை மட்டுமே ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கான காரணம் என்கிற முடிவிலிருந்து அடுத்த தளத்துக்கு நகர வேண்டிய அவசியம் இருக்கிறது. எனவே, கூடுதல் உணவுப் பண்டங்களை வழங்குவது என்கிற வழக்கமான திட்டத்திலிருந்து விலகி, குடும்பத்தில் ஆணை மையப்படுத்தும் போக்கை அசைத்துப் பார்க்க முடிவெடுத்தன இந்த அமைப்புகள்.

அதில் முதல் கட்டமாக, உணவைப் பெண்கள் பரிமாறும் வழக்கத்துக்கு மாறாக, உணவைப் பகிர்ந்து அளித்துக் குடும்பத்தினரோடு சேர்ந்து பெண்களும் குழந்தைகளும் சாப்பிடும் யோசனை முன்வைக்கப்பட்டது. ஊட்டச்சத்தை அதிகரிக்கக் கூடுதலாகக் காய்கறிகளையும் பழ வகைகளையும் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளும் ஆலோசனையும் முன்வைக்கப்பட்டது. தினசரிச் சாப்பாட்டுக்கே அவதிப்படும் பழங்குடியினப் பெண்களால் இதைக் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. அதனால் வீட்டுத் தோட்டம் போட அவர்களுக்கு விதைகள் வழங்கப்பட்டன. அதற்குத் தேவையான தண்ணீரை மாற்றுச் சுழற்சி முறை மூலம் பெறும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. இதைப் பின்பற்றியதால் பச்சைக் காய்கறிகள், கீரை ஆகியவற்றைச் சாப்பிடும் அளவு தற்போது 344 சதவீதம் அதிகரித்துள்ளது. பால் அருந்தும் அளவு 70 சதவீதம் அதிகரித்துள்ளது.

சுயசார்பு தேவை

இந்தத் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவர, ஆண்களை எதிரிகளாகப் பாவிக்காமல் பாலினச் சமத்துவத்தின் முக்கியத்துவம் அவர்களுக்கு மறைமுகமாகப் புரியவைக்கப்பட்டது. இதன் விளைவாக 403 பெண்களிடம் தொடங்கப்பட்ட இந்தச் சோதனை முயற்சி, தற்போது 30 ஆயிரம் பேரைச் சென்றடைந்துள்ளது. இந்த ஆய்வில் பங்கேற்ற 31 சதவீதத்தினர் குடும்ப உறுப்பினர்களில் யாருக்கு எவ்வளவு உணவு அளிக்க வேண்டும் என்பதை கணவர் தீர்மானிப்பதாகத் தெரிவித்திருந்தனர். புதிய திட்டத்தின்படி இருவரும் இணைந்து முடிவெடுக்க வலியுறுத்தப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் பகுதியைச் சேர்ந்த குடும்பங்களில் 3 சதவீத ஆண்கள் மட்டுமே தன்னிச்சையாக உணவுப் பகிர்வை முடிவுசெய்கிறார்கள்.

இந்த ஆய்வு நடத்தப்பட்ட காலகட்டத்தில், இந்தக் குடும்பங்களின் பொருளாதார நிலையிலோ உணவு கிடைக்கும் தன்மையிலோ எந்த முன்னேற்றமும் இருக்கவில்லை என்பது கவனத்துக்குரியது. இருந்தபோதும் பெண்களும் குழந்தைகளும் இதனால் பலனடைந்துள்ளனர். தன்னிச்சையாக குடும்பப் பொறுப்புகளில் முடிவெடுக்கும் அதிகாரம் படைத்த பெண்களில் 39 சதவீதத்தினருக்கும், அவர்களுடைய குழந்தைகளில் 42 சதவீதத்தினருக்கும் போதுமான உணவு கிடைத்திருக்கிறது. இதற்கு எதிர்நிலையில் அதிகாரம் மறுக்கப்பட்ட பெண்களில் 12 சதவீதத்தினருக்கும் அவர்களுடைய பிள்ளைகளில் 17 சதவீதத்தினருக்கும் மட்டுமே சரிவிகித உணவு கிடைத்துள்ளது.

ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஒழிக்கும் போராட்டத்தின் முதல் தேவை பெண்களின் சுயசார்பு உணர்வும் குடும்பத்தில் முடிவெடுக்கும் அதிகாரமும்தான் என்பது இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x