Published : 30 Jul 2017 12:24 PM
Last Updated : 30 Jul 2017 12:24 PM
பெ
ண்கள் மீது தொடர்ந்து ஏவப்படும் பாலியல் வன்முறை குறித்து ஜூலை 23 அன்று வெளியான ‘பெண் இன்று’ இணைப்பிதழில் எழுதியிருந்தோம். பெண்கள் மீதான வன்முறை இல்லாத, பாலின சமத்துவம் நிறைந்த சமூகம் உருவாக என்ன செய்ய வேண்டும் என்று கேட்டிருந்தோம். பெண்களுக்குத் தற்காப்புக் கலை, தனிமனித ஒழுக்கம், குழந்தை வளர்ப்பு, குற்றங்களில் ஈடுபடுவோருக்குக் கடுமையான தண்டனைகள் போன்றவற்றைப் பலரும் தீர்வுகளாகச் சொல்லியிருந்தார்கள். ஆபாசங்கள் மலிந்து கிடக்கும் சமூக வலைத்தளங்களும் ஊடகங்களும் பெண்கள் மீதான வன்முறைக்கு முக்கியக் காரணம் என்றும் சிலர் சுட்டிக்காட்டியிருந்தனர். அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதங்கள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
பசுவுக்குக் கொடுக்கிற முக்கியத்துவம்கூட இந்த நாட்டில் பெண்களுக்கு இல்லை.பெண் என்பவள் அடங்கிப்போக வேண்டியவள் அல்ல. அவளும் சக உயிர்தான். சமமாகத்தானே மதிக்க வேண்டும்? அதைப் பெண்கள் தங்கள் கணவனுக்கும் மகனுக்கும் உணர்த்த வேண்டும்.
- ராஜபாபு, கும்பகோணம்.
பெண்களுக்கு நடக்கும் பாலியல் கொடுமைகளுக்குச் சமூகம் மட்டும் காரணமல்ல. பெற்றோருக்கும் அவற்றில் பங்கு உண்டு. ஆண் மகனுக்குத் தருகிற அனைத்து வசதியையும் சுதந்திரத்தையும் பெண்ணுக்கும் தந்து இருவரும் சமம் என்கிற உணர்வை அவர்கள் மனத்தில் ஏற்படுத்த வேண்டியது பெற்றோரின் கடமை. ஒரு ஆண், தன் வீட்டில் வளரும் பெண்ணை மதிக்க ஆரம்பிக்கும்போது வெளியில் சந்திக்கும் பெண்களையும் அதே கண்ணோட்டத்தில் பார்க்க ஆரம்பிப்பான். பெண்களுக்குத் தன்னம்பிக்கையோடு ஆபத்துக் காலத்தில் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதைக் கற்றுத்தர வேண்டியதும் நம் கடமை.
- பானு பெரியதம்பி, சேலம்.
திரைப்படங்களில் பெண்களைக் கேவலப்படுத்தும் வசனங்களையும் காட்சிகளையும் தடைசெய்ய வேண்டும். பெண்களை மிக மோசமான வார்த்தைகளால் குறிப்பிடுவதையும் நிறுத்த வேண்டும். பெண்களுக்குத் தங்களைத் தாங்களே காப்பாற்றிக்கொள்ளும் துணிவு வேண்டும். அறிமுகம் இல்லாதவர்களோடு முகநூலில் பேசுவதைத் தவிர்க்கலாம். யாராவது தொந்தரவு செய்தால் பெற்றோர்களிடம் சொல்லிவிடுவது நல்லது. அரசு குற்றவாளிகளுக்கு உடனடியாகத் தண்டனை வழங்க வேண்டும்.
- வீ.ரத்னமாலா,சென்னை.
பெண்கள்மீது நிகழ்த்தப்படும் வன்புணர்வுகளுக்குத் தண்டனையைக் கடுமையாக்க வேண்டும். குற்றங்கள் ஆறு மாதத்துக்குள் விசாரிக்கப்பட்டுத் தீர்ப்பளிக்கப்பட வேண்டும். நடக்கும் சம்பவங்கள் எல்லாம் நம்மை ஆள்வோரின் மனசாட்சியைத் தட்டியெழுப்புவதாகத் தெரியவில்லை. பாதிக்கப்பட்ட பெண்களைக் குற்றம் சொல்வதும் உடைகளைக் காரணம் காட்டுவதுமான விசித்திரத் தீர்வுகளே அவர்களின் முட்டுச்சந்து மூளையில் உதிக்கின்றன. நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும்போதுதான், பெண்களுக்கான சட்ட வரைவுகள் வலுப்பெறும். நாளொரு உடை தினமொரு சடை எனப் பெண் குழந்தைகளை அழகுப் பதுமைகளாக வளர்ப்பதை நிறுத்த வேண்டும். ‘ஒரு ஆணுக்கு மனைவியாகப் போகிறவள்தானே’என்ற அடிப்படையில் பெண் குழந்தைகளை வளர்க்காமல் சமத்துவ எண்ணத்தை விதைத்து வளர்க்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பாலின சமத்துவம் குறித்த பயிலரங்குகள் நடத்தப்பட வேண்டும்.
- ஜி.அழகிரிசாமி,செம்பனார்கோயில்.
பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் நிர்பயா சம்பவத்துக்குப் பிறகு அதிகரித்திருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், அதற்குப் பிறகுதான் இத்தகைய சம்பவங்கள் வெளியே வந்திருக்கின்றன. குற்றங்கள் மட்டும்தான் வெளிப்பட்டிருக்கின்றனவே தவிர, அதற்கான தீர்வுகள் இன்னும் எட்டப்படவேயில்லை.
குடும்பத்தில் காட்டப்படும் பாலினப் பாகுபாடு எப்போது மாறுகிறதோ அப்போதுதான் பெண்கள்மீது கட்டவிழ்க்கப்படும் வன்முறை குறைவதற்கான சாத்தியம் ஏற்படும். ஒரு பெண் பொதுவெளியில் மட்டுமல்ல வீட்டிலும் இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என்று இந்தச் சமூகம் வரையறுத்துள்ளது. அதற்கு இணங்காத பெண்கள் ‘குடும்பப் பெண்’ இல்லை என்றும், அது வியாக்கியானம் பேசுகிறது. பெண்களை வன்புணர்வு செய்வதுதான் அவர்களை அடக்கச் சரியான முறை என்ற கோணல்புத்தி எப்போது மாறும்?
பெண்கள் எப்போதும் யாரையும் முழுதாக நம்பிவிடக் கூடாது. தன்னைக் காத்துக்கொள்ளும் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். மீறி ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் சட்டரீதியான உதவியைப் பெறத் தயங்கக் கூடாது. இத்தகைய பாதிப்புக்கு உள்ளான பெண்களைச் சமூகமும் இகழ்ச்சியாகப் பார்க்கக் கூடாது. அவர்களை ஒதுக்கக் கூடாது.
- தேஜஸ், கோவை.
சட்டத்தால் ஓரளவுக்குத்தான் பெண்களைப் பாதுகாக்க முடியும். பெண்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக்கொண்டாலும் இதில் ஆண்களின் பங்கு முக்கியமானது. பெண்கள் சுதந்திரமாகவும் நிம்மதியுடனும் வாழ ஆண்களின் பங்கும் அவசியம். தனிமையில் ஆண்கள், பெண்களிடம் பழகும் முறைதான் ஆண்களின் மீது நம்பிக்கையை உருவாக்கும்.
- ஜீவன்,கும்பகோணம்.
தண்டனைகள் கடுமையாக்கப்பட்டால்தான் தவறு செய்ய நினைக்கிறவர்களுக்கும் பயம் வரும். அந்தப் பயமே பெண்கள் மீதான வன்முறைகளைக் குறைக்கக்கூடும். பெண்கள் தங்களுக்கு நேரும் கொடுமைகளை வெளியில் சொல்லும் அளவுக்கு அவர்களைத் துணிச்சலுடன் வளர்க்க வேண்டும். பாதிப்புக்குள்ளான பெண்களைச் சமூகம் கரிசனத்துடன் நடத்த வேண்டும்.
- உஷா முத்துராமன், திருநகர்.
தொலைக்காட்சியில் ஒரு சோப்பு விளம்பரத்தைப் பார்த்தேன். அலுவலகத்தில் இருந்து அப்பா வராததால் தன்னை டியூஷனுக்கு அழைத்துச் செல்லும்படி அம்மாவை அழைக்கிறாள் ஒரு சிறுமி. அந்த அம்மாவோ தன் மகளை கராத்தே வகுப்பில் சேர்க்கிறார். சில நாட்களில் அந்தப் பெண்ணைத் தனியாக டியூஷனுக்கு அனுப்புகிறார். இது விளம்பரமாக இருந்தாலும், ஒரு சிறுமிக்குள் தைரியத்தை வளர்க்க கராத்தே என்ற கலை ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், எல்லோராலும் இப்படிச் செயல்பட முடியாது என்பதால் சூழலுக்கு ஏற்ற மாதிரி சாமர்த்தியமாக நடந்துகொள்ளப் பழக்கப்படுத்த வேண்டும்.
மாணவர்களுக்குப் பதின் பருவத்தில் பாலியல் குறித்த புரிதலை ஏற்படுத்த வேண்டும். மாணவ, மாணவிகளுக்கு அந்தப் பருவத்தில் ஏற்படும் மாற்றங்களை உளவியல் ஆலோசகரின் துணையோடு விளக்க வேண்டும்.
- வீ.சக்திவேல்,தே.கல்லுப்பட்டி.
ஊடகங்கள் பெண்களைக் கவர்ச்சிப் பொருளாகவும் போகப் பொருளாகவும் சித்தரிப்பதைக் கண்டிக்க வேண்டும். தேவையற்ற கற்பனைகளையும் கனவுலகச் சிந்தனைகளையும் விட்டு வெளியே வந்து, தன் உடல், மனம் இரண்டையும் பாதுகாக்கும் அவசியத்தைத் தன் பெண் குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டியது பெற்றோரின் கடமை. பள்ளிகளில் பாடத்தோடு பாலியல் கல்வியும் போதிக்க வேண்டும். பெண்ணின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பாடத்திட்டங்கள் மாற்றப்படவேண்டும்.
- சு.மலர்விழி,கோவை.
எனக்கு நான்கு வயதாக இருந்தபோது, என் தங்கை பிறந்தாள். அடுத்து ஒரு தம்பி, நான்கு தங்கைகள். எனக்கு நினைவு தெரிந்த நாள்முதல் எங்கள் தந்தையும் தாயும் எங்கள் ஏழு பேரையும் எப்படி ஆண், பெண் வித்தியாசம் பார்க்காமல் வளர்த்தார்கள் என்பதை நினைத்தால் இப்போதும் வியப்பாக உள்ளது. ஆண் குழந்தைகளைவிட பெண் குழந்தைகளை ஒருபடி மேலாக வளர்த்தார்கள். என் அப்பா கடைசி மூன்று தங்கைகளைக் குளிப்பாட்டி, உடை உடுத்த வைத்தது இன்றும் நீங்காமல் நினைவில் உள்ளது.
தற்போது எனக்கு எண்பது வயது. எங்கள் குடும்பம் ஓர் ஆலமரம்போல் பரந்து விரிந்து செயல்பட பாலினம் பார்க்காமல் எங்களை வளர்த்த எங்கள் தாய், தந்தையே காரணம். வளர்க்கும் பொறுப்பைச் சரிபாதி கணவனும் ஏற்றுக்கொண்டால் இந்தப் பிரச்சினையே வராது. குழந்தைப் பருவத்திலிருந்தே ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் சமமானவர்கள் என்ற எண்ணத்தில் நாம் அவர்களை வளர்க்க வேண்டும். அப்படிச் செய்வதால் இளமையிலேயே அவர்கள் உள்ளத்திலும் பாலின சமத்துவம் ஆழமாகப் பதிந்துவிடும். பெண்களும் பெண் குழந்தைகளை வெறுக்கும் எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.
இன்று படிப்பிலிருந்து விளையாட்டுத் துறைவரை எல்லாவற்றிலும் பெண்கள் முந்துகிறார்கள் என்பது எவ்வளவு மகிழ்ச்சியான செய்தி! வன்முறையை வாய்மூடி ஏற்கும் நிலையில் பெண்கள் இருக்கக் கூடாது. பெண்களைப் பாலியல்ரீதியாகத் துன்புறுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஆண் வர்க்கம் உருவாகவே கூடாது.
- மா.பத்மாதேவி, கிருஷ்ணகிரி.
நாகரிகம் என்ற போர்வையில் அநாகரிகமாக நடந்துகொள்ளும் ஈனர்களிடமிருந்து பெண்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள கராத்தே, குத்துச்சண்டை, கம்புச்சண்டை, வாள்வீச்சு போன்ற தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொள்ள வேண்டியது காலத்தின் தேவை. பெண்கள் பாதுகாப்புகெனத் தனிச் சட்டங்கள் இருக்கத்தான் செய்கின்றன. எத்தனை சட்டங்கள் இருந்தாலும் நாட்டில் தனிமனித ஒழுக்கம் வளராதவரை பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியே. எனவே, தனிமனித ஒழுக்கத்தை மக்களிடையே வளர்த்தெடுக்க வேண்டியது, பெண்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது, பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் தார்மீகப் பொறுப்பு.
- சீ.லட்சுமிபதி, சென்னை.
பாலியல் வன்முறை வழக்குகள் நீதிமன்றங்களுக்கு வரும்போது மனசாட்சியுள்ள எந்த வழக்கறிஞரும் இவர்களின் வழக்குகளை ஏற்று நடத்தக் கூடாது. பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களை இந்தச் சமூகம் பரிவோடும் பாசத்தோடும் நடத்த வேண்டும். அனுதாபப்படுவதோ பாவப்படுவதோ தேவையில்லை. அவர்களுக்குத் தைரியமூட்டுவதே நமது முதல் கடமையாக இருக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட பெண்களை ஒதுக்கிவைப்பதையும், ஒரு மாதிரியாகப் பார்ப்பதையும்விட பாவச் செயல் எதுவுமில்லை. பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான சட்டங்கள் இன்னமும் கடுமையாக்கப்பட வேண்டும். விரைவு நீதிமன்றங்கள் இந்த வழக்குகளை விசாரித்து, கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
பெண்கள் மட்டுமல்ல; பெருமளவில் ஆண்களும் இணைந்து இது போன்ற கொடுமைகளை எதிர்க்க வேண்டும். இந்த மாதிரி வன்முறையைப் பெண்களுக்கு எதிரானது என்று மட்டும் பார்க்காமல் மனித குலத்துக்கு எதிரான வன்முறையாகப் பார்க்க வேண்டும்.
இந்த வன்முறையை எதிர்கொள்வதற்கும் தடுப்பதற்கும் உரிய பயிற்சிகள் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பாடங்களாக நடத்தப்பட வேண்டும்.
- பொன்.கருணாநிதி, கோட்டூர்.
பெண்கள் மீதான பாலியல் வன்முறையில் ஈடுபடும் குற்றவாளிகளைச் சட்டம் ஒரே தரத்தில் வைத்துப் பார்ப்பதில்லை. எளியவன் செய்தால் சிறை தண்டனை கிடைக்கிறது. வலியவன் தவறு செய்துவிட்டாலோ சட்டத்தின் ஓட்டைகளும் பணமும் மிரட்டலும் கைகொடுத்து காப்பாற்றிவிடுகின்றன. இந்த நிலை மாற வேண்டும். பெண்கள் பயணிக்கும்போது தற்காப்புக் கருவிகளுடன் பயணம் செய்ய வேண்டும்.
- மா.தங்காகண்மணி, ஆத்தூர்.
எந்தெந்தத் துறைகளில் எல்லாம் பெண்களைக் காட்சிப் பொருளாக்கிப் பணம் ஈட்ட முடியுமோ அதிலெல்லாம் பெண்களை வக்கிரமாக்கி, ஆண்கள் மனதில் வன்மத்தை வேரூன்றச் செய்துவிடுகின்றனர். பெண்களை உடலாக மட்டும் பார்க்காமல் அவர்களை சக மனுஷியாகப் பார்க்கும் மனோபாவத்தை உருவாக்க வேண்டும்.
- எம்.சுதாமதி பிரபு, தேனி.
பெற்றோர்கள் ஆண், பெண் வளர்ப்பில் சமத்துவம் காட்ட வேண்டும். பெண்கள் வாழ்நாள் முழுவதும் ஆண்களின் பராமரிப்பிலும் பாதுகாப்பிலும் இருக்க வேண்டும் என்ற மனநிலை களையப்பட வேண்டும். பெண்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஆண் பிள்ளைகளின் மனத்தில் சிறுவயதிலேயே பெற்றோர் அழுத்தமாகப் பதியவைப்பது அவசியம். பாலியல் தொல்லைக்கு ஆளாகும் பெண்கள், குழந்தைகளின் பெற்றோர் அதை அவமானமாகக் கருதாமல், குற்றம் செய்வருக்குத் தண்டனை பெற்றுத்தர போராட வேண்டும். அதற்குச் சமுதாயமும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
- பார்வதி கோவிந்தராஜ், திருத்துறைப்பூண்டி.
அதிகரித்துவரும் பெண்கள் மீதான பாலியல் வன்முறையில் இருந்து பெண்களைக் காப்பாற்ற அனைத்துப் பள்ளிகளிலும் தற்காப்புக் கலை கற்றுத் தருவதை ஒரு பாடமாகக் கொண்டுவர வேண்டும்.
- ச.சாயிசுதா, நெய்வேலி.
பாலியல் வன்முறையில் ஈடுபடும் குற்றவாளிகளை விரைவு நீதிமன்றங்களில் ஆஜர்படுத்த வேண்டும். அவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு, ஜாமீன் வழங்குவது ரத்து செய்யப்பட வேண்டும்.
- அம்பூரணி ச.நாராயணன், பாளையங்கோட்டை.
பெண் என்றாலே குடும்ப கவுரவத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்புக்கு மட்டுமே உரித்தானவள் என்கிற பிற்போக்குத்தனமான அறிவுரையைச் சொல்லி அவளின் அடிப்படைச் சுதந்திரத்தைப் பறித்துக்கொள்ளும் ஆணாதிக்கக் குடும்ப அமைப்பு மாற்றப்பட வேண்டும்.
- பா.சுபிசுதா, வேலூர்.
பெண்களைச் சீண்டுவோரைப் பொது இடத்தில் வைத்துப் பெண்களே தண்டிக்க வேண்டும். பெண்கள் அமைப்பு ரீதியாக ஒன்றுதிரள வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்குப் பெண்கள் மட்டுமல்லாமல் சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் ஒன்றாகப் போராடினால் மட்டும்தான் தீர்வு கிடைக்கும்.
- சி.செல்வராஜ், புலிவலம்.
பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்குக் காரணமாக இருப்பதில் முக்கியமானவை வலைத்தளங்கள். இன்றைய மாணவர்கள் கையில் பேனா இருக்கிறதோ இல்லையோ அனைவரிடத்திலும் கைபேசி உள்ளது. வலைத்தளங்களில் உலாவும் தவறான காட்சிகளையும் செய்திகளையும் முறைப்படுத்துவது காலத்தின் கட்டாயம். அரசு இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
- எஸ்.பிரபு, தேனி.
பசுக்களுக்குக் கொடுக்கும் பாதுகாப்பு, பாரதப் பெண்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. பக்தி இல்லாவிட்டால் ஒன்றுமில்லை. ஆனால், தனிமனித ஒழுக்கம் இல்லாவிட்டால் எல்லாமே இழப்புதான் என அன்றே பெரியார் சொன்னார்.
- முகமது இஸ்மாயில், தேவகோட்டை.
சிலந்தி வலையில் சிக்கிக்கொண்ட ஈயின் நிலைதான் இன்றைய பெண்களின் நிலை. இடையூறுகளைத் தவிர்த்து இறுதிவரை வாழ வேண்டும் என்பதால் பெண்களுக்குத் தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொடுப்பது அவசியம்.
- எஸ்.கவிபிரதா பிரபு, தேனி.
பெண்களைப் பாதுகாக்கப் பல சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும் ஒவ்வொரு பெண்ணும் தன்னைத்தானே மனதளவிலும் உடலளவிலும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். தனக்கு நேரும் கொடுமைகளை எதிர்த்துப் போராட முன்வர வேண்டும். ஆண் குழந்தைகளின் மனதில் பெண்களைப் பற்றிய உயர்வான எண்ணங்களை பெற்றோர் போதிக்க வேண்டும்.
- வெ.ஜெயலட்சுமி, கோவை.
ஒருவர் தன் மனைவியைத் தனக்குச் சமமாக நடத்தாமல், அவரை அடிமைபோல நடத்தினால், அதைப் பார்த்து வளரும் பிள்ளைகளுக்கு ஆணுக்குப் பெண் அடிமை என்றும், பெண்ணை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றும்தான் தோன்றும்.
பண்பாடு என்பது மனிதனை மேம்படுத்தத்தான். அதன் போர்வையில் ஒளிந்துகொண்டு மற்றவரை அடிமைப்படுத்த அல்ல. பெண்களைத் தெய்வமாக மதிக்கும் கலாச்சாரம் நம்முடையது என வெளியில் சொல்லிக்கொண்டு, யாரும் பார்க்காத நிலையில் பெண்களை மிகக் கீழ்த்தரமாக நடத்தும் வெற்று கலாச்சாரப் பெருமை எதற்கு?
பெண்ணைத் தெய்வமாகப் பார்ப்பதற்கு முன், முதலில் உயிருள்ள மனுஷியாகப் பார்ப்பதே ஆணின் முதல் கடமை.
- ரா.ஷ்ரவண்யா,சென்னை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT