Published : 25 Sep 2016 11:50 AM
Last Updated : 25 Sep 2016 11:50 AM

கேளாய் பெண்ணே: செல்போனே கதியெனக் கிடக்கிறாளா மகள்?

கல்லூரி முதலாமாண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறாள் என் மகள். தேவையைக் கருதி அவளுக்கு மொபைல் வாங்கிக் கொடுத்தோம். ஆனால் கல்லூரி முடித்து வந்தபின் கையில் எடுத்தால், கீழே வைப்பதே இல்லை. சதா சர்வகாலமும், அதையே நோண்டிக்கொண்டிருப்பதைப் பார்த்தால் கவலையாக இருக்கிறது. என்ன செய்து அவளை அதிலிருந்து மீட்பது?

- மனோ, மன்னார்குடி

பிருந்தா ஜெயராமன், மன நல ஆலோசகர்.

பள்ளியில் படிப்பு படிப்பு என்று இருந்த ஆண்/பெண் யாராக இருந்தாலும் அவர்களுக்குக் கல்லூரி வந்தவுடன் திடீர் சுதந்திரம் கிடைக்கிறது. அது தரும் மகிழ்ச்சியை அவர்கள் முழுதாக அனுபவிக்க நினைப்பார்கள். கல்லூரி முடிந்து வந்ததும் உங்கள் மகளிடம் நண்பர்கள், கல்லூரி அனுபவம் எனப் பொதுவான விஷயங்களைக் கேட்டறியுங்கள். கண்காணிப்பது போல் இல்லாமல் நட்புறவுடன் பேசுங்கள். ஓவர் ரியாக்ட் செய்தால் அவளுடைய மனம் புண்பட்டுவிடும். ஆலோசனைகள் உறைக்காது, கோபம் வரும்.

அம்மா தன் அந்தரங்கத்தை நோண்டுகிறாள் என்ற எண்ணம் வராமல், அவளுக்கு நெருக்கமான உறவினரை அழைத்து, அவர் மூலம் உலகில் நடக்கும் குற்றங்கள் குறித்து அறியச் செய்யுங்கள். அவள் மீது நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையைத் தெரியப்படுத்துங்கள். கவலை கொள்ளாமல், முடிந்தால் தன்மையாகப் பேசி அவள் மனதைப் புரிந்து கொண்டு, உங்கள் பயத்தைத் தெரியப்படுத்தலாம். தாய் - மகளுக்கு இடையேயான புரிதல் அனைத்தையும் சாத்தியமாக்கும்.



மழைக்காலத்தில் என்னால் அடிக்கடி தலைக்குக் குளிக்க முடியாது. தலைவலி, காய்ச்சல் வந்து தொல்லை தருகின்றன. இதிலிருந்து மீள என்ன வழி?

- சிநேகா, திருச்சி.

டி.மல்லிகா, சித்த மருத்துவர், காட்பாடி.

மழைக்காலத்தில் எப்போதும் நீரைக் கொதிக்கவைத்துக் குடித்துப் பழகுங்கள். காய்ச்சல் வந்தால் தான் நிலவேம்பு கஷாயம் குடிக்க வேண்டும் என்பதில்லை. தடுப்பு நடவடிக்கையாகக்கூடக் குடிக்கலாம். தலைமுடி ஈரமாக இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். நீர் கோத்துக்கொண்டு தலை வலித்தால், நொச்சி இலைகளைக் கொதிநீரில் போட்டு ஆவிபிடியுங்கள். தேங்காய் எண்ணெயில் கற்பூரத்தைப் போட்டுக் காய்ச்சி, அதை நெற்றியில் தடவலாம். தலைக்கு அடிக்கடி குளிக்க முடியாது என்றால், மருதாணி, நொச்சி இலைகளைத் துணியில் கட்டி, அதைத் தலையணை போல் வைத்துப் படுக்கலாம். உடல் சூடு தணியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x