Published : 19 Feb 2017 11:18 AM
Last Updated : 19 Feb 2017 11:18 AM
வறுமையின் கொடுமையால் ஹைதராபாத் - கர்நாடகா பகுதியின் ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த பதின்பருவச் சிறுமிகள் கட்டாய திருமண பந்தத்துக்குத் தள்ளப்பட்டு, சிறு வயதிலேயே தாய்மை அடைகிறார்கள். இவர்களின் குழந்தைப் பருவம் அழிக்கப்படுவதைப் பற்றிய உண்மை நிலவரம் இது.
பாரதியின் மடியிலிருக்கும் குழந்தையை அவளுடைய தம்பி என்று நினைத்து எளிதில் கடந்துவிட முடியும். அவள் அணிந்திருக்கும் புடவையும் ரவிக்கையும் அவளைப் பெண்ணாகக் காட்ட மறுக்கின்றன. கர்நாடகாவின் கலபுரகி நகரத்தில் துபாய் காலனி என்ற அலங்காரமான பெயரைத் தாங்கியிருக்கும் ஒரு நகர்ப்புற குடிசைப் பகுதியின் அங்கன்வாடி மையத்தில் பாரதி அமர்ந்திருந்தாள். அவளுடைய பெரும்பாலான தோழிகள் இப்போதுதான் பள்ளிப் படிப்பை முடித்திருக்கின்றனர். ஆனால், அவளோ தனக்கு எப்படித் திருமணமானது, குழந்தை பிறந்தது என்ற கதையைச் சொல்லிக்கொண்டிருக்கிறாள்.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன் சவலகி என்ற கிராமத்திலிருந்து வேலை தேடி இந்த நகருக்குக் குடிபெயர்ந்திருக்கிறது பாரதியின் நிலமற்ற குடும்பம். அவளுடைய அப்பாவுக்கு எலக்ட்ரீஷியன் வேலையும் அம்மாவுக்குக் கட்டிட வேலையும் கிடைத்திருக்கின்றன. ஆனால், இந்தக் குடிபெயர்தல் அவளது குடும்ப வளர்ச்சிக்குப் பெரிய அளவு உதவவில்லை. அவர்கள் வந்தபோது வசித்த அதே குடிசைப் பகுதியில்தான் இப்போதும் வசிக்கிறார்கள்.
நான்கு குழந்தைகளைக் கவனிக்க வேண்டி யிருந்ததால், கொஞ்சம் பணம் கிடைத்தவுடன் முதல் பெண்ணுக்குத் திருமணம் செய்து தன் கடமையை அவசரமாக முடித்திருக்கிறார் பாரதியின் அப்பா. அதனால் தன் உறவினர் ஒருவரோடு பதினேழு வயதுக்குள் பாரதிக்குத் திருமணமாகியிருக்கிறது. ஒரே ஆண்டில் அவளுக்குக் குழந்தை பிறந்தது.
“என் கணவர் நாகராஜுக்கும் சின்ன வயதுதான். அவருடைய வயதான அம்மா வீட்டைக் கவனிக்க ஒரு பெண் வேண்டு மென்று நினைத்தார்” என்கிறாள் பாரதி.
இந்த இரண்டு குடும்பங்களின் தேவைக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் முன்னுரிமை அந்தப் பெண்ணின் சம்மதத்திற்குக் கொடுக்கப்பட வில்லை. இந்தத் திருமணத்தைக் ‘கட்டாயத் திருமணம்’ என்று சொல்லத் தயங்கும் பாரதி கண்ணீரைத் துடைத்தபடி, “நாங்கள் ஏழையாக இருப்பதால் இந்தத் திருமணம் தேவையென்று சொல்லி என்னுடைய பெற்றோர் என்னைச் சம்மதிக்கவைத்தார்கள்” என்கிறாள்.
ஆறு மாவட்டங்கள், ஒரே கதை
பாரதியின் கதையைத் தனிச் சம்பவமாகப் பார்க்கமுடியாது. வட கர்நாடகப் பகுதியான ஹைதராபாத் - கர்நாடகாவின் ஆறு மாவட்டங்களிலும் (கலபுரகி, பல்லாரி, ராய்ச்சூர், பிதர், கோப்பல், யாத்கீர்) இப்படித்தான் நடக்கிறது. வறண்ட விவசாய நிலங்கள், கடுமையான கோடைகாலம், குறைவான மழை, ஏழ்மை போன்ற அம்சங்கள் இந்தப் பிரச்சினைக்கு அடித்தளமாக இருக்கின்றன. இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் சமூகப் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியிருக்கின்றனர். அதுதான் பாரதி மாதிரி ஆயிரக்கணக்கான சிறுமிகளைத் திருமண பந்தத்துக்குள் அவசரமாகத் தள்ளுகிறது. கர்நாடக மாநிலத்தின் சராசரி கல்வியறிவு 75.06 சதவீதம். ஆனால், இந்த ஆறு மாவட்டங்களில் ஒன்றுகூட இந்தக் கல்வியறிவு சதவீதத்தை எட்டவில்லை.
கர்நாடக அரசு, டி.எம். நஞ்சுண்டப்பா தலைமையில் அமைத்த பிராந்திய ஏற்றத்தாழ்வுகள் தீர்க்கும் உயர்மட்டக் குழு வெளியிட்ட அறிக்கை, 2002-ம் ஆண்டு இந்தப் பகுதியின் 31 தாலுகாக்களில் 21 தாலுகாக்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டவை என்று தெரிவிக்கிறது. தார்வாடு மாவட்டத்திலிருக்கும் பல்துறை மேம்பாட்டு ஆராய்ச்சி மையம், நஞ்சுண்டப்பா குழுவைப் பின்பற்றி இந்தப் பகுதிகளில் ஓர் ஆராய்ச்சி மேற்கொண்டது. அதில் 2014-ம் ஆண்டு, 31 தாலுகாக்களில் 23 தாலுகாக்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டவையாக இருப்பது தெரியவந்திருக்கிறது.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையும் இந்தத் தரவுகளை உறுதிப்படுத்து கிறது. 2016-ம் ஆண்டில் மட்டும் இந்த ஆறு மாவட்டங்களிலும் அரசு மருத்துவ மனைகளில் பத்தொன்பது வயதுகூட நிரம்பாத 1,600 பெண்களுக்குக் குழந்தை கள் பிறந்திருக்கின்றன. தனியார் மருத்துவ மனைகள், அமைப்புசாரா மையங்களில் நடைபெறும் பிரசவங்கள் போன்றவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகும்.
பிதர் மாவட்டத்தைச் சேர்ந்த தலித் தலைவர் கவிதா ஹுஷார், “ஒரு பதின்பருவ கருத்தரித்தல் மற்றும் பிரசவம் பதிவு செய்யப்படுகிறது என்றால் பதிவு செய்யப்படாத நூறு சம்பவங்கள் இங்கே நடக்கின்றன” என்கிறார். அரசு அதிகாரிகளும் இவரது கருத்தை ஆமோதிக்கின்றனர்.
“கடந்த ஆண்டு பிதர் மாவட்டத்தின் சுகாதார மையத்தில் பதின்பருவத்துப் பெண்கள் 125 பேருக்குப் பிரசவமாகியிருக்கிறது. இதே மாதிரி முக்கிய சுகாதார மையங்கள் ஒவ்வொன்றிலும் 125 பிரசவங்கள் நடந்திருந்தால் மொத்த எண்ணிக்கை இருபதாயிரத்தைத் தாண்டும்” என்கிறார் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர்.
“இந்தப் பகுதிகள் சமூக - பொருளாதார ரீதியாகப் பின்தங்கியிருப்பதால் குழந்தைத் திருமணங்களும், பதின்பருவப் பிரசவங்களும் அதிகமாக நிகழ்கின்றன. இந்தப் போக்கை மாற்றுவதற்கு வளர்ச்சித் திட்டங்கள், விழிப்புணர்வுத் திட்டங்கள் மூலம் மாநில அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது” என்கிறார் கலபுரகி பிரிவு பிராந்திய ஆணையர் அமலன் ஆதித்யா பிஸ்வாஸ்.
பாரதியின் கதையைப் போலத்தான் சவிதாவின் கதை யும் இருக்கிறது. கலபுரகியில் இருக்கும் ஷா பஜாரில் வசிக்கும் தலித் சமூகத்தைச் சேர்ந்த 23 வயது சவிதா, மூன்று குழந்தைகளுக்குத் தாய். ஏழு குழந்தைகளில் ஆறாவதாகப் பிறந்த இவர், ஏழ்மை காரணமாக ஏழாவது வகுப்போடு படிப்பை நிறுத்தியிருக்கிறார். தன்னைவிடப் பன்னிரண்டு வயது மூத்தவருடன் அவருக்குத் திருமணம் நடைபெற்றிருக்கிறது. “நான் செய்துகொண்ட திருமணம் சரியா, தவறா என்றெல்லாம் எனக்குத் தெரியாது. எப்படியோ வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது”என்று எந்த வித விருப்புவெறுப்பும் இல்லாமல் சொல்கிறார் சவிதா. அவருடைய இரண்டு குழந்தைகளும் அவரைச் சுற்றி விளையாடிக்கொண்டிருக்கின்றன.
வன்முறையைத் தூண்டும் ‘பாதுகாப்பு’
நாட்டில் விவசாய நெருக்கடி அதிகமாகிக்கொண்டிருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் அதிக எண்ணிக்கையில் கிராமப்புற மக்கள் வேலைகளை இழந்துவருகின்றனர். இதனால், விவசாயிகள் பெங்களூரு, மும்பை, கோவா, ஹைதராபாத் போன்ற பெருநகரங்களில் கட்டுமானப் பணிகளைத் தேடிக் குடிபெயர்கின்றனர். இவர்கள் வேறு பெருநகரங் களுக்குக் குடிபெயர்வதற்கு முன் தங்களுடைய மகள்களைத் திருமணம் செய்துகொடுப்பதைப் பாதுகாப்பாக நினைக்கின்றனர்.
குஜ்ஜார் திருமண வழக்கம் போன்றவற்றால் இந்தப் பகுதிகளில் இருக்கும் சிறுமிகளைப் பெற்றோர்களுக்குப் பணம் கொடுத்துத் திருமணம் செய்து குஜராத்துக்கு அழைத்துச் செல்கின்றனர். இந்த மாதிரியான சம்பவம் முதன்முறையாக மூன்று ஆண்டுகளுக்கு முன் அந்தப் பகுதியில் நடைபெற்றதாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இப்போது சட்ட அமலாக்க அமைப்புகள் இந்த நிகழ்வு களைத் தடுக்க முயற்சி எடுத்துவந்தாலும் சில பகுதிகளில் இவை தொடர்ந்து நடக்கத்தான் செய்கின்றன.
தகர்க்கப்பட்ட கனவுகள்
பதின்பருவத்தில் தாய்மார்களாக மாறி இருக்கும் இந்தப் பெண்கள் படித்து, பணிக்குச் செல்லும் கனவுகளுடன் இருக்கின்றனர். கலபுரகியில் ராம்ஜி நகரில் வசிக்கும் ரஷ்மிக்குப் பள்ளி ஆசிரியை ஆக வேண்டுமென்று கனவு. ஆனால், பள்ளிப் படிப்பைக்கூட முடிக்க முடியாமல் தற்போது தாயாகியிருக்கிறாள்.
“என் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை. என் அம்மாவின் சம்பளத்தை வைத்து மட்டும் குடும்பத்தை ஓட்டமுடியவில்லை. எட்டாம் வகுப்புக்குப் பிறகு, பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிட்டு வேலைக்குச் சென்றேன். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு எனக்குத் திருமணம் நடந்தது” என்கிறாள் ரஷ்மி.
படுமோசமான சூழலில் வாழ்ந்துகொண்டு இருந்தாலும் இந்தப் பெண்கள் பலரும் எதிர் காலத்தை நம்பிக்கையுடன் அணுகுகின்றனர். பாரதியும் அப்படித்தான் கணினிப் பயிற்சி வகுப்புக்குச் செல்லத் திட்டமிட்டிருக்கிறாள்.
“குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தியவுடன் வகுப்புக்குப் போக ஆரம்பிப்பேன். கம்ப்யூட்டரை இயக்கக் கற்றுக்கொண்டால் நிச்சயம் வேலை கிடைக்கும் என்று நம்புகிறேன். என் கணவர் கட்டுமானத் தொழிலாளி. அவரது ஒருநாள் சம்பளம் 250 ரூபாய். அதனால், நான் படித்து வேலைக்குச் செல்வதில் அவருக்குப் பிரச்சினையில்லை” என்று வெறுமையாகப் புன்னகை செய்கிறாள் பாரதி.
(பிதரிலிருந்து ரிஷிகேஷ் தேசாய், யாத்கீரிலிருந்து ரவிக்குமார் நரபோலி, பல்லாரியிலிருந்து எம். அஹிராஜ் ஆகியோரிடம் பெறப்பட்ட தகவல்களுடன். இந்தக் கட்டுரையிலிருக்கும் பெண்களின் பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.)
தி இந்து (ஆங்கிலம்)
சுருக்கமாகத் தமிழில்: என்.கௌரி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT