Published : 08 Dec 2013 04:52 PM
Last Updated : 08 Dec 2013 04:52 PM
2011ஆம் ஆண்டில் சிலியில் மாணவர் எழுச்சிக்குத் தலைமை வகித்த பெண் மாணவர் தலைவர் கமிலா வல்லேஜோ, முன்னாள் மாணவர் தலைவர்கள் 3 பேருடன் இணைந்து அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கீழ் அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது சிலி நாட்டு அரசியலில் புதிய தலைமுறை மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதை வெளிப்படுத்தியுள்ளது.
ஒ.இ.சி.டி எனப்படும் பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பின் 34 உறுப்பு நாடுகளில் மிகவும் மோசமான ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட நாடாக இருக்கிறது சிலி. அங்கு இலவச, மேம்பட்ட கல்வியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உருவான மாணவர் இயக்கத்தில் சர்வதேச அளவில் அறியப்பட்ட முகமாக இளம் கம்யூனிஸ்ட் கமிலா வல்லேஜோ (25) இருந்தார்.
2011ஆம் ஆண்டில் சிலியின் அப்போதைய அதிபர் செபாஸ்டியன் பினேராவுக்கு எதிரான மாணவர் எழுச்சி அரசை உலுக்கியது. இதுவே 2013 தேர்தல் பிரசாரத்துக்கான அடிப்படையாக அமைந்தது. பிறகு சிலி கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் அவைக்கான வேட்பாளராக கமிலா அறிவிக்கப்பட்டார். கர்ப்பிணியாக இருந்த நிலையிலும் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், பிறகு ஒரு மாத கைக்குழந்தையுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தற்போது தேர்தலில் வெற்றி பெற்று கீழ் அவை உறுப்பினர் ஆகிவிட்டார்.
சுயேச்சையாகப் போட்டியிட்ட கமிலாவின் நண்பர்கள் ஜியார்ஜியோ ஜாக்சன், கேப்ரியல் போரிக், கம்யூனிஸ்ட் வேட்பாளர் கரோல் கரியோலா ஆகியோரும் கீழ் அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
சிலி அதிபர் பதவிக்கு போட்டியிட்டு வரும் மைக்கேல் பாக்லெட்டின் நியூவா மேயரியா கூட்டணி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பலம் பெற்று வருவதன் அறிகுறியாக வல்லேஜோவின் வெற்றி கருதப்படுகிறது.
2006 முதல் 2010 வரை சிலியின் அதிபராக இருந்த மைக்கேல் பாக்லெட்டும் இந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். இருந்தபோதும், இரண்டாவது கட்டத் தேர்தலில் அவர் வெற்றியை உறுதி செய்தாக வேண்டும். வரிச் சீர்திருத்தம், கல்விக்கான நிதி அதிகரிப்பு போன்ற வாக்குறுதிகளை பாக்லெட் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT