Published : 18 Jun 2017 12:00 PM
Last Updated : 18 Jun 2017 12:00 PM

வாசகர் வாசல்: மாற்றம் காணாத சொற்கள்

மகாத்மா காந்தி, நவஜீவன் பத்திரிகையில் இந்திய விதவைகள் பற்றி ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். அதில் குழந்தைக் கைம்பெண்கள் பற்றிய தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

அதில் திருமணமான பெண்கள் பட்டியலில் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 13,212 ஆகவும், விதவைகளின் எண்ணிக்கை 1,014 ஆகவும் இருந்தது என்ற செய்தி அதிர்ச்சியாக இருந்தது. அதேபோல் ஒன்று முதல் இரண்டு வயதுக்குட்பட்ட திருமணமான குழந்தைகள் 17,753 பேர் எனவும், விதவைகள் 856 பேர் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த எண்ணிக்கைகளைக் குறிப்பிட்டுவிட்டு விதவைகள் என்ற பாகுபாட்டை நீக்குவதற்கு யார்தான் இருக்கிறார்கள் என்று வருந்துகிறார் காந்தி. கணவரை இழந்த பெண்களைப் பற்றி பாரதி சொன்னது என் நினைவுக்கு வருகிறது.

“கணவனை இழந்த மாதர், அவர்கள் கணவரை இழந்தார்களே அன்றி உடம்பை இழக்கவில்லை, ஐம்புலன்களை இழக்கவில்லை, உணர்வை இழக்கவில்லை, மனித இதயத்தை இழந்துவிடவில்லை, அவர்கள் கல்லாகி விடவில்லை, மண்ணாகிவிடவில்லை” என்கிறார் பாரதி.

இப்படிப் பல தலைவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் பெண்களின் உரிமைக்காகப் பேசினார்கள். இன்று தொழில்நுட்பத்திலும் பல துறைகளிலும் முன்னேற்றம் அடைந்தோம். மேலும் அடைந்துகொண்டே இருக்கிறோம். ஆனாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இன்னும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.

நினைத்துப் பார்க்கவும் முடியாத வன்முறைகள் மட்டுமே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அல்ல. அன்றாட வாழ்வில் பலர் பயன்படுத்தும் சொற்களான மலடி, விதவை போன்ற வார்த்தைகளும் பெண்களுக்கு எதிரான வன்முறையே. முற்போக்குவாதிகளாகத் தங்களைச் சொல்லிக்கொள்ளும் பலரும் தங்களையும் அறியாமல் பெண்களை இழிவுபடுத்தும் இதுபோன்ற சொற்களைப் பயன்படுத்திவருகிறார்கள்.

ஆணும் மனைவியை இழக்கிறான். அவனுக்கும் பிள்ளை பெறும் தகுதி இல்லாமல் போகிறது. ஆனால், பெண்களை நோக்கிச் சொல்லும் இழிவான வார்த்தைகளை ஆண்களை நோக்கி யாரும் சொல்வதில்லை. முன்பு வழக்கில் இருந்த ஊனமுற்றோர் என்ற வார்த்தைக்குப் பதிலாக மாற்றுத்திறனாளி என்றும், அரவாணி என்பதைத் திருநங்கை என்றும் மாற்றிப் பயன்படுத்திவருகிறார்கள். அதற்காக மலடி, விதவை போன்றவற்றுக்கு மாற்றுச் சொல் வேண்டும் என்று சொல்லவில்லை. அந்த வார்த்தைகளையே வழக்கிலிருந்து நீக்க வேண்டும்.

ஆண் தன் பிள்ளைகளுக்காக மறுமணம் செய்தால் ஏற்றுக்கொள்ளும் இந்தச் சமூகம் அதையே ஒரு பெண் செய்தால் ஏற்க மறுக்கிறது.

- சி.சுமதி, கூடுவாஞ்சேரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x