Published : 09 Mar 2014 12:00 AM
Last Updated : 09 Mar 2014 12:00 AM
நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்பு, நாடு முழுவதும் தொற்றிக்கொண்டிருக்கிறது. இன்றைக்கு உலகின் பல நாடுகளில் ஆண்களைப் போலப் பெண்களுக்கும் வாக்களிக்கும் உரிமை இருக்கிறது. இது தானாகக் கிடைத்த உரிமையல்ல. பல பெண் போராளிகள் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்துப் போராடியதாலேயே கிடைத்தது.
அப்படிப் பெண்களின் வாக்குரிமைக் காகப் போராடியவர்களில் முக்கிய மானவர் சூசன் பி. ஆண்டனி.
பெண் வாக்குரிமை இயக்கத்தில் (woman suffrage movement) அவர் தீவிரமாகச் செயல்பட்டார். அமெரிக்கத் தேசியப் பெண்கள் வாக்குரிமைச் சங்கத்தின் தலைவராக 1892 முதல் 1900 வரை அவர் செயல்பட்டிருக்கிறார். அமெரிக்க அரசியல் சாசனத்தில் பெண்களுக்கு வாக்குரிமை அளிப்பதற்காக 1920இல் கொண்டுவரப்பட்ட 19ஆவது சட்டத் திருத்தத்துக்கு, அவர் ஆற்றிய பணியும் முக்கியக் காரணம்.
1820 பிப்ரவரி 15ஆம் தேதி மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள ஆடம்ஸ் நகரில் பிறந்தார் சூசன் பிரவுன்வெல் ஆண்டனி. அவரது தந்தை டேனியல் ஆண்டனி பருத்தி உற்பத்தியாளர். சூசனின் குடும்பம் தீவிர அரசியல் குடும்பம். அடிமை முறை ஒழிப்பு இயக்கத்தில் (Abolitionist Movement) அவரது குடும்பம் ஈடுபாடு காட்டியது. அமெரிக்க உள்நாட்டு போரில் அதிபர் ஆப்ரஹாம் லிங்கனின் நிர்வாகத்துக்கு உதவியாக, பெண்கள் ஆதரவு சங்கத்தை சூசன் உருவாக்கிச் செயல்பட்டார்.
அவர்களது குடும்பம் ஈடுபாடு காட்டிய மற்றொரு விஷயம் மது ஒழிப்பு இயக்கம் (Temperance Movement). மது ஒழிப்பு இயக்கப் பிரசாரத்தில் ஈடுபட்டபோது கிடைத்த உத்வேகம் காரணமாகவே, பின்னாளில் சூசன் பெண்ணுரிமைக்காகப் போராட ஆரம்பித்தார்.
மது ஒழிப்பு மாநாடு ஒன்றில், பெண் என்பதால் அவர் பேசுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதற்குப் பிறகு, பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை இருந்தால்தான், அரசியலில் பெண்கள் ஈடுபடுவதற்கு முக்கியத்துவம் தரப்படும் என்பதை அவர் புரிந்துகொண்டார்.
பெண் உரிமை இயக்கம்
1840இல் லண்டன் நகரில் "உலக அடிமை முறை எதிர்ப்புப் பேரவை" கூட்டம் நிகழ்ந்தது. அதில் கலந்துகொள்ள அமெரிக்கப் பெண்ணுரிமைப் போராளி எலிசபெத் காடி ஸ்டாண்டன் (Elizabeth Cady Stanton) சென்றிருந்தார். அவர் அங்கு லுக்ரேசியா மோட் (Lucretia Mott) என்னும் மற்றொரு பெண்ணுரிமை ஆதரவாளரைச் சந்தித்தார். அவர்களுக்கும் அமெரிக்காவிலிருந்து சென்ற மற்ற பெண்களுக்கும், பெண்கள் என்பதால் அந்தப் பேரவையில் கலந்துகொள்ளும் உரிமை மறுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து 1851இல் சூசன் பி. ஆண்டனியை எலிசபெத் காடி ஸ்டாண்டன் சந்தித்தார். இருவரும் நீண்ட காலம் இணைந்து செயல்பட்டனர். இருவரும் இணைந்து பெண் உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்து, பெண் உரிமைகளுக்காகக் குரல்கொடுத்தனர். இந்தச் சந்திப்பே 1852இல் "பெண்கள் உரிமைகளுக்கான பேரவை" (Women's Rights Convention) உருவாக்கப்படுவதற்கு அடிப்படையாக அமைந்தது.
தேசியப் பெண்கள் வாக்குரிமைச் சங்கத்தை 1869இல் இருவரும் உருவாக்கினார். பெண் உரிமைகளை வலியுறுத்திய வார இதழான ‘புரட்சி' (தி ரெவல்யூஷன்) என்ற இதழை இருவரும் வெளியிட்டுவந்தனர். இந்த இருவரும் மடில்டா ஜோஸ்லின் கேஜ் என்ற பெண்ணுடன் இணைந்து ‘பெண் வாக்குரிமை வரலாறு' என்ற 4 பாகங்கள் கொண்ட நூலைத் தொகுத்திருக்கின்றனர்.
20,000 கிலோ மீட்டர்
பெண்கள் வாக்குரிமை பெறுவதற்காக சூசன் பல்வேறு வழிகளில் இடையறாது போராடினார். இதற்காக நாடு முழுவதும் சென்று உரையாற்றியது மட்டுமில்லாமல், 1872 அமெரிக்க அதிபர் தேர்தலில் சட்டத்தை மீறி அவர் வாக்களிக்கவும் செய்தார். இதன் காரணமாகக் கைது செய்யப்பட்டார், வழக்கைத் தள்ளுபடி செய்ய சட்டப் போராட்டம் நடத்தினார். அவருக்கு 100 டாலர் நஷ்டஈடு விதிக்கப்பட்டது. ஆனால், அந்தத் தொகையை அவர் செலுத்தவில்லை.
கடுமையான எதிர்ப்பு, அவதூறுகளைத் தாண்டி பெண் வாக்குரிமைக்காக அவர் பிரசாரம் செய்தார். அதிகபட்சமாக ஓரே ஆண்டில் 20,000 கிலோமீட்டர் பயணம் செய்து 170 உரைகளை ஆற்றியிருக்கிறார். அத்துடன் பெண் தொழிலாளர் உரிமைகள், சம உழைப்புக்குச் சம ஊதியம், சொத்துரிமை, வருமானத்தைப் பயன்படுத்தும் உரிமை, எளிமையாக விவாகரத்து பெறும் உரிமை ஆகியவற்றுக்காகவும் அவர் குரல் கொடுத்திருக்கிறார்.
1880களில் ‘அமெரிக்கப் பெண்கள் வாக்குரிமைச் சங்கம்' என்று மற்றொரு சங்கமும் செயல்பட ஆரம்பித்தது. ஒரே விஷயத்துக்காக இரண்டாகப் பிரிந்து போராடுவது நல்லதல்ல என்று கருதப்பட்டதால், இரண்டு அமைப்புகளும் 1890இல் இணைந்தன. தொடர்ந்து, ‘அமெரிக்கத் தேசியப் பெண்கள் வாக்குரிமை சங்கம்' என்று பெயர் மாற்றப்பட்டது. எலிசபெத் காடி ஸ்டாண்டன் அதன் முதல் தலைவர் ஆனார். அவருக்குப் பிறகு சூசன், எட்டு ஆண்டுகளுக்குத் தலைவராக இருந்தார்.
டாலர் கௌரவம்
திருமணம் செய்துகொள்ளாத சூசன், தன் நோக்கத்தில் தீவிரமாகவும், இரக்க குணம் கொண்டவராகவும் இருந்தார். கூர்மையான அறிவுடன், பலருக்கும் உத்வேகம் அளிக்கக்கூடியவராக இருந்தார்.
ஆரம்பத்தில் நியூயார்க் ரோஷெஸ்டர் பகுதியில் உள்ள பெண்கள் அகாடமியில் 15 ஆண்டுகளுக்கு ஆசிரியராகப் பணிபுரிந்திருந்த அவர், 1900இல் ரோஷெஸ்டர் பல்கலைக்கழகத்தில் பெண்கள் அனுமதிக்கப்படவும் காரணமாக இருந்தார்.
1906 மார்ச் 13ஆம் தேதி சூசன் காலாமானார். அப்போதும் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடைத்திருக்கவில்லை. அதற்கு 14 ஆண்டுகளுக்குப் பிறகே கிடைத்தது.
சூசனின் அர்ப்பணிப்பு உணர்வையும் உழைப்பையும் அங்கீகரிக்கும் வகையில் அமெரிக்கக் கருவூலத் துறை, சூசன் ஆண்டனியின் உருவத்தை 1979இல் ஒரு டாலர் நாணயத்தில் பொறித்தது. வாழ்ந்த காலத்தில் பெண்களுக்கு வாக்குரிமையைப் பெற முடியாவிட்டாலும், அமெரிக்க டாலரில் உருவம் பொறிக்கப்பட்ட முதல் பெண் என்ற கௌரவத்தை அவர் பெற்றிருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT