Published : 15 Dec 2013 02:33 PM
Last Updated : 15 Dec 2013 02:33 PM
புகழ்பெற்ற ஆங்கில வார இதழான டைம்-இன் முதல் பெண் நிர்வாக ஆசிரியராக நான்சி கிப்ஸ் கடந்த செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். அந்தப் பதவியில் அவர் அமர்ந்த பின்னர் முக்கியமான மாற்றங்கள் தெரிய ஆரம்பித்திருக்கின்றன.
அந்த இதழில் வேலை பார்க்கும் மற்றப் பெண்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. இதழில் வேலை பார்க்கும் பெண்களின் சம்பளம், ஆண்களிடம் இருந்து தற்போது வேறுபட்டுள்ளது. அதை சமமான சம்பளமாக மாற்றப் போவதாகக் கிப்ஸ் கூறியுள்ளார்.
1985இல் இருந்து டைம் இதழில் பணிபுரிந்து வரும் நான்சி அரசியல், பயங்கரவாதம், பண்பாடு பற்றி பல முக்கிய அட்டைப்படக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். டைம் இதழ் வரலாற்றிலேயே அதிக அட்டைப்படக் கட்டுரைகளை எழுதியவர் அவர்.
ரிக் ஸ்டென்கலின் நிர்வாக ஆசிரியர் பதவியின் கீழ், இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான்சி துணை நிர்வாக ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.
தற்போது டைம் இதழ், அதன் தாய் நிறுவனமான டைம் வார்னர் நிறுவனத்தில் இருந்து பிரிக்கப்பட்டுத் தனியாகச் செயல்பட்டு வரும் நெருக்கடியான நேரத்தில் நிர்வாக ஆசிரியர் பொறுப்பை நான்சி ஏற்றுக்கொண்டுள்ளார்.
"இந்த முடிவு வரலாற்று ரீதியில் முக்கியமானது மட்டுமில்லாமல், மிகவும் புத்திசாலித்தனமானதும்கூட" என்று ஸ்டீவ் ஜாப்ஸ் சுயசரிதையை எழுதிய வால்டர் ஐசக்சன் பாராட்டியுள்ளார். நான்சியின் தலைமையால் இதழில் புதிய மாற்றங்கள் தென்பட ஆரம்பித்துள்ளன. டைம் அச்சு இதழ், இணைய இதழ் இரண்டுக்கும் இடையிலான வேறுபாடுகள் இதழின் பிரபலத்தைப் பாதித்து வருகின்றன. அதனால், இணைய இதழின் புதிய வடிவமைப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாரஇதழ்களின் எதிர்காலம் கேள்விக்குறி யாகி உள்ள நிலையில், கிப்ஸ் அதை எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பதைப் பொறுத்தி ருந்தே பார்க்க வேண்டும். அமெரிக்காவின் மற்றொரு புகழ்பெற்ற இதழான தி நியூஸ்வீக் அச்சு இதழ் 2012 டிசம்பர் மாதத்துடன் நிறுத்தப்பட்டது நினைவிருக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT