Published : 22 Dec 2013 12:00 AM
Last Updated : 22 Dec 2013 12:00 AM

எங்களை மனிதர்களாக நடத்தினாலே போதும் - லிவிங் ஸ்மைல் வித்யா

“மூன்றாம் பாலினத்தவர்கள் என்பது திருநங்கைகளைக் குறிப்பதாக இருந்தால், முதல் பாலினம் ஆண்கள் என்று இந்தச் சமூகம் சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்?” என்ற கேள்வியுடன் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார் நாடகக் கலைஞரும் எழுத்தாளருமான லிவிங் ஸ்மைல் வித்யா.

“திருநங்கைகள் என்று அழைப்பதற்குப் பதிலாக மாற்றுப் பாலினத்தவர்கள் என அழைப்பதைத்தான் நாங்கள் விரும்புகிறோம். அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க, சான்றிதழ்களில் மாற்றுத் திறனாளிகள், அல்லது சாதிப் பெயர்கள் பயன்படுத்தப்படுகிறதோ அதேபோல் மாற்றுப் பாலினத்தவர் களுக்கும் சான்றிதழ்களில் மட்டும் திருநங்கையர்கள் என்று குறிப்பிட்டு மற்ற பொதுத் தளங்களில் மாற்றுப் பாலினத்தவர்கள் என்று அழைக்க வேண்டும். இந்தத் தொகுப்பில் மாற்றுப் பாலினம் என்று குறிப்பிடுவது திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்” என்று மாற்றுப் பாலினத்தினரின் குரலாக ஒலிக்கிறார்.

பிச்சை எடுப்பதும், பாலியல் தொழில் செய்வதும்தான் இவர்களுடைய தொழில் என மக்களின் பொது புத்தியில் பதிந்துள்ள கருத்துகளை எல்லாம் உடைத்து, பல்வேறு பரிமாணங்களுடன் விளங்குவதில் முன்னோடியாகத் திகழ்கிறார்.

சென்னையில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சில் சார்பாக சினிமா தவிர்த்து மாற்றுக் கலைகளில் உள்ள கலைஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சார்ல்ஸ் வாலேஸ் (charles wallace) என்ற நிதிநல்கை வழங்கப்படும்.

இந்த ஆண்டிற்கான நிதிநல்கை முதன் முதலாக மாற்றுப் பாலினத்தவரான லிவிங் ஸ்மைல் வித்யாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் லண்டனில் செயல்பட்டு வரும் நிகழ்த்து கலைகளுக்கான கல்லூரியில் ஆறு மாதம் பயிலும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது. அவருடன் ஒரு சந்திப்பு...

உங்ளைப்பற்றி?

என் சொந்த ஊர் திருச்சி. இளங்கலை கணினி அறிவியல் படித்தேன். பின்பு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முதுகலை மொழியியல் படித்தேன். முதுகலை படிப்பு வரை ஆண் என்ற பாலின அடையாளத்துடன் படிக்க முடிந்தது. பின்பு மொழியியலில் ஆராய்ச்சி படிப்பு படிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் மாற்றுப் பாலின அடையாளத்துடன் மேற்கொண்டு கல்வி கற்க முடியாத சூழ்நிலை.

எழுத்தாளராக நீங்கள்?

என் தனிமைக்குக் கிடைத்த சிறந்த பரிசு புத்தங்கள்தான். நான் முதல் வகுப்பு படிக்கும் போதே என் அப்பா மூன்றாம் வகுப்பு புத்தகத்தைப் படிக்கச் சொல்வார். அதனால் வீட்டின் அருகே உள்ள நூலகத்திற்குச் சென்று அப்போது கிடைத்த கதைப் புத்தகங்கள், நாவல்கள் ஆகியவற்றைப் படிப்பேன். பின்னாட்களில் ரஷ்ய எழுத்தாளர்களின் நாவல்கள், எழுத்தாளர் ச.முருகபூபதியின் புத்தகங்களைப் படித்ததால் எழுத்தின் மீதும் நாடகத்தின் மீதும் ஆர்வம் அதிகரித்தது.

ஆங்கிலத்தில் ‘நான் வித்யா’ என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளளேன். அந்தப் புத்தகம் தமிழ், மராத்தி, அஸ்ஸாமி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளிவந்துள்ளது.

ஒரு எழுத்தாளராக இந்தச் சமூகம் உங்களை எப்படிப் பார்க்கிறது?

பல முற்போக்கு நண்பர்கள் எனக்கு ஊக்கம் கொடுத்தனர். என் தனிப்பட்ட வாழ்க்கைச் சூழ்நிலையைப் பொருத்தவரை பொது மக்கள், அவர்களுடைய மனநிலையில் விடுபடாமல் உள்ளனர். எழுத்தாளராகவும், கலைஞராகவும் இருந்தாலும் இந்தச் சமுதாயத்தின் பார்வை இன்னும் மாறாமல் உள்ளது. இப்போதும் தெருவில் நடந்து செல்லும்போது, உடல் உழைப்பில்லாமல் பெற்றோர் பணத்தில் பைக் வாங்கியிருக்கும் சில இளைஞர்கள் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி அழைக்கிறார்கள்.

என்ன செய்ய வேண்டும் இந்தச் சமூகம்?

சமுதாயம் எங்களை கருணைக் கண்களோடு பார்க்க வேண்டாம். எங்களையும் சக மனிதர்களாக நடத்தினாலே போதும். அம்பேத்கரிடம் ஒரு நிருபர், ‘உங்களுக்கு என்னதான் வேண்டும்?’ என்று கேட்டதற்கு, ‘நீங்கள் நடக்கும் தெருவில் நாங்களும் நடக்கவேண்டும், அவ்வளவு தான்’ என்றார். அதுபோல் மாற்றுப் பாலினத்தவர்களான எங்களையும் சமுதாயம், அதன் ஒரு அங்கமாக மட்டும் நடத்தினால் போதும்.

தொண்டு நிறுவனங்களின் பணி?

பொதுவாகத் தொண்டு நிறுவனங்கள், பிரச்சினைகளுடன் வருகிற ஒருவருக்கு மறுவாழ்வு ஏற்படுத்தி தரும். ஆனால் மாற்றுப் பாலினத்தவர்கள் விஷயத்தில் பல தொண்டு நிறுவனங்கள் அவர்களின் சூழ்நிலையில் எந்த மாற்றமும் ஏற்படுத்தாமல் வெறும் ஆணுறை பற்றிய செய்திகளைப் பரப்ப விளம்பர ரீதியாக மட்டும் பயன்படுத்துகின்றன. ஏதோ எங்களிடம் இருந்துதான் எய்ட்ஸ் பரவுகிறது என்ற எண்ணத்துடன் செயல்படுகின்றனர்.

தொண்டு நிறுவனங்கள் திருநங்கையருக்கு மட்டும்தான் சேவை செய்கிறார்களே தவிர திருநம்பிகளின் மறுவாழ்வு குறித்த அவர்களின் பார்வை கேள்விக்குறிதான்.

அரசு என்ன செய்ய வேண்டும்?

கால மாற்றத்திற்கு ஏற்ப மாற்றுப் பாலினத்தவர்களின் மனநிலையும் மாறியுள்ளது. அவர்களும் தங்கள் வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும். பிச்சை, பாலியல் தொழில் போன்றவற்றைச் செய்யக் கூடாது என்ற உறுதியான மனநிலையுடன் இன்றைக்கு உள்ள பல மாற்று பாலினத்தவர்கள் தங்கள் அடையாளங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் உயர் படிப்பு, மருத்துவம், ஐ.ஏ.எஸ் தேர்வு என படித்துவருகின்றனர்.

அப்படிப்பட்ட மாற்றுப் பாலினத்தவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் குறைந்த சதவீத இடஒதுக்கீட்டை வழங்கவேண்டும். கலைத் துறைகளில் உள்ள எங்களைப் போன்றவர்களை அரசு ஊக்குவிக்க வேண்டும். அப்போதுதான் தொண்டு நிறுவனங்களால் தங்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும் என்ற சிந்தனை மாறி சொந்தக் கால்களில் எங்களால் நிற்க முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x