Published : 12 Jan 2014 12:00 AM
Last Updated : 12 Jan 2014 12:00 AM
சாரங்கி - பெயரே அழகாக இருக்கும் இந்தச் சொல் ஒரு பழமையான தந்தி வாத்தியத்தைக் குறிக்கிறது. பெரும்பாலும் ஹிந்துஸ்தானி இசையில் அதிகம் வாசிக்கப்படும் வாத்தியம். தென்னிந்தியாவில் இந்த வாத்தியத்தை வாசிக்கும் கலைஞர்களைப் பார்ப்பதே அரிது எனும்போது, இதை வாசிக்கும் பெண் கலைஞர்களைப் பார்ப்பது அரிதினும் அரிது.
இந்த வாத்தியத்தை வாசிக்கும் ஒரே தென்னிந்தியப் பெண் என்னும் புகழுக்கு உரியவராக இருப்பவர் மனோன்மனீ. இந்தக் கருவியை வாசிப்பதும் எளிதானதல்ல. விரல் நகத்தின் பின்பக்கத்தைப் பயன்படுத்தி இந்த வாத்தியத்தை வாசிக்க வேண்டும். ஆனால், இதிலிருந்து கிளம்பும் நாதம் அலாதியான இனிமை கொண்டது.
இசையை வாசிப்பதோடு சுவாசிக்கவும் செய்யும் குடும்பம் இவருடையது. இவரின் பாட்டனார் தில்ரூபா சண்முகம். தில்ரூபா சரோஜா என்னும் தாய்ப் புலிக்குப் பிறந்த குட்டிப் புலிதான் மனோன்மனீ. தன் தாயிடம் பாலபாடம் கற்ற இவர், அதன்பின் மதுரை டி.னிவாஸிடம் கர்னாடக இசையும் குல்தீப் சாகரிடம் ஹிந்துஸ்தானி இசையையும் கற்றிருக்கிறார்.
தமிழ், மலையாளம் உள்படப் பல்வேறு இந்திய மொழிகளில் வெளியான திரைப்படங்களில் இவரது சாரங்கியின் வருடல் ஒலித்திருக்கிறது. இமான், ஜிப்ரான், ஜெயச்சந்திரன், தீபத் தேவ், ஸ்டீபன் தேவசி, ஔசிபச்சன் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களிடம் வாசித்திருக்கிறார்.
புகழ்பெற்ற இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் ஷங்கர் ராஜா ஆகியோரின் இசையமைப்பில் சீன வயலினான எர்ஃபு என்ற வாத்தியத்தையும் வாசித்திருக்கிறார்.
தற்போது டெல்லியிலிருக்கும் குரு உஸ்தாத் குலாம் சபீர் கானிடம், இசைப் பயிற்சியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். எதிர்காலத்தில் சாரங்கியைக் கொண்டு ஹிந்துஸ்தானி இசை மேடையைக் கலக்குவதற்கு இந்த இளம் புயல் தயாராகிக் கொண்டிருக்கிறது என்பதில் வேறு கருத்து இருக்க முடியாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT