Published : 18 Sep 2016 12:05 PM
Last Updated : 18 Sep 2016 12:05 PM
பெண்களுக்கு எதிராகப் பெருகிவரும் கொடூரத் தாக்குதல்களில் ஒன்று அமில வீச்சு. பாதிக்கப்பட்ட பெண் ஒவ்வொரு நொடியும் உடல், மன ரணங்களைக் காலத்துக்கும் கடந்தாக வேண்டும். இந்தியப் பெண்களின் சாபமாகத் தொடரும் அமிலவீச்சுக்கு எதிராக, இளம்பெண்கள் இருவர் போராடிவருகிறார்கள்.
உருக்குலைந்த ரேஷ்மா
மும்பை புறநகரில் வசிக்கும் டாக்ஸி டிரைவரின் கடைக்குட்டி ரேஷ்மா குரேஷி. 2012-ல் ரேஷ்மாவின் அக்கா குல்ஷானுக்கும் அவரது கணவருக்கும் இடையே நடந்த தகராறில், ரேஷ்மா அமில வீச்சுக்கு ஆளானார். முகத்தின் ஒரு பக்கம் உருகிச் சிதைந்துபோனது. ஒரு கண்ணின் அடையாளமே அழிந்தது. பட்டாம்பூச்சியாகச் சிறகடித்துப் பறந்த 17 வயது ரேஷ்மா, முடங்கிப் போனார். காயங்கள் ஆறியதும் முதல்முறை தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்தார். உடனே தற்கொலைக்கு முயன்றார். அவரைக் காப்பாற்றினாலும் அடுத்தடுத்த அறுவை சிகிச்சைகளுக்கு வழியின்றி குடும்பம் விக்கித்து நின்றது.
அபயமளித்த ரியா ஷர்மா
டெல்லியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ரியா ஷர்மா. வெளிநாட்டில் ஃபேஷன் டெக்னாலஜி படித்தவருக்கு, அந்தத் துறை அலுப்பூட்டவே கேமரா கலைஞரானார். ஒருமுறை ஆவணப் படத்துக்காக அமில வீச்சுக்கு ஆளான ரேஷ்மா குரேஷியைச் சந்தித்தார். ரியாவிடம் ரேஷ்மா எளிதாக ஒட்டிக்கொண்டார். உள்ளுக்குள் குமைந்துகொண்டிருந்த ரேஷ்மாவை அமைதியாக்கிப் பேச வைத்தார் ரியா. ஆவணப்படத்தில் அமில வீச்சுக்கு எதிராக ரேஷ்மா அனல் கக்கியிருந்தார். அமில வீச்சு தொடர்பான ஆவணப்படம் இரு இளம் பெண்களை, அந்த வன்முறைக்கு எதிரான புள்ளியில் ஒருங்கிணைத்தது.
அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரம்
இந்தியாவில் அமில வீச்சுக்கு ஆளாகும் பெண்கள் குறித்த தரவுகளை, ரியா ஷர்மா திரட்டினார். கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியளித்தன. ஆண்டுதோறும் சராசரியாக ஆயிரம் அமில வீச்சு சம்பவங்கள் நாடு முழுவதும் நடைபெறுகின்றன. இவற்றில் 90 சதவீதத்துக்கும் அதிகமானவை காதல், குடும்ப வன்முறை ஆகியவற்றின் பெயரால் பெண்கள் மீது மட்டுமே நடத்தப்படுபவை. பிரச்சினை ஆண்களுக்கிடையே என்றாலும் ஆணின் உடைமைப் பொருளாகப் பெண்ணைக் கருதும் ஆதிக்க மனோபாவத்தில் அமில வீச்சுக்குப் பெண்களே பலியாகிறார்கள். 2012-லிருந்து அடுத்த இரண்டு ஆண்டுகளில் அமில வீச்சு சம்பவங்கள் 250 சதவீதம் அதிகரித்தன. அதிலும் 2013-ல் அமில விற்பனையைக் கட்டுப்படுத்தும் அரசு நடவடிக்கைகள் முடுக்கப்பட்டன. அமில வீச்சில் ஈடுபவருக்குக் குறைந்தபட்சமாக 10 ஆண்டு சிறைத் தண்டனை என்று சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஆனாலும் காரைக்கால் வினோதினி உட்பட அமில வீச்சுக்குப் பெண்கள் பலியாவது தொடர்கிறது.
அன்பை உருவாக்குவோம், வடுக்களை அல்ல
அமில வீச்சு நடக்கும்போதெல்லாம் அதற்கு எதிராகப் பேசுவது, அதே வேகத்தில் தணிவது என்றுதான் பொதுச்சமூகத்தின் மனோநிலை தொடர்கிறது. ரியா ஷர்மா நடைமுறைக்கு உதவும் நடவடிக்கைகளில் இறங்கினார். இந்தியாவின் ‘அமில வீச்சுக்கு ஆளாகும் பெண்களுக்கான முதல் மறுவாழ்வு மைய’த்தை டெல்லியில் தொடங்கினார். ‘Make Love Not Scars’ என்ற தன்னுடைய தன்னார்வ அமைப்பின் மூலமாக இதை உருவாக்கினார் ரியா ஷர்மா. அமிலத் தாக்குதலுக்கு ஆளான பெண்களுக்கான மருத்துவ உதவி, மனநல ஆலோசனை, சட்ட உதவிகள், தொடர் வாழ்வாதார முயற்சிகள் ஆகியவற்றை இந்த மையம் ஒருங்கிணைத்தது.
அமில வீச்சுக்கு ஆளான பெண்கள், 15 நாட்களில் அரசின் நிவாரண உதவியைப் பெற முடியும் என்பதை அறியாதிருந்தனர். அரசு தரப்பிலும் தெளிவான வழிகாட்டல் இல்லை. ரேஷ்மா குரேஷிக்கு நீதிமன்றம் மூலம் நிவாரண உதவிக்கு வழிசெய்யப்பட்டது. ரேஷ்மா வழியில் மற்ற பெண்களும் உதவிகளைப் பெற்றனர். ரேஷ்மாவின் அடுத்தடுத்த பிளாஸ்டிக் சர்ஜரிகளுக்கு அதிகத் தொகை தேவைப்பட, இணையம் மூலம் நன்கொடைகள் சேகரிக்கப்பட்டன. ரியாவும் ரேஷ்மாவும் அடுத்த கட்டத்துக்குச் சென்றனர்.
அழகு குறிப்பு வீடியோவில் பிரச்சாரம்
ரேஷ்மா குரேஷி குடும்பப் பகையில் அமில வீச்சுக்கு ஆளானார். முடங்கியிருந்த ரேஷ்மாவின் கைபிடித்து, கண்ணாடியில் தெரிவதல்ல உண்மையான அழகு என்று ரியா புரியவைத்தார். ரியாவின் சேவைகளில் பங்களிக்க ஆரம்பித்த ரேஷ்மாவும் அவற்றை உள்வாங்கியிருந்தார். இதையடுத்து அமில வீச்சுக்கு எதிரான செயல்பாடுகளில் இருவரும் இறங்கினார்கள். இந்தியா முழுவதும் திறந்த சந்தையில் எளிதில் கிடைக்கும் அமில ரகங்களின் விற்பனையைக் கட்டுப்படுத்தப் பல உத்திகளைக் கையாண்டனர். அதில் ஒன்றாக, அழகுப் பொருட்களை உபயோகிக்கும் குறிப்புகளை ரேஷ்மா வழங்கும் வீடியோக்கள் எடுக்கப்பட்டன. ரேஷ்மா அழகுக் குறிப்பு வழங்குவது பார்வையாளர்களைத் திரும்பிப் பார்க்க வைத்தது. அமில வீச்சுக்கு எதிரான பஞ்ச் ஒன்றுடன் நிறைவடையும் இந்தப் பிரச்சாரக் காணொலிகள் இந்தியாவுக்கு வெளியேயும் பிரபலமடைந்தன.
நியூயார்க்கில் ரேம்ப் வாக்
அமில வீச்சுகளால் எங்கள் உண்மையான அழகை எவராலும் பறிக்க முடியாது என்பதை உரக்கச் சொல்லும்படியான பல்வேறு நிகழ்ச்சிகளிலும் ரேஷ்மா பங்கேற்கத் தொடங்கினார். தற்போது நடைபெற்று வரும் நியூயார்க் ஃபேஷன் வீக் நிகழ்வில், ‘அழகைத் திரும்பப் பெறுவோம்’ என்ற தலைப்பில் ‘ரேம்ப் வாக்’ பயில்வதற்காக ரேஷ்மா குரேஷி தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். மேற்கத்திய இசைப் பிரபலங்களான லேடி காகா, மடோனா, பியான்ஸே உள்ளிட்டோர் நடைபயின்றார். மேடையில் ரேஷ்மா குரேஷியும் நடைபயில்கிறார். இந்தியாவில் அமில வீச்சுகளுக்குப் பலியான முகமற்ற பெண்களின் ஒற்றை முகமாக நிற்கிறார் ரேஷ்மா குரேஷி!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT