Published : 25 Sep 2013 02:59 PM
Last Updated : 25 Sep 2013 02:59 PM
''பத்து நாளைக்கு முந்தி அந்தப்பாவி மண்டைய போட்டுட்டான்னு சொன்னாங்க. எனக்குக் கொஞ்சம்கூட வருத்தம் இல்ல…''
குரங்கு கையில் சிக்கிய பூமாலை என்பார்களே.. அப்படி ஒரு ராட்ஷசனிடம் சிக்கி சின்னாபின்னமாகிப் போய் மீண்டிருக்கும் சிவகாமியின் கதை இது!
நாடோடிப் பிழைப்பு நடத்தும் காட்டு நாயக்கர் குலத்தில் பிறந்த சிவகாமிக்கு சொந்த ஊர் மதுரை பழங்காநத்தம் அடுத்த கீழமுத்துப்பட்டி. ஊர் ஊராய் சென்று சோப்பு, சீப்பு, கண்ணாடி, பாசிமணி விற்றுப் பிழைத்த இவருக்கும் காதல் வந்தது. மதுரையில் அண்ணன் வீட்டுக்கு வந்த இடத்தில் சின்ன இசக்கியின் கண்ணில் பட்டுத் தொலைத்ததுதான் சிவகாமி செய்த மாபாதகம்! அவரை நம்பி, கழுத்தை நீட்டினார் சிவகாமி. அத்தோடு நிம்மதியை தொலைத்தார். காதலிக்கும்போது எப்போதாவது குடித்த இசக்கி, கல்யாணத்துக்குப் பிறகு, எப்போதுமே குடியில் இருந்தார். கஞ்சா, சீட்டாட்டம் என ஒழுங்கீனத்தின் மொத்தக் குத்தகையாகிப் போனார். குடும்பச் செலவுக்கே ததிகினத்தோம் போட்டுக் கொண்டிருந்த சிவகாமி, கணவன் குடிக்கவும் கஞ்சா இழுக்கவும் கூடுதலாக உழைக்க வேண்டி இருந்தது. அவரது அடிக்கு பயந்து, கஞ்சிக்கு இல்லாவிட்டாலும்கூட இசக்கிக்கு காசு கொடுத்தார் சிவகாமி. இதற்கிடையில், அடுத்தடுத்து நான்கு பிள்ளைகள் வேறு.
ஒரு சமயம் கேரளாவுக்கு பிழைக்கப் போயிருந்தபோது, குடிக்க பணம் தரவில்லை என்பதற்காக சிவகாமியை நடுரோட்டில் சேலையை உருவி ஓடவிட்ட குரூரன் இசக்கி. இப்படித்தான் ஒருநாள் சீட்டாட பணம் கேட்டார். சிவகாமி கையில் காசில்லை. குடிகாரனுக்கு அதைப்பற்றி என்ன கவலை. சிவகாமியோடு தகராறு செய்துகொண்டே இருந்தவர், திடீரென ஆக்ரோஷமானார். அங்கே நின்ற தனது மகனை காலை பிடித்துத் தூக்கி தலையை தரையில் அடித்துவிட்டார் அந்த அரக்கன். காதிலும் மூக்கிலும் ரத்தம் வர, அந்தப் பிள்ளை துடிதுடித்துப் போனான். பிறகு அனுபவித்த கஷ்டங்களை சிவகாமியே சொல்கிறார்..
“புள்ள கெடந்த கெடப்ப பாத்துட்டு, 'பொழைக்காது'ன்னு எல்லாரும் சொல்லிட்டாங்க. ஆலப்புழா ஆஸ்பத்திரிக்கு அள்ளிக்கிட்டு ஓடுனேன். ஒருவாரம் கண்ணாடி ரூம்ல (ஐ.சி.யூ) வச்சிருந்து காப்பாத்திட்டாங்க. ஆனா, வாய் மட்டும் திக்குவாயா போச்சு. அப்புறமா விராலிமலைக்கு பொழைக்க வந்தேன். பின்னாடியே அந்தப் பாவியும் வந்துட்டான். இங்கே வந்தும் தொல்லைதான். எங்கள அடிக்கிறதுக்காகவே கல், பீங்கான், அரிவாள், உண்டிவில்னு வைச்சிருப்பான். ஒரு மரத்தடியில குடிசை போட்டிருந்தேன். ஒருநாள் மதியம் போதையில வந்தவன், குடிக்க தண்ணி கேட்டான். மகன தண்ணி குடுக்கச் சொன்னேன். அதுக்கு ரோஷம் பொத்துக்கிட்டு வந்திருச்சு. 'நீ குடுக்க மாட்டியாடி'ன்னு கத்துனவன், என்னோட சோத்தாங்காலை (வலது கால்) கருவைக் கட்டையாலேயே அடிச்சு நொறுக்கிட்டான். வலியால துடிச்சேன்.
ஆஸ்பத்திரிக்குப் போனா கேஸாகிடும்னு, விடிஞ்சதும் நாட்டு வைத்தியருட்ட கூட்டிட்டு போனான். அங்க சரியா வைத்தியம் பாக்காததால வேதனை கூடிக்கிச்சு. அறந்தாங்கிக்கு இன்னொரு வைத்தியருக்கிட்ட கூட்டிட்டுப் போனான். அங்க கட்டு கட்டிப் போட்டுட்டு போனவன்தான்.. அதுக்கப்புறம் வரவே இல்லை. எங்க அம்மாவுக்கு தகவல் குடுத்து, அவங்கதான் என்னைய மதுரை பெரியாஸ்பத்திரியில சேர்த்தாங்க. 'ஒழுங்கா வைத்தியம் பார்க்காம விட்டதால கால் செப்டிக் ஆகிருச்சு. காலை எடுத்தே ஆகணும்'னு டாக்டருங்க சொல்லிட்டாங்க. அந்தப் பாவியால என் காலும் போச்சு''
அதற்கு மேல் பேச்சு வராமல் விம்மியவர் தேற்றிக்கொண்டு தொடர்ந்தார்.. “ஊரு ஊரா போனாத்தான் பொழப்பு ஓடும். கால் இல்லாம எங்க ஓடுறது? அந்தப் பாவிமேல போலீஸ்ல ஒரு கம்ளைண்டு குடுத்துட்டு வீட்டுலயே நொடக்கிட்டேன். போலீஸ் அவனை தூக்கி உள்ள போட்டுச்சு. எனக்கு ஊனமுற்றோருக்கான உதவித் தொகை குடுக்கணும்னு உங்கள மாதிரி நல்ல மனுசக்க கோர்ட்டுல கேஸ்போட்டு அதையும் வாங்கிக் குடுத்தாங்க. அப்புறமும் ரெண்டொரு தடவ வந்து இம்சை குடுத்தான்.
மறுபடியும் போலீஸ் உள்ள புடிச்சுப் போட்டிருச்சு. இந்த லட்சணத்துல அவனுக்கு இன்னொருத்தியோட தொடுப்பு வேற. அப்பனும் இல்லாம ஆத்தாளும் இல்லாம புள்ளைங்க தட்டுக்கெட்டுப் போயிருமோன்னு நெனச்சேன். அப்ப செயற்கைக் கால் பத்தி தெரியவந்திச்சு. கால் வச்சிக்கிட்டா நிமிர்ந்து நிக்க முடியும், திரும்பவும் வேலைக்கு போகலாம், பிள்ளைங்கள காப்பாத்த முடியும்ற நம்பிக்கை வந்திச்சு. பிளாஸ்டிக் காலு மாட்டி காந்திகிராமத்துல பயிற்சி குடுத்தாங்க. நல்லவேளையா, ஆண்டவரு என்னைய மறுபடி நடமாட வைச்சிட்டாரு. இப்ப வாசர் கம்பெனியில ஆர்டர் எடுத்து வாசர் போட்டுக் குடுக்குறேன். மாசம் நாலாயிரம் கிடைக்கும். பத்து நாளைக்கு முந்தி அந்தப்பாவி மண்டைய போட்டுட்டான்னு சொன்னாங்க. எனக்குக் கொஞ்சம்கூட வருத்தம் இல்ல. கஷ்டப்பட்டாலும் இந்த ஆறு வருஷமாத்தானே நானும் புள்ளைங்களும் நிம்மதியா இருக்கோம். இதையும் ஆண்டவர் தந்த காலாத்தான் நினைக்கிறேன்'' கண்ணீர் மல்க சொன்ன சிவகாமி, தனக்காக தேயும் செயற்கைக் காலை வாஞ்சையோடு தடவிக் கொடுத்தார்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT