Last Updated : 27 Sep, 2013 01:15 PM

 

Published : 27 Sep 2013 01:15 PM
Last Updated : 27 Sep 2013 01:15 PM

பால்ய விவாகத்தை நிறுத்தினாதான் எங்க சனம் முன்னுக்கு வரும்

நாளைக்கு என்ன செய்வது என்று நினைத்தே பல பேர் இன்றைய வாழ்க்கையை தொலைத்து விடுவார்கள். அப்படி எல்லாம் கனவுக் கோட்டை கட்டாமல் இன்றைய வாழ்க்கையை இன்றே வாழ்ந்து சிறப்பவர்கள் நரிக்குறவர்கள். பாசி மணி, பவளத்தை தவிர வேறெதுவும் தெரியாத இந்த நாடோடி மக்களுக்கு நம்பிக்கை தரும் ஒளியாய் வந்திருக்கிறார் இந்திரா காப்பி! (அப்பா பெயர் காப்பி)

நெய்வேலியை அடுத்துள்ள மந்தாரக்குப்பம் நரிக்குறவர் காலனியே இந்திரா காப்பியை தலையில் தூக்கி கொண்டாடுகிறது. நரிக்குறவர் குடும்பத்தில் பிறந்தாலும் நாலெழுத்து படித்து, ஆசிரியராக வந்திருக்கிறார் இந்திரா காப்பி. இவரது வீட்டைக் காட்டுவதற்கு போட்டி போட்டுக்கொண்டு ஓடி வருகிறார்கள் அங்கிருக்கும் நரிக்குறவர் மக்கள். நரிப்பல்லும் டால்டா டின்னுமே நிரந்தர சொத்தாகிவிட்ட அந்த மக்களுக்கு, இந்திரா காப்பி ஒரு நடமாடும் அதிசயமாகவே தெரிகிறார்.

நாம் வாயெடுப்பதற்கு முன்பே இந்திரா காப்பியைப் பற்றி காலனி மக்களே பத்தி பத்தியாய் புகழ ஆரம்பித்தார்கள். இந்திரா காப்பியை நாம் படமெடுக்க முயற்சித்தபோது, ‘எங்களயும் உங்கூட சேர்த்து படம் பிடிக்கச் சொல்லு’என்று வரிவடிவம் இல்லாத தங்களின் அல்லி உல்லி பாஷையில் டீச்சரின் காதில் ரகசியமாய் கிசுகிசுத்தார்கள்.அவர்களுக்கு சமாதானம் சொல்லிவிட்டு பேசத் தொடங்கினார் இந்திரா காப்பி. “பொழப்பு கெட்டுப் போகும்கிறதால எங்க கூட்டத்துல புள்ளைங்கள ஸ்கூலுக்கு அனுப்ப மாட்டாங்க. நான் ஸ்கூலுக்கு போயே ஆவேன்னு அடம்பிடிச்சேன். மந்தாரக்குப்பம் கிறிஸ்தவ பள்ளியில்தான் ஆரம்பப் படிப்பு. என் துறுதுறுப்பை பார்த்துட்டு, பள்ளித் தாளாளர் பாதிரியார் டான்போஸ்கோ அன்பா கவனிச்சிக்கிட்டார். இன்னைக்கி இந்த நிலைக்கு வந்திருக்கேன்னா அவர்தான் காரணம். எங்க சனத்துல சின்ன வயசுலயே பொம்பளப் புள்ளைங்களுக்கு கல்யாணம் கட்டி வைச்சிடுவாங்க. எனக்கும் பள்ளிப்படிப்பு முடிச்சதும் கல்யாணம் பண்ணிவைக்க நெனச்சாங்க. நான் ஒப்புக்கல. நல்லா படிச்சு நம்ம மக்கள அறியாமையிலருந்து மீட்கணும்னு நெனச்சேன். ஆனா, காலேஜுக்கு போக கையில பணம் இல்லை. அந்த நேரத்துல, இங்கருக்கிற டாக்டர் ராமச்சந்திரன்தான் எனக்கு எல்லா உதவியும் செஞ்சு கல்லூரிக்கு போக ஊக்கம் குடுத்தாரு. எம்.எஸ்சி. வரை படிச்சு, பி.எட்.டும் முடிச்சுட்டேன்.

கீழ்த்தட்டு சமூகத்துல இருந்து ஒரு பொண்ணு படிச்சு முன்னுக்கு வந்திருக்கேனுட்டு கடலூரு ஸ்கூல்ல எனக்கு வேலை குடுத்தாங்க. கிளாஸ் எடுக்குறது ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்துச்சு. என் தயக்கத்தை புரிஞ்சுக்கிட்டு சக ஆசிரியர்களும் மாணவர்களும் நல்லா ஒத்துழைப்பு குடுத்தாங்க. இப்ப ஒன்பதாயிரம் சம்பளம் வாங்கறேன். நான் இப்படி சம்பாதிப்பேன்னு என் குடும்பத்துல... ஏன், எங்க சனத்துல யாருமே நினைச்சிப் பாத்துருக்க மாட்டாங்க.

என் வளர்ச்சியில எங்க அப்பாவுக்கும் முழு பங்கு இருக்கு. பால்ய விவாகத்தை கட்டாயமா வைச்சிருக்கிற எங்க சமூகத்துல, எங்க அப்பா வித்தியாசமான மனிதர். நான் திருமணத்துக்கு மறுத்ததுமே, அப்பா மறுத்துப் பேசல. என் தம்பியை விஷுவல் கம்யூனிகேஷன் படிக்க வைச்சிருக்காரு. தங்கச்சி பிளஸ்2 படிக்கிறா.

புள்ளைங்க அரசாங்க உத்தியோகத்துக்கு போகணும்கிறது அப்பா ஆசை. அதை நிறைவேத்துறதுதான் எங்க லட்சியம். அதுக்காக ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியிருக்கேன். டி.என்.பி.எஸ்.சி. தேர்வும் எழுதிட்டு வர்றேன். எங்க குடும்பத்துல எல்லாரும் ஓரளவு படிச்சிட்டோம். ஆனா, காலனி சனங்க படிப்பறிவு இல்லாம இருக்காங்க. அவங்கள திருத்தி, படிக்கிற வயசுல இருக்கிற அத்தனை புள்ளைங்களையும் நல்லா படிக்க வைக்கணும். இங்கே இருக்கிற பொம்பளப் புள்ளைங்களுக்கு படிப்புல நல்லா ஆர்வம் இருக்கு. அதனால, ஸ்கூல்லருந்து வந்ததும் அவங்கள கூட்டி வைச்சி டியூஷன் எடுக்குறேன்.

எங்க கூட்டத்துல இன்னும் சில அவலங்களும் இருக்கு. முக்கியமா பால்ய விவாகம். என்கிட்ட படிக்க வர்ற புள்ளைங்களுக்கு இப்பவே மாப்ள பேசிக்கிட்டு இருக்காங்க. இதை மொதல்ல மாத்தணும். அப்பதான் எங்க சனங்க முன்னுக்கு வரும்” மளமளவென பேசிக்கொண்டே போகும் இந்திரா காப்பியை இடைமறித்துப் பேசிய அவரது தந்தை காப்பி, ’’ எனக்கு அவ்வளவா வெவரம் பத்தாதுங்க. வேட்டைக்கு போவேன், அதுல வர்ற வருமானத்தை வைச்சி, குடும்பத்தை நடத்துறேன். பாதிரியார் டான்போஸ்கோ என்ன சொல்றாரோ அதுதான் எங்களுக்கு சாமி வாக்கு. அவர் சொன்னதாலதான் இந்தப் புள்ளைய மேல்படிப்பெல்லாம் படிக்க வைச்சேன். பொம்பள புள்ளையாச்சேனு அன்னைக்கே யாரு கையிலயாச்சும் புடிச்சுக் குடுத்துருந்தா.. இதெல்லாம் நடந்துருக்குமா சாமி? எம்புள்ளை கவுருமெண்டு உத்தியோகத்துக்கு போறதயும் நானும் என் பொஞ்சாதியும் கண்ணார பாத்துட்டோம்னா போதும் சாமி!’’ கைகூப்பி விடைகொடுக்கிறார் காப்பி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x