Published : 19 Feb 2017 10:43 AM
Last Updated : 19 Feb 2017 10:43 AM

விவாதக் களம்: சுயஒழுக்கமும் நன்னெறியுமே குற்றத்தைக் குறைக்கும்

நம்மைச் சுற்றி தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் குழந்தைகள் மீதான வன்முறை குறித்து, ‘நம் வீட்டிலும் ஒரு குற்றவாளி?’ என்று பிப்ரவரி 12-ம் தேதி வெளியான ‘பெண் இன்று’ இணைப்பிதழில் எழுதியிருந்தோம். பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறையை எப்படித் தடுப்பது என்று கேட்டிருந்தோம். கடுமையான சட்டங்கள், குழந்தை வளர்ப்பு, கல்வி முறை போன்றவற்றுக்கு இதில் முக்கியப் பங்கு இருப்பதாகப் பலர் குறிப்பிட்டிருந்தார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதங்கள் உங்கள் பார்வைக்கு…

தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள் வதைவிட ஆபத்தின் ஆதாரத்தை வேரறுக்க வேண்டும். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தாத ஆணின் வக்கிரத்தால் விளைகின்ற கொடுமை இது. அதை அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும். இது போன்ற வன்முறைகளால் பெண் குழந்தைகள் மட்டுமல்ல, அந்த வன்முறையில் ஈடுபட்டவனின் வாழ்க்கையும் முடிந்துவிடும் என்பதையும் உணர்த்த வேண்டும்.

- வீ.சக்திவேல், தே.கல்லுப்பட்டி.

மது, மாது இரண்டையும் ஒதுக்குவதுடன் பொய்யும் சொல்லக் கூடாது என்று தன் மகன் வெளிநாடு செல்லும்போது சத்தியம் வாங்கிய காந்தியின் தாயைப் போல அனைத்துத் தாய்மார்களும் தங்கள் மகன்களை, பெண்களை மதிக்கும் பண்புள்ளவர்களாக வளர்க்க வேண்டும். கணவன், மனைவியை மதித்து நடக்கிற வீட்டில் அவர்களுடைய மகனும் பெண்களை மதித்து நடக்க வாய்ப்பு அதிகம்.

- உஷா முத்துராமன், திருநகர்.

பெண்களை போகப் பொருளாக மட்டுமே கருதும் வழக்கத்தை மாற்ற, ஆண் குழந்தைகளைச் சிறுவயதில் இருந்தே பெண்களைச் சக உயிராக, தோழியாக, சகோதரியாக, தாயாகப் பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். பாலினப் பாகுபாடின்றி குழந்தைகளை வளர்க்க வேண்டும். வாய்ப்புகளை இருபாலருக்கும் சமமாகவே வழங்க வேண்டும்.

பெண் குழந்தைகள் எப்போதும் விழிப் புணர்வோடு இருக்க வேண்டும். புதியவர்களை மட்டுமின்றி பழகியவர்களைக்கூட நம்பக் கூடாது. பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகளை மீண்டும் ஆரம்பித்து, இயந்திரமயமான குழந்தைகள் உலகை அன்புமயமாக்க வேண்டும்.

- தேஜஸ், கோவை.

கடுமையான சட்டத்தைத் தவிர வேறு எதனாலும் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது. ஆணாதிக்கம், சாதி போன்றவற்றால் குற்றவாளிகள் தப்பித்துவிடுகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளியாக்கப் படுகிறார்கள். அதனால் தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும்.

- ஸ்மைலின் ஞா. ஜென்சி, தூத்துக்குடி.

நம் நாட்டில் இணையதளங்களில், திரைப்படங்களில் பெண்களை அரைகுறை ஆடைகளுடன் காண்பிக்கும் போக்கு அதிகரித்துவருவதும் சபலத்துக்கு அடிமையானவர்கள் அந்தக் காட்சிகளைப் பார்த்து அவற்றின் தூண்டுதலால் ஏற்படும் வக்கிரமான சிந்தனைக்கு வடிகால் தேட நினைப்பதுமே பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைக்குக் காரணம். ஊடகங்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டிய காலகட்டம் இது.

- அபூ ஷமீறா, நாகர்கோவில்.

அளவுக்கு மீறிய வன்முறைக் காட்சிகள், அவற்றைத் திரும்பத் திரும்பக் காட்சிப்படுத்தி சம்பாதிக்கும் ஊடகங்கள், அந்தரங்கத்தைப் படமாக்கி உணர்வுகளைத் தூண்டும் திரைப்படங்கள், அனைத்தையும் அறிய உதவும் ஆண்ட்ராய்டு அறிவியல் சாதனங்கள், மூளையை மழுங்கடித்து வக்கிர எண்ணங்களைத் தூண்டும் மது வகைகள்… இவை அனைத்தும் என்றைக்குக் கட்டுப் பாட்டுக்குள் வருகின்றனவோ அன்று நாம் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து விவாதிக்க வேண்டிய அவசியமே இருக்காது.

- சுபா, சேலம்.

இன்றைய உலகில் வலைத்தளம் என்பது இளைய தலைமுறையின் வாழ்க்கையாகி விட்டது. அதன் காரணமாகவே பல இளைஞர்கள் வக்கிர எண்ணங்களுக்குள் தள்ளப்படுகிறார்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நன்னெறிகளைச் சொல்லி, அவர்கள் மனதில் நல்ல எண்ணங்களை ஏற்படுத்த வேண்டும். அதன் தாக்கமே அவர்களைத் தீய வழிகளுக்குச் செல்லாமல் காக்கும். பெண்களை இழிவுபடுத்தும் திரைப்பாடல்களும் நகைச்சுவை காட்சிகளும் தடை செய்யப்பட வேண்டும்.

- இரா. பொன்னரசி, வேலூர்.

நம் ஒவ்வொருவர் வீட்டிலிருந்தும் குற்றவாளிகள் உருவாக வாய்ப்பிருப்பதை உணர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். பெரும்பாலான நேரம் குழந்தைகள் பள்ளியில் இருப்பதால் அங்கும் அவர்கள் வழிநடத்தப்பட வேண்டும். அறிவுடன் நீதியைப் போதிக்கும் கல்வியே இன்றைய அத்தியாவசியத் தேவை. பெண்களை இழிவுபடுத்துவதையே நகைச்சுவை என்று கற்பித்துவரும் திரைப்படங்கள் இந்தக் குற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

குடிக்குத் தடை வராதவரை இந்த வக்கிரங்கள் குறைய வாய்ப்பே இல்லை. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுகிறவர்கள், அடையாளப்படுத்தப்பட்டு, கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக இணையத்தின் வழியாக நுழையும் நச்சுக் காற்றை நிறுத்தினாலே போதும், வக்கிரங்கள் தானாக மாய்ந்துவிடும்.

- ஜே .லூர்து, மதுரை.

பெண் குழந்தைகளுக்கு சரியான தொடுதல், தவறான தொடுதலைச் சொல்லித் தருவதுபோல ஆண் குழந்தைகளுக்கும் நற்பண்புகளைப் பெற்றோர்கள் சொல்லித்தர வேண்டும். சிறு வயது முதலே நற்பண்பு உள்ளவர்களாக வளர்க்க வேண்டும். குழந்தை வளர்ப்பை மேம்படுத்துவதில் குடும்பத்தினருக்கு எவ்வளவு பங்கு இருக்கிறதோ, அதே அளவு பங்கு அரசுக்கும் ஊடகங்களுக்கும் இருக்கிறது.

- ஜானகி ரங்கநாதன், சென்னை.

தொலைக்காட்சிகளும் திரைப்படங்களும் குழந்தைகளைச் சீரழிக்கின்றன. கார்ட்டூன் படங்களில்கூட மரியாதை இல்லாத வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றனர். குழந்தை வளர்ப்பில் பாகுபாட்டை ஒழித்து, நற்பண்புகளோடு வளர்க்க வேண்டும்.

- வே. தேவஜோதி, மதுரை.

குழந்தைகளைச் சீரழிக்கிறவர்களில் பலர் சட்டத்தில் இருக்கிற ஓட்டைகள் மூலமாக எளிதில் வெளியே வந்துவிடுகிறார்கள். அதைத் தடுக்க வேண்டும். தண்டனைகளைக் கடுமையாக்க வேண்டும்.

- சுசீலா ராமமூர்த்தி, திருப்பூர்.

ஒரு பெண்ணை ஐந்து பேர் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், அவர்களிடம் விசாரணை செய்தபோது ஒரு திரைப்படக் காட்சியைப் பார்த்து அதைப்போல செய்ததாக அவர்கள் தெரிவித்ததாகச் செய்தித்தாளில் படித்தேன். திரைப்படங்கள், தொலைக்காட்சி இவற்றில் பெண்கள் காட்சிப் பொருளாக, ஆபாசமாகச் சித்தரிக்கப்படுவதை ஏன் யாரும் கண்டுக்கொள்வதில்லை? நாகரிகச் சமுதாயம் - சுதந்திரம் என்பதெல்லாம் அடுத்தவர் மூக்கைத் தொடாதவரை என்பார்கள். பெற்றோர் ஆண், பெண் குழந்தைகளைக் கவனமுடன் வளர்த்தால் ஆணும் பெண்ணும் நன்னடத்தை உள்ளவர்களாக இருப்பார்கள்.

- பி.ஆர்.பி, தலைஞாயிறு.

மனித மனங்களில் பதிந்துள்ள வக்கிரத்தை அழிக்க பள்ளிகளில் நன்னெறி வகுப்புகள் நடத்த வேண்டும். பெண் குழந்தைகளுக்குத் தற்காப்புப் பயிற்சி தேவை. பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை தொடர்பான விசாரணையைக் காலம் தாழ்த்தாது நீதிமன் றங்கள் விரைந்து நடத்த வேண்டும். அவர் களுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

- டி.சிவா, செங்கல்பட்டு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x