Last Updated : 16 Apr, 2017 01:04 PM

 

Published : 16 Apr 2017 01:04 PM
Last Updated : 16 Apr 2017 01:04 PM

ஒரு பிரபலம் ஒரு பார்வை - எங்கள் கனவும் மெய்ப்பட வேண்டும்

ஏப்ரல் 15: திருநங்கைகள் தினம்

கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இந்திய, அமெரிக்க மாணவர்கள் மத்தியில் மாற்றுப்பாலினர் வாழ்வுரிமை பற்றிப் பேச என்னை அழைத்திருந்தனர். எனது உரைக்குப் பிறகான கேள்வி பதில் நிகழ்வில் ஒரு மாணவர், “மாற்றுப்பாலினரின் வாழ்க்கை மேம்பட அரசாங்கத்துக்கு ஒரு நல்ல ஆலோசனை சொல்லுங்கள்” என்றார். அதற்கு நான், “வெறுமனே வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, இலவசப் பொருட்கள், தங்குவதற்கு ஒரு இருப்பிடம் கொடுத்தால் மட்டும் எங்கள் வாழ்க்கை மேம்படாது.

நிரந்தரத் தீர்வு என்பது நாங்கள் எங்கள் பெற்றோரால் புறக்கணிக்கப்படாமல் அண்ணன், அக்கா, தங்கையோடு வாழ்வதில்தான் இருக்கிறது. அவர்களைப் போல நாங்களும் பள்ளி, கல்லூரிக் கல்வியைத் தடையின்றித் தொடர வேண்டும். அதற்கான சமூகச் சூழலை அரசு உருவாக்க வேண்டும். குடும்பங்கள் எங்களைப் புறக்கணிப்பதை அரசு தடுக்க வேண்டும். அதற்கான திட்டங்களை வகுத்து அக்கறையுடன் செயல்படுத்த வேண்டும்” என்றேன்.

2014, ஏப்ரல் 15 அன்று இந்திய உச்சநீதிமன்றம் மாற்றுப்பாலினரான திருநங்கைகளையும் திருநம்பிகளையும் சட்டரீதியாக அங்கீகரித்தது. மாற்றுப்பாலினரின் நலன்களைப் புறக்கணிக்காமல் கல்வி, வேலைவாய்ப்பு, இருப்பிடம், மருத்துவ வசதிகள் பெறுகிற உரிமைகளைச் சரியாக வழங்க வேண்டும் என்றும், மூன்றாம் பாலினத்தவரை சமூகரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மிகவும் பின்தங்கியவர்களாக கருதி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.ராதாகிருஷ்ணன், கே.ஏ.சிக்ரி ஆகியோர் தங்கள் தீர்ப்பில் அறிவுறுத்தியிருந்தனர்.

எங்கள் முன்னோர்களும் நாங்களும் பல ஆண்டுகள் போராடியதன் பலனாகப் பெற்றதுதான் இந்தத் தீர்ப்பு. குடும்பங்களின் புறக்கணிப்பு, பள்ளிகளில் கேலி –வசைச் சொற்கள், பாலியல் வன்முறை, கடத்தப்பட்டுப் பிச்சை எடுக்க நிர்ப்பந்தம், பாலியல் சுரண்டல்கள், உளவியல், உடல் சார்ந்த குழப்பங்கள், மனக்கவலை, வாழ்க்கை முழுவதும் சமூகத்தில் தனது இருப்புக்கான போராட்டம் என்று திருநங்கைகள் தலைமுறை தலைமுறையாக அனுபவித்த பெரும் துயரங்கள் இந்தத் தீர்ப்பால் முடிவுக்கு வந்துவிட்டதாகத்தான் நாங்கள் நம்பினோம்.

மாற்றுப் பாலினரின் வாழ்வில் விடியல் தொடங்கிவிட்டதாகக் கருதி, தீர்ப்பு வெளியான அன்று பெரும் மகிழ்வுடன் கொண்டாட்டமுமாக இருந்தோம். இந்தியா விடுதலை பெற்றபோது மக்களுக்கு என்ன உணர்வு இருந்திருக்குமோ அத்தகைய உணர்வும் மகிழ்வும் எங்களுக்கு ஏப்ரல் 15-ல் இருந்தது.

இந்தத் தீர்ப்பு வெளியாகி மூன்று ஆண்டுகள் நிறைவுபெற்றுவிட்டன. இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருந்த சமயத்தில் மாற்றுப்பாலினரின் பிரச்சினைகளைக் கவனிக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. மாற்றுப்பாலினரின் பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் அந்தக் குழு மூன்று மாதங்களுக்குள் நீதிமன்றத்துக்கு அறிக்கையை அளிக்க வேண்டும் என்றும் அவற்றை மத்திய அரசும் மாநில அரசுகளும் ஆறு மாதங்களுக்குள் அமல்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தது.

ஆனால், மூன்று ஆண்டுகளாகியும் இட ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை. நிபுணர் குழுவின் பரிந்துரைகளில் இருபது சதவிகிதம்கூடப் பல மாநில அரசுகள் கொண்டுவரவில்லை; செயல்படுத்தவுமில்லை. மத்திய அரசு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருநங்கை பிரதிநிதிகளை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. அதன் பிறகு எந்த நடவடிக்கையும் இல்லை.

தீர்ப்புக்குப் பிறகு இந்த மூன்று ஆண்டுகளில் எங்களில் பெரும்பான்மையானவர்களின் வாழ்க்கையில் பெருமை கொள்கிற மாற்றங்கள் ஏதுமில்லை. எங்கள் குடும்பங்கள் எங்களை புறக்கணித்துக்கொண்டுதான் இருக்கின்றன. பிச்சையெடுக்கும் திருநங்கைகள் பிச்சைதான் எடுக்கிறார்கள், பாலியல் தொழில் செய்பவர்கள் அதைத்தான் தொடர்ந்து கொண்டிருக் கிறார்கள். ஒரு பெரும் போராட்டத்துக்குப் பிறகு திருநங்கை பிரித்திகா காவல்துறையில் துணை ஆய்வாளரானார். மேற்கு வங்கத்தில் திருநங்கை மானவி பந்தோபாத்யாய கல்லூரி முதல்வராகியிருக்கிறார். சத்தீஸ்கர் ராய்கர் நகரத்தில் மது கின்னர் மேயராகியிருக்கிறார்.

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் குணவதி என்பவர் தாய்சேய் நல சேவைப் பணியில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுப் பணியாற்றிவருகிறார். அத்தி பூத்தாற்போல் திருநங்கைகளில் யாராவது ஒருவர் சாதித்தாலே அது தலைப்புச் செய்தியாகிவிடுகிறது. அத்தோடு சரி. தனிப்பட்ட வெற்றிகள் போராட்ட வாழ்வில் உற்சாகம் தருமே தவிர, அவை இந்தச் சமூகத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றம் ஆகாது.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரீமா பத்தாண்டுகளாக அரசு வேலைக்காகப் போராடுகிறார். மதுரையைச் சேர்ந்த சொப்னா பல ஆண்டுகளாக அரசு வேலைக்காகப் போராடுகிறார். எப்போதும்போல ஒவ்வொன்றுக்கும் போராட வேண்டிய நிலைதான் இன்றுவரை திருநங்கை சமூகத்துக்கு உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் விழுப்புரம் கூவாகம் விழாவில் திருநங்கை அழகிகளாக மூன்று பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதுவும் முக்கியச் செய்தியாகும். ஆனால், மேடையில் கிரீடம் சூட்டப்படும் அந்தத் திருநங்கைககளின் வாழ்வில் எந்தவித நல்மாற்றமும் ஏற்படுவதில்லை என்பது வருந்தத்தக்க கசப்பான உண்மை.

எனக்குத் தெரிந்து கிரீடம் சூட்டப்பட்ட பல திருநங்கைகள் பிச்சையெடுக்கும் நிலைக்கோ, பாலியல் தொழில் செய்யும் நிலைக்கோதான் மீண்டும் தள்ளப்படுகிறார்கள். இந்தச் சமூகத்துக்கு ஓட்டு வங்கி இல்லாததாலோ என்னவோ நீண்டகால செயல்திட்டத்தோடும் அக்கறையோடும் அரசு இதுவரை செயல்படவில்லை. அரசின் பல அறிவிப்புகள் தண்ணீரில் எழுதிய கோலங்களே.

தமிழ்நாடுதான் மாற்றுப்பாலினரின் நலனில் முன்னோடியாக இருந்தது. தமிழகத்தில் 2007-ல் அப்போதைய தி.மு.க. அரசு, அரவாணிகள் நலவாரியம் ஆரம்பித்தது. அதன் பிறகு வந்த அ.தி.மு.க. அரசு அரசியல் காரணங்களுக்காக நல வாரியத்தை முடக்கிவைத்துவிட்டது. கடந்த பல ஆண்டுகளாகச் சமூக நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட வேண்டிய நல வாரியம் முடங்கிக் கிடக்கிறது. மாவட்ட ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருநங்கை பிரதிநிதிகளின் கூட்டங்கள் வாரிய அலுவலகத்தில் நடைபெறுவதில்லை.

சமூகப் பிரதிநிதிகளாக இருந்தவர்களுக்குத் தாங்கள் இன்னும் நல வாரியத்தில் உள்ளோமா என்றே தெரியவில்லை. எனினும், தொகுப்பு வீடுகள், வீட்டுமனை பட்டா, சுய உதவிக் குழுக்களுக்கான நிதி என்று சில திட்டங்கள் அறிமுகமாகி திருநங்கைகள் ஓரளவு பயன்பெற்றுள்ளனர். இவை மட்டும் போதுமா? அரசு செய்ய வேண்டிய கடமைகளும் பணிகளும் ஏராளமாக இருக்கின்றன. முடக்கப்பட்ட நல வாரியம் செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

மாற்றுப் பாலினர் மீதான அக்கறையில் மிகவும் பின்தங்கியிருந்த கேரள மாநிலம் தமிழகத்தைக் காட்டிலும் இன்று வேகமாக முன்னேறுகிறது. தமிழகத்தை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு செயல்பட்ட மேற்கு வங்கம், சத்தீஸ்கர், ஒடிஷா, கர்நாடகம் போன்ற மாநிலங்களும் பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. மாற்றுப்பாலினர் நலனில் முன்மாதிரியாக இருந்த தமிழகம் இப்போது பின்தங்கிவிட்டதோ என்று கவலை ஏற்படுகிறது.

தமிழகத்தில் அரவாணிகள் நல வாரியம் மாற்றுப்பாலினர் நல வாரியமாக உயிர்பெற வேண்டும். திருநங்கைகள், திருநம்பிகள், இடையிலிங்கத்தவர் என அனைவரையும் உள்ளடக்கியதாக இந்த வாரியம் செயல்பட வேண்டும். கல்வியுதவி, வேலைவாய்ப்பு ஆகியவை வழங்கப்பட வேண்டும். கல்விக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும். இன்னும் பத்தாண்டுகளில் திருநங்கைகள் வழக்கறிஞர்களாக, மருத்துவர்களாக, விவசாயிகளாக, பொறியாளர்களாக, பேராசிரியர்களாக, தொழிலதிபர்களாக உயர வேண்டும். தெருவில் தள்ளப்படாமல் தங்கள் குடும்பங்களோடு மகிழ்ச்சியாக வாழ வேண்டும். இதுதான் எங்கள் அனைவரின் கனவு. இந்தக் கனவு மெய்ப்பட காரியத்தில் உறுதி கொள்ளுமா அரசு?

கட்டுரையாளர்,
மாற்றுப்பாலினருக்கான சமூகச் செயற்பாட்டாளர்,
சகோதரி அறக்கட்டளையின் நிறுவனர்
தொடர்புக்கு: aurokalki@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x