Published : 31 Jul 2016 11:22 AM
Last Updated : 31 Jul 2016 11:22 AM
புற்றுநோயுடன் போராடி மீண்டுவந்த கவிதாவை யாரும் அத்தனை சீக்கிரம் மறந்துவிட முடியாது. ‘பெண் இன்று’ இணைப்பிதழில் அவர் எழுதிய, ‘இருளுக்கு இங்கே இனி என்ன வேலை?’ என்ற தொடர், பலருக்கும் உற்சாக டானிக்காக இருந்தது. சின்னச் சின்ன பிரச்சினைகளுக்கே சோர்ந்துபோகிற பலரும் கவிதாவின் தன்னம்பிக்கையையும் உறுதியையும் பார்த்து வியந்ததாகத் தெரிவித்திருந்தார்கள். கடிதங்கள், மின்னஞ்சல் வாயிலாகத் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட வாசகிகள் மகளிர் திருவிழாவில் பங்கேற்ற கவிதாவை, தங்கள் அன்பாலும் ஆதரவாலும் நெகிழச் செய்துவிட்டனர்.
எல்லாம் நல்லபடியாக முடிந்தததாகத்தான் கவிதாவும் நம்பினார். ஆனால் அந்த நம்பிக்கை நீடிக்கவில்லை. மூன்று மாதங்களுக்கு முன்பு அவருக்குக் கழுத்தில் தாங்கமுடியாத வலி ஏற்பட, மருத்துவர்களைச் சந்தித்திருக்கிறார். சிகிச்சைக்குப் பிறகும் வலி குறையாததால் கவிதாவுக்கு லேசாக சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. மருத்துவரின் பரிந்துரைப்படி சில பரிசோதனைகளைச் செய்ததில் நுரையீரலில் புற்றுநோய் பரவியிருப்பது தெரியவந்திருக்கிறது.
“கழுத்துல வலி குறையாதபோதே எனக்கு சந்தேகம்தான். டெஸ்ட் முடிவு எனக்குப் பாதகமாத்தான் இருக்கும்னு தோணுச்சு. அதே மாதிரிதான் முடிவும் வந்தது. எனக்கு கேன்சர்னு முதல் முறை தெரிஞ்சப்போ இருந்த உறுதியைவிட இப்போ அதிக உறுதியோடு எதிர்த்துப் போராடத் தொடங்கியிருக்கேன்” வார்த்தைகளில் கொஞ்சமும் பிசிறில்லாமல் தெளிவுடன் பேசுகிறார் கவிதா. ஒவ்வொரு வார்த்தையிலும் தன்னம்பிக்கை எதிரொலிக்கிறது.
மூன்று கீமோதெரபி முடிந்திருக்கும் நிலையிலும் கல்லூரிக்கு விடுப்பு எடுத்துக்கொள்ளவில்லை. தொடர்ச்சியான சிகிச்சையோடு உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்ததால் இந்த முறை பக்கவிளைவுகள் குறைவாக இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.
பல்வேறுவிதமான சிகிச்சைகளை மேற்கொள்வதால் பொருளாதாரச் சிக்கலையும் சமாளித்துவருகிறார். கவிதாவின் இந்தப் போராட்டத்தில் நாமும் கைகொடுப்போமா தோழிகளே? கவிதாவுக்கு உதவ நினைக்கிறவர்கள் 9551511138 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு வழிமுறையைக் கேட்டறியலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT