Published : 12 Jan 2014 12:00 AM
Last Updated : 12 Jan 2014 12:00 AM
உலகெங்கும் உள்ள பல்வேறு நாடுகளின் உணவு வகைகளை நாம் ஏற்றுக் கொண்டிருந்தாலும்கூட, "உணவே மருந்து" என்ற விஷயம் நமது உணவு முறையில் ஆழமாக வேர் ஊன்றியிருக்கிறது. இன்றைக்கு ஒரு சளியோ, காய்ச்சலோ வந்தால் உடனடியாக டாக்டரைத் தேடி ஓடுகிறோம் அல்லது அலோபதி மருந்துகளைச் சாப்பிடுகிறோம். அந்தக் காலத்தில் நமது வீட்டுப் பெரியவர்களோ மருந்துக்குப் பதிலாக உணவு மூலமாகவும், வீட்டு மருத்துவம் மூலமாகவும் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொண்டனர்.
அப்படிக் காலங்காலமாக தொடர்ந்து வரும் ஆரோக்கிய உணவுப் பழக்கங்கள், நமது மிகப் பெரிய பொக்கிஷம். அப்படிப்பட்ட ஆரோக்கிய உணவு முறைகளைப் பற்றி மருத்துவர் கு.சிவராமனிடம் கேட்டோம்:
வீட்டில் எந்த விசேஷமானாலும் சரி, முக்கியப் பண்டிகை, திருவிழா என்றாலும் வாழையிலையில் சாப்பிடுவது நமது பாரம்பரியம். ஹோட்டல்களும்கூட இதைப் பின்பற்றுகின்றன. வாழையிலையில் சாப்பிடுவது செரிமானத்துக்கு உதவுகிறது. அதேபோல் சாப்பிட்ட பின்னர் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து வெற்றிலை போடுவது மருத்துவக் குணங்கள் கொண்டதாகவும், செரிமானத்துக்கு உதவுவதாகவும் இருந்தது.
ஒரு குழந்தை தன் வாழ்க்கையில் சாப்பிடும் முதல் உணவுப் பண்டம் இனிப்பு என்பதில் தொடங்கி, விசேஷங்களில் முதலில் இனிப்பு பரிமாறப்படுவது வரை அனைத்துக்கும் காரணம் இருக்கிறது. உமிழ்நீர் சுரப்பதால்தான் உணவு செரிமானம் அடையத் தொடங்குகிறது. உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கும் இனிப்பை முதலில் சாப்பிட வேண்டும் என்று கூறப்படுவது இதன் காரணமாகத்தான்.
உணவைச் சவைத்து, அரைத்துச் சாப்பிடுவதன் காரணமாக உமிழ் நீரின் சலைவரி என்ஸைம்களுக்கு வேலை கிடைக்கிறது. இதனால் செரிமானம் சிறப்பாக நடக்கும். இதைத்தான் "நொறுங்கத் தின்றால் நூறு வயது" என்று குறிப்பிட்டார்கள்.
உணவின் இறுதியில் மோர் சாப்பிடுவது நல்லது. சீரணம் நடை பெறும்போது ஏற்படும் அமிலச் சுரப்பால் உருவாகக் கூடிய அல்ச ருக்கு, இதுவே மருந்தாக இருக்கும்.
இனிப்பு, சாம்பார், ரசம், மோர் என்ற வரிசைக்கிரமத்தில் உணவைச் சாப்பிடுவது நல்லது. இதன் மூலம் நமது உணவைச் செரிக்க வைக்கும் நொதிகளும், செரிமானமும் சரியான முறையில் நடைபெறும்.
சாப்பாட்டுக்கு முன் சூப் சாப்பிட்டால் அல்சர் வருவதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கின்றன. குளிர் நாடுகளில் இருப்பவர்களுக்குப் பசி உண்டாக்குவதற்குச் சூடான சூப்பைக் குடிக்கும் பழக்கம் இருந்தது. ஆனால் வெப்பமண்டல நாட்டில் வாழும் நமக்கு, அது எப்படி நன்மை தருவதாக இருக்கும்?
அதேபோல் பழங்களைச் சாப்பாட்டுடன் சேர்த்துச் சாப்பிடக் கூடாது. சாப்பாட்டுக்குப் பின் டெசர்ட்டாக சாப்பிடுவதும் பெரிய பலன் தராது. பழத்தின் பாலிஃபீனால்கள், மருத்துவக் குணமுள்ள ஆல்கலாய்டுகள் உடலில் சேர வேண்டுமெனில் பழத்தைத் தனியாகவோ அல்லது முதல் உணவாகவோ சாப்பிடுவது நல்லது.
அதேபோலச் சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பிட்டு 1/2 மணி நேரம் கழித்தே தண்ணீர் அருந்த வேண்டும். அது சீரண என்ஸைமை நீர்க்கச் செய்யாமல், உணவில் உள்ள அத்தனை சத்தையும் உடல் கிரகிக்க வகை செய்யும்.
காலையில் குளிர்ந்த நீர் 2 டம்ளரும் இரவில் படுக்கும் முன் 3 டம்ளர் வெந்நீரும் அருந்தினால் உடல் உறுதியாகும். சாப்பாட்டின் ஆரம்பத்தில் தண்ணீர் குடித்தால் உடல் சூட்டைத் தணித்து உடல் இளைக்கும், உணவின் இடையில் தண்ணீர் குடித்தால் நடுத்தரமான உடல் பருமன் ஏற்படும். இறுதியில் தண்ணீர் குடித்தால் உடல் பருக்கும். பித்தம் (உடல்சூடு) இருப்பவர்கள் குளிர்ந்த நீரும், வாதம், கபம் (சளி) இருப்பவர்கள் வெந்நீரும் குடிப்பது சிறந்தது. வெந்நீர் உடல் சூட்டைத் தூண்டிப் பித்தத்தைச் சுத்தம் செய்து, இருமல், சளியைக் குறைக்கும்.
நமது உணவில் அனைத்துச் சுவைகளும் சேர்த்துக்கொள்ளப்பட்டது மட்டுமில்லாமல் சரிவிகித உணவாகவும் இருந்தது. அதனால் நமது உணவில் அனைத்துச் சத்துகளும், செரிமானத்துக்குத் தேவையான விஷயங்களும் உள்ளன. அந்தப் பழைய முறையைத் தெரிந்துகொண்டு பின்பற்றினாலே, பெரும்பாலான நோய்களைத் தவிர்க்க முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT