Published : 10 Oct 2013 12:53 PM
Last Updated : 10 Oct 2013 12:53 PM
"இந்நேரம் நான், என் புருஷன், எங்களோட நாலு பொம்பள புள்ளைங்க எல்லாரும் பொணமா கெடந்திருப்போம். இன்னைக்கு ஒருநாள் பொறுத்துக்குங்கன்னு என் புருஷன்கிட்ட தவணை சொல்லிட்டு வந்திருக்கேன். நீங்க ஒரு தீர்வு சொல்லலைன்னா... நாங்க விஷம் சாப்பிட்டு செத்துட்டோம்னு நாளைக்கு காலையில செய்தி வரும். ஏதோ எங்க வீட்டுல மட்டும்தான் இப்படி நடக்குதுன்னு நினைக்காதீங்க. எங்கள மாதிரி நிறையப் பேரு குடும்பம் குடும்பமா தற்கொலை செஞ்சிருக்காங்க. இன்னும் செய்யப்போறாங்க" லதா நடராஜனின் இந்தக் கதறலைக் கேட்டு கலெக்டரே ஆடிப் போய்விட்டார்.
இந்தச் சம்பவம் நடந்தது 2002-ல். எதற்காக லதா நடராஜன் குடும்பம் தற்கொலை முடிவுக்கு வந்தது... அதிலிருந்து எப்படி அவர்கள் மீண்டார்கள்? அதை அவரே சொல்கிறார் கேளுங்கள். "தங்கநகை பட்டறை நடத்தி வந்தவர் என் கணவர். காரு, பங்களான்னு வசதியா வாழ்ந்த எங்களுக்கு நாலு பொண்ணுங்க. கோவை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்துக்குப் பிறகு, எங்க பட்டறைத் தொழிலே படுத்துப் போச்சு. பெரும்பாலும் பில் போடாமத்தான் எங்க பிசினஸ் நடக்கும். அதனால, சோதனைங்கிற பேருல, வெளி மாநிலங்களுக்கு நாங்க கொண்டு போற தங்கத்தை எல்லாம் போலீஸ் பறிமுதல் பண்ணிருச்சு. அதனால, எங்க முதலும் போயி, தொழிலும் படுத்துக்கிச்சு.
எங்களப் போல நகைப்பட்டறை தொழில்ல இருந்த பலபேரு நஷ்டத்தை சமாளிக்க வழி தெரியாம, குடும்பம் குடும்பமா தற்கொலை செய்ய ஆரம்பிச்சாங்க. என்னோட நாத்தனார் குடும்பமும் அப்படித்தான் மூணு புள்ளைங்களோட செத்துப் போனாங்க. ஒரே வீட்டுல அஞ்சு சாவு. அதப் பாத்துட்டு எங்க வீட்டுக்காரரும், 'நம்ம நிலைமை எந்தங்கச்சியவிட மோசமா இருக்கு. அதனால, நமக்கும் அதுதான் வழி'ன்னு அடிக்கடி புலம்ப ஆரம்பிச்சிட்டார். நெய்யும் சோறுமா சாப்பிட்டுட்டு இருந்த எங்க வீட்ல சாப்பாட்டுக்கே வழியில்லைங்கற நிலை வந்துடுச்சு. மத்தவங்கட்ட கடன் வாங்கவும் மனசு ஒப்பல. ஒருநாள் எப்படியோ 500 ரூபாய் புரட்டி பட்டறை வேலைக்குன்னு சொல்லி விஷம் வாங்கிட்டு வந்தாரு. 'நீ முதல்ல புள்ளைகளுக்கு கொடுத்துடு. அப்புறம் நாம சாப்பிட்டுக்கலாம்னு எங்கையில விஷத்தை கொடுத்துட்டார்" தன்னையும் அறியாமல் பொங்கி வந்த கண்ணீரை சேலைத் தலைப்பால் துடைத்துக் கொண்டு தொடர்ந்தார் லதா.
"இதுக்கு வேற வழியேயில்லையா? ஒரே ஒரு நா பொறுத்துக்குங்க. சாகறதுன்னா நாளைக்கு செத்துக்கலாம்ன்னு அவருக்கிட்ட சொன்னேன். அதுக்கே அவரை சம்மதிக்க வைக்க பெரும்பாடா போச்சு. அடுத்தநாள் ஒரு மனுவை எழுதிட்டு போனேன். கலெக்டர் முருகானந்தம் சாரைப் பார்த்து எனக்காக, எங்க குழந்தைகளுக்காகத்தான் பேசவே போனேன். ஆனா, என்னையும் அறியாம எங்க சனங்க குடும்பம் குடும்பமா தற்கொலை செஞ்சுக்க இருந்த சேதிய சொல்லி அழுது கரைஞ்சுட்டேன். 'நாங்க பொழைச்சாகணும்ன்னா ஒரு டெலிபோன் பூத்தாவது வச்சுக் கொடுங்க'ன்னு சொல்லிட்டு மயங்கிட்டேன்.
என்னுடைய வேதனையை புரிஞ்சுக்கிட்ட கலெக்டர் என்னை தேத்தி, 'எனக்காக ஒரு நாள் டைம் கொடுங்கம்மா. உங்க ஜனங்களை எல்லாம் பாக்கணும். கூப்பிட்டுட்டு வாங்க'ன்னு சொன்னார். எங்க ஏரியா மக்கள்ட்ட இதைச் சொன்னதும், அத்தனை பேரும் கலெக்டர பாக்க கெளம்பிட்டாங்க. கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட குடும்பங்க; கலெக்டர் ஆபீஸ்ல நிக்கக்கூட இடமில்லை. அத்தனை பேரை பார்த்து கலெக்டரே அதிர்ந்துட்டார்.
அப்பவே, சுயதொழில் கத்துக் கொடுக்கற அவினாசிலிங்கம் 'ஜன்சிக்சன் சன்ஸ்தான்' அமைப்பில் பேசினார். எங்களை மனம் மாற்ற தன்னம்பிக்கை மற்றும் யோகா பயிற்சியும், பிறகு அவரவருக்கு ஏற்ற மாதிரி தொழிற்பயிற்சியும், அதற்கான வங்கிக் கடனுதவியும் ஏற்பாடு செஞ்சாங்க. நிறைய பெண்கள் டெய்லரிங் பயிற்சி எடுத்தாங்க. நான் ஒரு கிராம் தங்க நகை, கவரிங் செயின் தயாரிப்புக்கான பயிற்சிகளை எடுத்தேன். என் வீட்டுக்கார் ஐம்பொன் நகை தயாரிப்பு பயிற்சி எடுத்தாரு.
பயிற்சி முடிஞ்சு தொழிலுக்கு தகுந்த மாதிரி அத்தனை பேருக்கும் லோன் ஏற்பாடு ஆச்சு. என்னை மாதிரி 300க்கும் மேற்பட்டோர் சொந்தமா தொழில் ஆரம்பிச்சாங்க. மீதியெல்லாம் பயிற்சிக்கு ஏத்த மாதிரி வேலைக்குப் போனாங்க. எங்க வீட்டுக்காரரு டி.பி. அட்டாக்குல திடீர்னு இறந்துட்டாரு. அதுக்கப்புறமும் எனக்கு இந்தத் தொழில்தான் தன்னம்பிக்கையை குடுத்துச்சு. அந்த தெம்புல என்னோட புள்ளைங்கள நல்லா படிக்க வைச்சு, ரெண்டு பொண்ணுங்கள கட்டியும் குடுத்துட்டேன்.
என்னோட முயற்சியால, அன்னெய்க்கு தற்கொலைக்கு தப்பிச்சவங்க, இன்னெய்க்கு என்னைய மகளிர் அணி தலைவின்னுதான் கூப்பிடறாங்க. இப்பவும் நான் ஏதாச்சும் எங்க சனங்களுக்கு பிரச்சினைன்னா போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போய் தைரியமா பேசறேன். யாருகிட்டவும் ஒத்தப் பைசா எதுக்காகவும் வாங்கிக்கறது இல்லை. ஒரு தடவை செத்துப் பொழைச்ச எங்களுக்கு இன்னெய்க்கு இன்னும், இன்னும் வாழணும்ன்னுதான் தோணுது!" - மீண்டும் லதாவின் கண்கள் குளமாகிப் போகிறது - ஆனால், இது ஆனந்தக் கண்ணீர்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT