Published : 07 May 2017 10:53 AM
Last Updated : 07 May 2017 10:53 AM
சமீபத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவருடன் உரையாடும்போது அவர் தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். “எனக்குக் குழந்தை பிறந்தபோது, எனது நண்பர் என்ன குழந்தை என்று கேட்டார். நான் பெண் குழந்தை என்றவுடன் அவர் நோ பிராப்ளம் என்றார். பெண் குழந்தை பிறந்ததில் எனக்கு பிராப்ளம் என்று நினைத்துக்கொண்டு அவர் அப்படிச் சொன்னார்” என்று சொல்லிவிட்டுச் சிரித்தார். கல்வி, அறிவியல் அறிவு இவற்றையெல்லாம் மீறி, பெண்ணின் பிறப்பு என்பது அந்தப் பெற்றோருக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய ஒரு சம்பவமாக ஏன் இன்னும் தொடர்கிறது?
பெருநகரத்தில் உயர் கல்வி படித்த ஒருவரது அனுபவமே இப்படியென்றால் கிராமங்களில் எப்படியிருக்கும்? பல பெண்களுக்கு மகப்பேறு காலமான பத்து மாதங்களுமே பிறக்கப்போவது ஆணா, பெண்ணா என்பதற்கான போராட்டமாகவே இருக்கிறது.
நிறத்தின் வன்முறை
நம் நாட்டுப் பெண்களின் பொதுவான நிறம் கறுப்பு. நல்ல கறுப்பும் புது நிறம் அல்லது மாநிறம் என அழைக்கப்படும் நிறங்களுக்குமிடையேதான் பெரும்பாலான பெண் குழந்தைகள் பிறக்கின்றன. ஆண் குழந்தைகளும்தான். ஆனால், நிறம் ஆண் குழந்தைகளைப் பாதிப்பதைவிடப் பெண்களைப் பாதிப்பது அதிகம். கறுத்த மாப்பிள்ளையும் சிவத்த பெண்ணைத் தேடும் நாடு இது. குழந்தை ஆணா, பெண்ணா என்ற கேள்விக்கு அடுத்த கேள்வி குழந்தை என்ன நிறம் என்பதுதான். இங்கு சிவப்பான தோலுடன் பிறக்காத அனைத்துப் பெண் குழந்தைகள் மனதிலும் முதலில் அனுபவமாகும் வலி அவர்கள் நிறம் பற்றியதாகவே இருக்கிறது. 90 சதவீதத்துக்கும் மேலான குழந்தைகள் கறுப்பு மற்றும் கறுப்பு சார்ந்த நிறத்திலிருக்கும் ஒரு நாட்டில் கறுப்பாக இருப்பது ஏன் வேதனையளிப்பதாக, ஆழமாக அவர்களை முடக்குவதாக இருக்கிறது?
சாதிய அமைப்பின் விளைவுகளில் இதுவும் ஒன்று. சொந்த வீட்டிலேயேகூடச் சில குழந்தைகளுக்கு இது தொடங்கிவிடுகிறது. “அம்மாவுக்கு அக்காவைத்தான் பிடிக்கும். ஏன்னா அவ சிவப்பா இருக்கா” என்று ஏங்கியபடியே சொல்லும் குழந்தைகளை நம்மில் பலரும் சந்தித்திருப்போம். இந்தப் பாகுபாடு பள்ளிகளில் மிக மோசமான வகையில் தொடர்கிறது. குறிப்பாகக் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கான மாணவர் தேர்வில் நிறப் பாகுபாடு குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. எதுவும் தெரியாமல் மலங்க மலங்க முழித்தாலும் சிவத்த பிள்ளை முழித்தால் ரசிக்க முடிகிறது. தனது வாழ்நாள் முழுவதும் கறுப்பு என்கிற ஒரே காரணத்துக்காகப் புறக்கணிக்கப்படுவது இங்கு சரிபாதிக்கும் மேலான பெண்களின் வாழ்க்கையாக இருக்கிறது. இந்தக் குமுறல்தான் ‘நானும் ஒரு பெண்’என்ற பழைய திரைப்படத்தின் முழுக் கதையாகவே அமைந்தது. ‘கண்ணா கருமை நிறக் கண்ணா’ என்று தொடங்கி பி.சுசீலா குரலில் ஒலித்த பாடல் அனைவர் மனதையும் கொள்ளைகொண்டது. ‘உனை மறுப்பாரில்லை வெறுப்பாரில்லை, என்னைக் கண்டாலும் பொறுப்பாரில்லை’என்ற வரிகளில் இழையோடும் சோகத்தின் சுமை, தனிநபர் சோகமல்ல; நமது சமுதாயத்ததைப் பொறுத்தவரையில் நிறப் பாகுபாடு என்பது பெண்களைச் செயல்பாட்டுத் தளத்தில் கொண்டுவருவதில் நாம் சந்திக்க வேண்டிய முக்கியப் பிரச்சினைகளில் ஒன்று. நிறப் பாகுபாட்டின் கொடுமையைப் பேசாமல் பெண் விடுதலையைப் பேச முடியாது.
கடைசிச் சோறு
குடும்பத்தில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது இன்று நகரங்களில் சில குடும்பங்களில் நடக்கலாம். ஆனால், இன்றும் பெரும்பாலான குடும்பங்களில் கடைசிச் சோறு பெண்களுக்குத்தான். ஒரு குடும்பம் வறுமைவயப்படுகிறது என்றால் அதன் முழுச் சுமைதாங்கியாக நிற்பவர்கள் பெண்கள். உணவாக இருந்தாலும் பட்டினியாக இருந்தாலும் வீட்டுக்குள்ளேயே சம பகிர்வு இல்லாத போது பகிர்ந்துண்ணுதலைப் பள்ளியில் பாடமாக வைத்து மட்டும் நம்மால் போதித்துவிட முடியுமா? இந்தக் குடும்ப அமைப்பை அடிப்படையாக வைத்து சமத்துவச் சமுதாயத்தை எப்படிப் படைத்துவிட முடியும்?
குழந்தைகளுக்குக் கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. நீச்சல் பயிற்சிக்கு என் பேத்தியை (ஏழு வயது) அழைத்துச் சென்றேன். அவர்களே நீச்சல் உடை தருகிறார்கள். பயிற்சி முடிந்து வந்தவள் என்னிடம், “அந்த டிரெஸ் நல்லாருக்கும்மா” என்றாள். நான் உடனே பக்கத்தில் நின்ற இன்னொரு சிறுமியின் ஆடையைக் கவனித்துவிட்டு, “இரண்டும் ஒண்ணுதானேம்மா. கலர்தானே வேற” என்றேன். “இல்லம்மா, அது பாய் டிரெஸ் பாரு. நீந்தும்போது அதுதான் வசதியாக இருக்கும்” என்றாள். அவளுடைய நண்பன் அங்கு நீந்திக்கொண்டிருந்தான். வெறும் கால்சட்டை மட்டும் அணிந்திருந்தான். சிறுமிகளுக்கு உடலை முக்கால் பாகம் மறைத்து ஆடை. அந்த வேறுபாட்டையே அவள் குறிப்பிட்டாள் என்பதை உணர்ந்த எனக்கு இனம் புரியாத வலி தோன்றியது. இன்னும் எத்தனை வேறுபாடுகளை இவள் உணரப் போகிறாள், எத்தனை கேள்விகள் கேட்கப் போகிறாள். பதில் சொல்ல என்ன நியாயங்கள் நம்மிடம் இருக்கின்றன?
கட்டுரையாளர், பெண்ணியச் செயல்பாட்டாளர்
தொடர்புக்கு: oviacs2004@yahoo.co.uk
எனக்கு டெட்சுகோ குரோயாநாகி எழுதிய ஜப்பானிய குறுநாவலான ‘ டோட்டோ சான்’ - ஜன்னலில் சின்னஞ் சிறுமி நினைவிலாடியது. அதில் டோமாயி என்றொரு பள்ளி. அதில் ஒரு நீச்சல் குளம் இருந்தது. அந்தக் குளம் இன்று இங்கு உடனடி சாத்தியம் என்று சொல்ல முடியாதுதான். ஆனால், அந்தப் பள்ளித் தாளாளரின் குழந்தை வளர்ப்புச் சிந்தனைகள் ஒவ்வொரு பெற்றோரும் அதைவிட முக்கியமாக ஆசிரியரும் தெரிந்துகொள்ள வேண்டியவை.
புத்தகத்திலிருந்து...
நீச்சல் உடையில்லாமல் நீச்சல் குளத்துக்குள் இறங்கலாம் என்பது ராக்கிக்கு மட்டும் தெரிந்தால் அதுவும் உள்ளே வந்துவிடும் என்று டோட்டோ–சான் உறுதியாக நம்பினாள்.
தலைமையாசிரியர் குழந்தைகள் நிர்வாணமாய் நீந்த அனுமதித்திருக்கிறாரே என வியக்கலாம். இப்படித்தான் குளிக்க வேண்டுமென்று எந்த வித திட்டவட்டமான விதிமுறைகளும் இங்கு இல்லை. நீச்சல் உடை கொண்டுவந்து, அதை அணிய விரும்பினால் அது கச்சிதமாய் சரிதான். அப்படியில்லாமல் இன்று போல, நீச்சல் உடை இல்லாமலேயே திடீரென நீச்சல் குளத்தில் நீந்த வேண்டுமென முடிவெடுத்தால் அதுவும் கச்சிதமாய் சரிதான். ஏன் அவர் குழந்தைகளை நிர்வாணமாய் குளிக்கவிட்டார்? ஏனென்றால், தலைமையாசிரியர் சிறுவர்களும் சிறுமியர்களும் தங்கள் உடற்கூறு வேற்றுமையில் ஆரோக்கியமற்ற ஆர்வத்தைக் காட்டுவது சரியில்லை என்றும் தங்கள் உடலை மற்றவர்களுக்கு மறைப்பதற்காகப் படும் கஷ்டம் இயற்கைக்கு முரணானது என்றும் நினைத்தார்.
அவர், எல்லோருடைய உடலும் அழகானதுதான் என்பதைக் குழந்தைகளுக்குப் பயிற்றுவிக்க விரும்பினார். டோமாயி குழந்தைகளில் யசுயாகி-சான் போல இளம்பிள்ளைவாதத்தால் பாதிக்கப்பட்ட சிலரும், உடல் சிறுத்த சிலரும், உடல் ஊனமுற்ற சிலரும் இருந்தார்கள். அவர்கள் மற்றவர்களுடன் வெறும் உடலுடன் ஒன்றாக விளையாடும்போது அது அவர்கள் வெட்க உணர்வைப் போக்கி, தாழ்வு மனப்பான்மை ஏற்படுவதைத் தடுக்கிறது என்பதைத் தலைமையாசிரியர் உணர்ந்திருந்தார். இது நடக்கும்போது உடல் ஊனமுற்ற குழந்தைகள் முதலில் வெட்கம் அடைந்தாலும், சீக்கிரமே அவர்கள் சந்தோஷத்தை அனுபவிக்க ஆரம்பித்ததும் தங்கள் வெட்க உணர்வுகளிலிருந்து முழுவதுமாய் விடுதலை அடைந்துவிடுகிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT