Published : 04 Jun 2017 11:46 AM
Last Updated : 04 Jun 2017 11:46 AM
நாற்பது வயதிலேயே வெள்ளெ ழுத்து வந்துவிடுகிறது. சிறிய எழுத்துகளைப் படிப்பதே சிரமம். துப்பாக்கி என்பதைத் துப்பாக்கி என்று வாசித்தாலே அதிசயம்தான். அதுவும் அறுபது வயதாகிவிட்டால் கேட்கவே வேண்டாம். ஆனால், அறுபது வயதுக்குப் பின்னர் துப்பாக்கிச் சுடுதலில் பயிற்சி பெற்று உலகிலுள்ளோரை வியப்பில் ஆழ்த்தி வருகிறார் ஷூட்டர் தாதி எனச் செல்லமாக அழைக்கப்படும் சந்த்ரோ தோமர்.
எண்பது வயதைக் கடந்துவிட்ட நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பாக்பத் மாவட்டத்திலுள்ள ஜோரி என்னும் ஊரில் வசித்துவருகிறார் ஷூட்டர் தாதி. அறுபத்தைந்து வயதுவரை இவரும் பிற பாட்டிகளைப் போல் மிகவும் சாதாரண வாழ்வைத்தான் மேற்கொண்டிருந்தார். தன் பேத்தி ஷிபாலி துப்பாக்கிச் சுடுதலுக்குச் செல்லும்போது பாதுகாப்பாக அவருடன் செல்வதே இவரது வழக்கம். எல்லாவற்றை யும் புரட்டிப்போடும் அசாதாரண நிகழ்வுகள் சாதாரண மனிதர்களது வாழ்விலும் நிகழ்வது உண்டு. அப்படியான ஒரு சாதாரண நிகழ்வுதான் இந்தப் பாட்டியை ஷூட்டர் தாதி ஆக மாற்றி, உலகப் பிரபலம் ஆக்கியது..
அதுவரை சாதாரண ஜாட் இனப் பெண்கள் போல் வீட்டுக்குள்ளேயே இருந்து வீட்டுப் பணிகளிலேயே தன் பொழுதைப் போக்கியவர் இவர். ஷூட்டர்களில் பெரும்பாலானோர் ஆண்களாக இருந்த காரணத்தாலேயே அங்கு போகவே பயப்படுவார் ஷிபாலி. அதனால் தான் தன் பாட்டியைத் துணைக்கு அழைத்துச்சென்றிருக்கிறார் அவர். 1998-ம்
ஆண்டில் ஒரு நாள் துப்பாக்கியில் குண்டு களை நிரப்ப உதவியிருக்கிறார் பாட்டி சந்த்ரோ தோமர். துப்பாக்கியின் அந்த ஸ்பரிசம் ஷூட்டர் தாதியை என்னவோ செய்திருக்கிறது. அதை விதி என்பதா விபரீதம் என்பதா விளையாட்டு என்பதா ஒன்றுமே புரியவில்லை. ஆனால், அதன் பின்னர் துப்பாக்கிச் சுடுதலில் பயிற்சிபெற வேண்டும் என்ற எண்ணம் இவரிடம் தலைதூக்கியது.
65 வயதில் துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு பயிற்சியில் சேரப்போகிறேன் என்று ஒருவர் சொன்னால் வரவேற்பு எப்படி இருக்கும் நினைத்துப்பாருங்கள். பெரிய வரவேற்பில்லை. இவருடைய கணவரோ தோள் தட்டவும் இல்லை, தோளைப் பிடித்து இழுக்கவும் இல்லை. வெறும் மவுன சாட்சியாக வேடிக்கை மட்டுமே பார்த்திருக்கிறார். குடும்பத்தின் ஆதரவு கிடைக்கவில்லை என்பதற்காகச் சோர்வடையவில்லை சந்த்ரோ தோமர். தன்னம்பிக்கையுடன் ஜோரி ரைஃபிள் கிளப்பின் தலைவர் டாக்டர் ராஜ்பால் சிங்கிடம் இரண்டு ஆண்டுகள் பயிற்சிபெற்றிருக்கிறார்.
முதன்முறை துப்பாக்கிச் சுடும் போட்டிக்குச் சென்றபோது தன் பேத்தியுடன் சென்று கலந்துகொண்டிருக்கிறார். அந்தப் போட்டியில் இருவருமே பதக்கங்களை வென்றிருக்கிறார்கள். அந்த நாளைப் பற்றி நினைவுகூரும்போது, ஷூட்டர் தாதியின் மனம் எல்லையற்ற உற்சாகத்தை அனுபவிக்கிறது. “அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. மறுநாளைய செய்தித் தாள்களில் என் புகைப்படம் வெளியாகியிருந்தது. அதைக் குடும்பத்தினரிடமிருந்து மறைத்துவிட வேண்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால், எல்லோரது கண்ணிலும் அந்தப் படம் பட்டுவிட்டது. அப்போதும் அவர்கள் ஊக்கமளிக்கவில்லை. ஆனாலும் எனது பயணத்தை அவர்களால் தடுத்து நிறுத்த இயலவில்லை” என்கிறார் இவர்.
தன் பாட்டியைப் பற்றி பேத்தி ஷிபாலி கூறும் போது, தாதிக்குப் படிப்பறிவு அதிகம் கிடையாது. ஆகவே, ஆங்கிலம் நன்றாகவெல்லாம் தெரியாது. என்றாலும் எதையாவது சொல்லிக்கொடுத்தால் அதைச் சட்டென்று கிரகித்துக்கொள்ளும் புத்தி சாதுர்யம் உண்டு என்கிறார். இப்போதெல்லாம் வெளிநாட்டினருடன் அவரே உரையாடுகிறார். தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தை வைத்துச் சமாளித்துக் கொள்கிறார் என்கிறார் ஷிபாலி.
உடம்புக்குத் தான் வயதாகிறதே ஒழிய மனத்துக்கு வயதாவதேயில்லை என்கிறார் ஷூட்டர் தாதி. அந்தத் தெம்பின் காரணமாகத்தான் தனது பயணத்தைத் தொடர்ந்துவருகிறார் இவர். இதுவரை 25-க்கும் மேற்பட்ட தேசிய சேம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்துகொண்டு வென்றிருக்கிறார். கிராமத்திலும் இளம் வயதுப் பெண்களுக்கும் ஆண்களுக்கும் துப்பாக்கிச் சுடுதலில் பயிற்சி அளித்துவருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT