Published : 18 Jun 2017 11:42 AM
Last Updated : 18 Jun 2017 11:42 AM

கேளாய் பெண்ணே: குழந்தைப்பேறு ஏன் தள்ளிப்போகிறது?

எனக்குத் திருமணம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன. எனக்கு இன்னும் கரு உருவாகவில்லை. பல்வேறு பரிசோதனைகள் எடுத்துப் பார்த்ததில் எந்தப் பிரச்சினையும் இல்லை எனத் தெரியவந்தது. கடந்த ஐந்து மாதங்களாக மாதவிடாய் தள்ளிப்போய் மீண்டும் மாதவிடாய் ஏற்படுகிறது. எனக்குக் குழந்தைப் பேறு கிடைக்க வழி இருக்கிறதா? - செல்வராணி தமிழ்ராஜ்.

மகப்பேறு மருத்துவர் சாந்தி, சென்னை.

உங்களுக்குத் திருமணம் நடந்து ஒன்றரை வருடம்தான் ஆகிறது என்பதால் கரு உருவாகாமல் இருப்பதைப் பெரிய பிரச்சினையாகப் பார்க்க வேண்டாம். திருமணம் நடந்து பல ஆண்டுகள் கழித்தும்கூட பல பெண்கள் கருவுற்றிருக்கிறார்கள். அதனால் இதை ஒரு பிரச்சினையாக நினைக்காமல் மாற்று என்ன என்று யோசியுங்கள். பிரச்சினையையே நினைத்துக் கொண்டிருந்தால் மனவுளைச்சல்தான் ஏற்படும்.

கரு உருவாகாமல் இருக்கப் பல காரணங்கள் உண்டு. அதில் முதன்மையானது தம்பதியரின் வயதும் பெண்ணின் உடல் எடையும். தவிர தைராய்டு போன்ற பிரச்சினைகள் உள்ளதா என்பதையும் பரிசோதிக்க வேண்டும். அதே போல் கணவருக்கு ஏதேனும் உடல் சார்ந்த பிரச்சினைகள் இருக்கின்றனவா என்றும் பார்க்க வேண்டும். விந்து எண்ணிக்கை, தாம்பத்திய உறவு முறை ஆகியவை குறித்து அருகில் உள்ள மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. மாதத்துக்கு ஒரு முறை மட்டுமே உறவு வைத்துக்கொண்டால்கூட கரு உருவாகாமல் போகலாம். பெண்ணின் கரு முட்டை வளர்ச்சியடையும் நேரத்தில் உறவு கொண்டால் கரு உருவாகும். தைராய்டு பிரச்சினை இருந்தாலும் மாதவிடாய் தள்ளிப்போகலாம். இதைக் கண்டறிய அருகில் உள்ள மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.



முப்பது ஆண்டுகள் நர்ஸிங் பணி செய்து முடித்து விட்டேன். தற்போது அதிலிருந்து ஓய்வுபெற்று, தையல் கற்றுக்கொண்டு வருகிறேன். எதிர்காலத்தில் நிறையப் பணிகள் செய்ய விரும்புகிறேன். தொய்வில்லாமல் பணி செய்ய ஆக்கமும் ஊக்கமும் பெற விரும்புகிறேன். மன தைரியத்துடன் நடைபோட நம்பிக்கை தரும் வார்த்தைகள் கூறவும். - லில்லி ஜெசிந்தா, சென்னை

பிருந்தா ஜெயராமன், மனநல ஆலோசகர், கோவை

செவிலியர் பணி முடித்து தற்போதும் சுறுசுறுப்பாக இயங்க வேண்டும் என நீங்கள் நினைப்பது பாராட்டத்தக்கது. பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என முடிவு எடுக்கும் அதேநேரம் அந்த முடிவைச் செயல்படுத்தும்போது பல தடங்கல்களும் வருவதற்கான வாய்ப்புள்ளது. ஆனால், ஆரம்பத்தில் எந்த அளவுக்கு உற்சாகமாக ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டும் என முடிவு செய்தீர்களோ அதே உற்சாகத்துடன் எப்பொழுதும் இருக்கும் வகையில் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

அதேபோல் ஊக்கமூட்டும் வார்த்தைகளை வீட்டில் பார்த்தவுடன் தெரியும் வகையில் எழுதி வைத்துக்கொள்ளலாம். உதாரணமாக ‘வெல்பவனுக்கு குறிக்கோள் மட்டும்தான் கண்ணுக்குத் தெரியும், தோற்பவனுக்குத் தடைகள் மட்டும்தான் தெரியும்’, அதேபோல் ‘தோற்றுப் போகிறவர்களுக்கு அது கஷ்டம் எனத் தோன்றும், வெல்பவர்கள் அந்தச் செயலைச் செய்து முடித்துவிட முடியும் எனச் செயல்படுவார்கள்’ என்பன போன்ற வார்த்தைகள் மனதுக்கு ஊக்கம் அளிக்கும். அவற்றைத் தினம் தினம் சொல்லி பார்த்துக்கொள்ளலாம்.

நீங்கள் எடுத்துள்ள குறிக்கோளைச் சிறு பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு செயல்பட வேண்டும். எடுத்த செயலில் சாதிக்க ஒவ்வொரு நாளும் சிறு வேலையையாவது, அதற்காகச் செய்ய முயலுங்கள். குறிக்கோளுடன் செயல்படும்போது தேவையில்லாத எண்ணங்கள், நம்முடைய மனதில் வந்து போகும். அதில் கவனம் செலுத்தாமல் நிகழ்காலத்தில் என்ன செய்ய வேண்டுமோ, அதற்கான பணிகளில்தான் கவனம் செலுத்த வேண்டும்.

கடந்த காலத்தை நினைத்தால் கஷ்டங்கள்தான் வந்து சேரும். எதிர்காலத்தை நினைத்துக்கொண்டிருந்தால் பயமாக இருக்கும். நிகழ்காலம் மட்டுமே நிதர்சனம் எனச் செயல்பட வேண்டும். பொதுவாக மனிதனின் மனது இரும்பைப் போன்றது. அதற்கு எந்த வேலையும் கொடுக்கவில்லை என்றால் அதற்குத் துருப் பிடித்துவிடும்.

நம்முடைய மனதை நம்மால் மட்டும்தான் அழிக்க முடியும். மனசுக்கு எப்போதும் வேலை கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். கடந்த காலத்தில் நடந்த கசப்பான விஷயங்களை விடுத்து, அதிலிருந்து கிடைத்த பாடங்களை மட்டும் எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும். பாதை கரடுமுரடாக இருந்தாலும், அதில் பயணம் செய்தாக வேண்டும். அப்போதுதான் மறுபக்கம் மகிழ்ச்சியாகவும் அழகாகவும் உள்ள மற்றொரு பாதையை அடைய முடியும்.



124, வாலாஜா சாலை, சென்னை-600002.
மின்னஞ்சல் முகவரி: penindru@thehindutamil.co.in

உங்கள் கேள்வி என்ன?

‘கேளாய் பெண்ணே’ பகுதிக்கு நீங்களும் கேள்விகளை அனுப்பலாம். சமையல், சரித்திரம், சுயதொழில், மனக்குழப்பம், குழந்தை வளர்ப்பு, மருத்துவம் என எந்தத் துறை குறித்த சந்தேகமாக இருந்தாலும் தயங்காமல் கேளுங்கள். உங்கள் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை நிபுணர்களே பதிலளிப்பார்கள். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி:

பெண் இன்று, தி இந்து, கஸ்தூரி மையம்,

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x