Last Updated : 11 Jun, 2017 02:35 PM

 

Published : 11 Jun 2017 02:35 PM
Last Updated : 11 Jun 2017 02:35 PM

கண்ணீரும் புன்னகையும்: கம்பிகளுக்குப் பின்னால் வெளிச்சம் பாய்ச்சும் புத்தகம்

பார்பி கொடுக்கும் நம்பிக்கை

சிறுமி பார்பி படுக்கையறை மற்றும் சமையலறை விளையாட்டுச் சாமான்களிலிருந்து வெளியே வருவதை நாம் நினைத்துப் பார்த்திருக்கிறோமா? பெண்ணுடலின் அழகு குறித்த வரையறையைக் குழந்தைகளிடை உருவாக்குவதில் முக்கியக் கருவியாக விளங்கும் பார்பி, மன அழுத்தத்தை எதிர்கொள்வதற்கான ஆலோசனை தருபவளாக அவதாரம் எடுத்திருக்கிறாள். உலகிலுள்ள வளரிளம் பருவப் பெண்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் மன அழுத்தத்தால் அவதிப்படுகின்றனர். இந்தியாவில் ஐந்து கோடிப் பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் மன அழுத்தம் குறித்து வெளிப்படையாகப் பெற்றோர்களிடமோ நண்பர்களிடமோ பேச முடியாத சூழ்நிலைதான் தற்போதும் நிலவுகிறது. இந்தச் சூழ்நிலையில் மன அழுத்தத்தை எதிர்கொள்வதையும் சின்னச் சின்னப் பயிற்சிகளையும் பற்றிப் பேசும் பார்பி, எப்போதும் உற்சாகமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது என்ற யதார்த்தத்தையும் பேசுகிறது. வசந்த காலம் வருவது போலவே இலையுதிர் காலமும் நம் வாழ்க்கையில் வரும். மன அழுத்தமும் கடந்துபோகும் ஒரு பருவம்தான் என்பதை யூடியூப் வீடியோவில் பார்பி அழகாகச் சொல்கிறது. வீடியோவின் பெயரும் அதற்கேற்ப அமைந்திருப்பது அருமையானது. ‘ஃபீலிங் ப்ளூ? யூ ஆர் நாட் அலோன்’

வீடியோவை பார்க்க: https://www.youtube.com/watch?v=aTmrCqbfjH4

சிறைக்குள் படமெடுக்கலாமா?

கன்னடத் தொலைக்காட்சி சேனலான பப்ளிக் டிவி, சில நாட்களுக்கு முன் தும்கூர் பெண்கள் சிறை வளாகத்தைச் சுத்தம் செய்யும் பெண் கைதிகளின் நிலையை ஒளிபரப்பியது. பெண் கைதிகளைக் கொடுமைப்படுத்தியதோடு மட்டுமின்றி உணவு தருவதற்கும் மறுத்ததாக சிறைக் கண்காணிப்பாளர் ஷினாஷா நிகவான் மீது குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. ஆனால் அந்த வீடியோ தங்கள் விருப்பமின்றி ஒளிபரப்பானது என்று சொல்லி எண்பது கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் ஒரு பெண் கைதி தற்கொலைக்கும் முயன்றார். இந்தச் சூழ்நிலையில் சிறையின் கண்காணிப்பாளர் ஷினாஷாவுக்கு இடமாற்ற உத்தரவு வழங்கப்பட்டது. கைதிகளின் சம்மதமில்லாமல் இத்தகைய காட்சிகளை ஒளிபரப்பலாமா என்ற விவாதமும் எழுந்துள்ளது.

நிற்பது வயலில், ஆனால் விவசாயி அல்ல

சமீபத்தில் தமிழ்நாடு பெண் விவசாயிகள் உரிமைகள் கழகம், விவசாயப் பணியில் ஈடுபட்டும் விவசாயிகளாக பெண்கள், அங்கீகரிக்கப்படாத நிலை இருப்பது தொடர்பான ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் பெண்களில் 65.5 சதவீதம் பேர் வேளாண்மைப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழக விவசாயப் பணிகளில் ஒட்டுமொத்த உடல் உழைப்புப் பணியில் 37 சதவீதம் பேர் பெண்கள். உணவு உற்பத்தி மற்றும் பால் உற்பத்தித் தொழிலில் 90 சதவீதம் பெண்களே உள்ளனர். விதைக்கும் பருவத்தில் ஒரு பெண் 3 ஆயிரத்து 300 மணி நேரத்தை வயலில் செலவிடுகிறார். ஆணோ ஆயிரத்து 860 மணி நேரமே செலவிடுகிறார். ஆனால், பெண்களுக்கு விவசாயிகள் என்ற அந்தஸ்து கிடைப்பதில்லை. நில உரிமையாளராக யார் இருக்கிறாரோ அவர்களையே சட்டம் விவசாயி என்று அங்கீகரிக்கிறது. 2010-11-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட வேளாண்மை கணக்கெடுப்பில் 12.69 சதவீதம் கிராமப்புறப் பெண்களே நில உரிமையாளராக இருக்கின்றனர்.

கம்பிகளுக்குப் பின்னால் வெளிச்சம் பாய்ச்சும் புத்தகம்

ஆயிரம் ரூபாய் திருடினால் அடித்துத் துவைத்து, இருட்டான சிறை அறையில் போடுவார்கள்; ஆனால், 55 ஆயிரம் கோடி திருடினால் இன்டர்நெட் வசதி, ஐந்து நட்சத்திர அந்தஸ்து உணவு கிடைக்கும் என்று இந்தியச் சிறைகளைப் பற்றி என்டிடிவி பத்திரிகையாளர் சுனேத்ரா சவுத்ரி ‘பிஹைண்ட் பார்ஸ்’நூலில் எழுதியுள்ளார். விடுதலையான கைதிகளின் நேர்காணல்கள், செய்தி அறிக்கைகள், சட்ட ஆவணங்கள், மின்னஞ்சல்கள், கடிதங்கள் ஆகியவற்றிலிருந்து இந்தியச் சிறைக் கைதிகளின் வாழ்க்கை குறித்து எழுதப்பட்ட நூல் இது. சிறை வாழ்க்கை குறித்து மட்டுமின்றி பணமும் அதிகாரமும் இருந்தால் சட்டம் எப்படி வளையும் என்பதைப் பற்றியும் இந்தப் புத்தகம் பேசுகிறது. சாதாரண கைதிகளுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும் நிலையில், வசதியான கைதிகள் என்னவெல்லாம் பெறுகிறார்கள் என்பதைப் பற்றி விரிவாகப் பேசுகிறது இந்தப் புத்தகம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x