Last Updated : 31 Jul, 2016 11:30 AM

 

Published : 31 Jul 2016 11:30 AM
Last Updated : 31 Jul 2016 11:30 AM

அஞ்சலி: தன் கனவையே வாழ்வாக மாற்றிக்கொண்ட படைப்பாளி!

சிறந்த எழுத்துக் கலையும் சமூகச் செயல்பாடும் இணைந்த அபூர்வ எழுத்தாளரான மகாஸ்வேதா தேவியின் மரணம், எளிய மக்களின் உரிமைகளுக்காக இந்திய அரசின் மனசாட்சியை நோக்கிப் போராடிய ஒரு பெருங்குரலின் இழப்பு. “எனது வாழ்க்கை முழுவதும், நான் எதைச் செய்ய நினைத்தேனோ அதைச் செய்தேன்” என்று உறுதியுடனும் சுதந்திரத்துடனும் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக எழுத்தாளராகவும் சமூகப் போராளியாகவும் செயல்பட்டவர் அவர்.

வங்காளத்தைச் சேர்ந்த நகர்புற நடுத்தரக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த மகாஸ்வேதா தேவி, வனத்தின் பூர்விக உரிமையாளர்களான பழங்குடிகள் தங்கள் வாழ்விடத்திலிருந்து வெளியேற்றப்படும் அவலத்தை அவர்களது உணர்ச்சிகளுடன் கலந்து படைப்புகளாக எழுதியவர். தனது வாழ்நாளின் இறுதிவரை பழங்குடிகளின் உரிமைகளுக்காகப் போராடியவர்.

பழங்குடிகளின் குடிசைகளில் தங்கி அவர்களுடன் உண்டு, அவர்களது பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு அவர்களின் உரிமைகளுக்காகப் பெரும் அதிகார சக்திகளுடன் மோதியவர் அவர்.

பழங்குடிகளின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு 20 சிறுகதைத் தொகுப்புகள் உட்பட 120 நூல்களையும், எண்ணற்ற பத்திரிகை கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

மிகையுணர்ச்சி தவிர்த்த தனது உரைநடையில், உயர்சாதி நிலச்சுவான்தார்கள், வட்டிக்காரர்கள், அரசு அதிகாரிகளால் பந்தாடப்படும் பழங்குடிகளின் வாழ்க்கையை அவர் கதைகளாக எழுதினார்.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக, தங்கள் பூர்விக வனத்தைக் காப்பதற்காக பழங்குடிகளின் தலைவனாக காலனிய அரசுக்கு எதிராகப் போராடிய பீர்சா முண்டாவின் கதையை ‘காட்டில் உரிமை’ என்ற நாவலாக எழுதினார். அதற்காக 1979-ல் சாகித்ய அகாதமி விருதைப் பெற்றார்.

இந்திய சமூகத்தில் பெண்கள் காலங்காலமாக எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகளை வைத்து அவர் எழுதிய ‘பிரெஸ்ட் ஸ்டோரிஸ்’ சிறுகதைகள் அவருக்கு உலகப் புகழைப் பெற்றுத்தந்தது. ஆண்களுக்கு, பெண்களிடம் எந்த உடல் பாகம் கவர்ச்சியாக இருக்கிறதோ, அதுவே அவளுக்கு எத்தனை துயரங்களைத் தருகிறது என்பதை வெவ்வேறு பெண் கதாபாத்திரங்களை வைத்து எழுதிய கதைகள் அவை. இந்தி பேசும் மக்களிடையே மட்டுமின்றி இந்தியா முழுக்கப் புகழ்பெற்ற ‘சோளி கே பீச்சா க்யா ஹை’ பாடலுக்கு எதிர்வினையாக, அதே தலைப்பில் அவர் எழுதிய சிறுகதை புகழ்பெற்றது.

வங்காள நக்சல் இயக்கச் செயல்பாடுகளை மையமாக வைத்து அவர் ‘1084-ன் அம்மா’ என்ற நாவலை எழுதியுள்ளார். நக்சலைட் போராளியாக இறந்துபோகும் மகனைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும் தாயின் கதை அது. அந்தக் கதைதான் 1998-ல் ஜெயா பாதுரி நடித்த ‘ஹசார் சவுரசி கி மா’ என்னும் இந்தித் திரைப்படமானது.

பழங்குடிகளின் வாழ்க்கை மற்றும் கலாச்சார விழுமியங்கள் மீது மகாஸ்வேதா தேவிக்கு மிகுந்த மதிப்பு இருந்தது. வரதட்சிணை முறையோ, பாலின ரீதியான பாகுபாடோ இல்லாத சாதியற்ற அவர்கள், நம்மை விட நாகரிகமானவர்கள் என்று கூறியுள்ளார். 1871-ல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால், குற்றப்பழங்குடிகளாக முத்திரை குத்தப்பட்ட லோதா மற்றும் கெரியா சபர் பழங்குடி மக்களுக்கு இந்திய சுதந்திரத்திற்குப் பிறகும் அந்தக் குற்ற முத்திரை நீடித்த துயரங்களை அளித்துவந்தது. செய்யாத குற்றங்களுக்காக அடிக்கடி காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கும் சம்பவங்கள் தொடர்ந்துவந்தன. புருலியா என்ற ஊரை மையமாக வைத்து பழங்குடிகளின் உரிமைகளுக்காக அவர் நடத்திய போராட்டங்கள் அவருக்கு ‘சபர் மக்களின் தாய்’ என்ற பெயரைப் பெற்றுத் தந்தது.

1998-ல் வதோதராவில், குற்றப் பழங்குடிகள் என்று முத்திரை குத்தப்பட்டவர்களின் துயரங்களைப் பற்றி அவர் ஆற்றிய உரைதான், ‘டிநோட்டிஃபைட் அண்ட் நோமேடிக் ட்ரைப்ஸ் ரைட்ஸ் ஆக்ஷன் க்ரூப்’ என்ற வெகுமக்கள் இயக்கம் உருவாவதற்குக் காரணமானது.

கொல்கத்தா சிறைகளில், குற்றம் எதுவும் செய்யாமலேயே வெகுநாட்களாக அடைக்கப்பட்டு மனநிலை பாதிக்கப்பட்ட பெண் கைதிகளின் நிலையைச் செய்தித்தாள் கட்டுரைகள் மூலம் வெளிப்படுத்தினார். அவரது எழுத்துகள் மூலம் நிர்ப்பந்திக்கப்பட்ட மேற்கு வங்காள அரசு, அந்தப் பெண் கைதிகளை விடுதலை செய்து அவர்களின் மறுவாழ்வுக்கும் ஏற்பாடு செய்தது.

மாவோயிஸ்ட் போராளிகளின் வன்முறை நடவடிக்கைகளைத் தொடர்ந்து அவர் கண்டித்தாலும், அவரகளது போராட்டத்தின் நியாயங்களைத் தொடர்ந்து ஆதரித்துவந்தார். “கனவு கண்டதுதான் அவர்கள் செய்த குற்றம்… கனவு காண்பது மக்களின் தலையாய அடிப்படை உரிமையாகும்” என்று அவர் ஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழாவில் 2013-ல் பேசினார்.

மேற்கு வங்காளத்தின் இடது முன்னணி அரசு, சிங்கூர் மற்றும் நந்திகிராமில் விவசாய நிலங்களை பெருநிறுவனங்களுக்குத் தருவதற்காக, வலுக்கட்டாயமாக விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்த முயன்றபோது மகாஸ்வேதா தேவி நாடு முழுவதும் அதற்கு எதிரான இயக்கத்தை முன்னெடுத்தார். 34 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தை ஆட்சிசெய்து வந்த இடது சாரி அரசை வீட்டுக்கு அனுப்பி, மமதாவை முதலமைச்சராக்கியதில் மகாஸ்வேதா தேவிக்கு பெரும்பங்குண்டு. எனினும் அரசுக்கு எதிராக எழுதிய செய்தித்தாள் நிறுவனங்கள் மீது அடக்குமுறைகள் ஏவப்பட்ட போது மமதாவின் அரசை பாசிஸ்ட் அரசு என்று விமர்சித்தார்.

இந்திய அரசு, தனது சொந்த மக்களின் மீதே ஒடுக்குமுறையையும் சுரண்டலையும் மேற்கொள்வதைத் தன் வாழ்நாள் முழுக்க எதிர்த்தவர் மகாஸ்வேதா தேவி. ஆனாலும் அவருக்கு இந்தியாவின் மீதிருந்த பிரியம் அலாதியானது. “என் இதயம் எப்போதும் இந்துஸ்தானியினுடையது… என் தேசம், கிழிக்கப்பட்டது, துவைக்கப்பட்டதெனினும், அழகானது, வெப்பமானது, ஈரப்பதம் வாய்ந்தது, சில்லென்றிருப்பது, மணல்பரப்பானது, மினுங்குவது” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x