Published : 18 Sep 2016 12:06 PM
Last Updated : 18 Sep 2016 12:06 PM
சரும அழகைக் கூட்ட என்னென்ன செய்யலாம் என்பதைத்தான் எல்லோரும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அதைவிடவும் முக்கியமானது எதையெல்லாம் செய்யக் கூடாது என்பதைத் தெரிந்துகொள்வது. சில நேரங்களில் சிலவற்றைத் தவிர்த்தாலே நம் சருமத்தை ஆரோக்கியமாகவும் அழகாகவும் பேணிக் காக்க முடியும்.
தொடாதே!
முகப்பரு, கரும்புள்ளியைக் கண்டதும் முகம் பார்க்கும் கண்ணாடியும் கையுமாக மாறிவிடுவோம். முதலில் முகப்பருவைத் தொட்டுப் பார்க்கவே கூடாது! அதிலும் முகப்பருவைப் போக்கப் பக்கத்து வீட்டார் கொடுத்த அறிவுரை, நண்பர்களின் டிப்ஸ், கேள்விப்பட்டது கேள்விப்படாதது என எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்தால் நீங்காத தழும்பு, மாசு முகத்தில் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
போதும் கழுவியது
முகத்தைப் பிரகாசமாக வைத்துக்கொள்ள அடிக்கடி முகம் கழுவுவது எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும். சொல்லப் போனால் முகப் பொலிவைப் பாதுகாக்க இயற்கையில் சருமத்திலிருந்து எண்ணெய்கள் சுரக்கும். அடிக்கடி முகம் கழுவுவதால் இந்த எண்ணெய்கள் நீக்கப்பட்டு தோலின் ஈரப்பதம் குறைந்து, வறண்ட சுருக்கமான சருமம்தான் மிஞ்சும்.
ஆல்கஹால் வேண்டாம்!
‘டோனர்ஸ்’ (Toners) எனப்படும் சரும க்ரீம்களை இன்று பயன்படுத்துபவர்கள் பலர். டோனர்ஸ் சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முக்கியமானவை என்கின்றனர் சரும நிபுணர்கள். குறிப்பாகக் குழாய்த் தண்ணீரில் முகம் கழுவிய பிறகு மாய்ஸ்சரைஸரைப் பூசுவதற்கு முன்பு டோனர்களைப் பூசுவது நல்லது. ஏனென்றால் குழாய்த் தண்ணீரில் இருக்கும் குளோரின், சருமத்துக்குக் கேடு விளைவிக்கும். அதை அப்புறப்படுத்த டோனர்கள் உதவும். ஆனால் ஆல்கஹால் (alchohol) கலந்த டோனர்கள் சருமத்தில் இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும். ஆகவே ஆல்கஹால் இல்லாத டோனர்களைத் தேர்ந்தெடுங்கள்.
கழுத்தை கொஞ்சம் பராமரிப்போம்
சருமத்தின் அழகு, ஆரோக்கியம் மீது அக்கறை கொண்டவர்கள்கூடக் கழுத்துப் பகுதிக்கு முக்கியத்துவம் தருவதில்லை. தினமும் காலையும் இரவும் முகத்தில் மாய்ஸ்சரைஸர் பூசிவிட்டுக் கையிலிருக்கும் மிச்சம் மீதியைக் கழுத்தில் தேய்ப்பவர்கள்தான் பெரும்பாலோர். சன்ஸ்கிரீன் பூசுவதானால் நிச்சயமாகக் கழுத்திலிருந்து தொடங்கி மேல் நோக்கிப் பூசுவது உங்களுடைய முகப் பொலிவைப் பாதுகாக்க அவசியமானது.
அளவுக்கு மிஞ்சினால்
சருமக் கோளாறுக்காகச் சரும நிபுணரிடம் ஆலோசனை கேட்டாலும் அவற்றை மனம் போன போக்கில் பின்பற்றுவது மிகவும் தவறு. உதாரணத்துக்கு முகப் பருவைக் கட்டுப்படுத்த ஆஸிட் சீரம்-ஐ (Acid Serum) அடிப்படையாகக் கொண்ட களிம்பை உபயோகிக்கச் சொன்னால் அடிக்கடி அதை முகத்தில் பூசிக்கொண்டே இருக்கக் கூடாது. அதிகப்படியாகப் பிரயோகிப்பதும் கேடு விளைவிக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT