Published : 08 Jan 2017 03:40 PM
Last Updated : 08 Jan 2017 03:40 PM
எனக்கு 23 வயதாகிறது. எடை 33 கிலோ. பார்க்கிறவர்கள் எல்லோரும் ஏன் இவ்வளவு ஒல்லியாக இருக்கிறாய் என்று கேட்கிறார்கள். டாக்டரிடம் சென்றபோது தைராய்டு பிரச்சினை இருக்கலாம் என்று சொன்னார். என் உடல் எடையைக் கூட்டி, முடி கொட்டுவதையும், மாதவிடாய் பிரச்சினையையும் சரிசெய்வது எப்படி?
- சித்ரா, சென்னை.
ஸ்ரீகலா, மகப்பேறு நிபுணர், சென்னை
தைராய்டு ஹார்மோன் அதிகம் சுரக்கும்போது உடல் எடை குறைகிறது. முடி கொட்டுவது, மாத விடாய் பிரச்சினை எல்லாமே தைராய்டு குறைபாட்டின் தொடர் பாதிப்புகள்தான். இது சரிசெய்யக் கூடிய பிரச்சினை என்பதால் கவலை வேண்டாம். உடனடியாக மருத்துவரை அணுகி, ஹார்மோன் அளவை சரிசெய்ய வேண்டும். மருந்துகள் மூலம் அதனைச் சரிசெய்யலாம். புரோட்டீன் அதிகமுள்ள முட்டை, பருப்பு வகைகள், கொண்டைக்கடலை, பச்சைப்பயறு, சோயா போன்ற உணவுகளைச் சாப்பிடலாம்.
பழங்கள், பச்சைக் காய்கறிகள் சாப்பிடும்போது தாதுச்சத்து கிடைக்கும். கீரைகள் சாப்பிட்டால் நார்ச்சத்து கிடைக்கும். அரிசி சாதத்தைக் குறைத்து, காய்கறிகள் அதிகம் உட்கொள்வது நல்ல உணவுப் பழக்கம். பால் அருந்துவது நல்லது. தைராய்டு மருந்து உட்கொண்டு, சரிவிகித உணவைத் தொடர்ந்து கடைபிடித்தால் அனைத்துப் பிரச்சினைகளும் சரியாகி, உடல் எடை இயல்புக்குத் திரும்பும். அதன் பிறகும் அதிகளவில் முடி கொட்டுவதாகக் கருதினால் தோல் நோய் சிகிச்சை நிபுணரை அணுகவும்.
எனக்குத் தொடர்ச்சியாக சளித் தொந்தரவு இருந்துகொண்டே இருக்கிறது. மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. இந்தச் சிக்கல் தீர பக்க விளைவுகள் இல்லாத சுலபமான வழியைப் பரிந்துரையுங்களேன்.
- ச.ராதாபாய், டி.வாடிப்பட்டி.
டி.ராஜேஷ், ஆயுர்வேத மருத்துவர், சென்னை
சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றையும் தேனில் கலந்து தினமும் 3 அல்லது 4 முறை எடுத்துக் கொள்ளுங்கள். வறட்டு இருமல் இருந்தால் இதனுடன் அதிமதுரம் பொடியைச் சேர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்துவந்தால் நெஞ்சு சளி, மூச்சிளைப்பு போன்றவற்றுக்கு நல்ல பலன் கிடைக்கும். குழந்தைகள் என்றால் 2.5 கிராம் பொடியும், பெரியவர்கள் என்றால் அரை டீஸ்பூன் பொடியும் தேனில் குழைத்துச் சாப்பிடலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT