Published : 23 Apr 2017 11:52 AM
Last Updated : 23 Apr 2017 11:52 AM
வெள்ளிப் பனி அடர்ந்த இமய மலை, காணக் காணத் தீராத ஆச்சரியம். அந்த மலையின் மீது ஏறுவது சாதனை என்றால், அந்த மலையிலேயே வாழ்வது வேதனை. காரணம், மரம் வெட்டுதல் உள்ளிட்ட மனிதச் செயல்பாடுகளால் வெளியேறும் வாயுக்கள், நமது வளிமண்டலத்தில் சேர்ந்து, நம் பூமியைச் சூடாக்குகின்றன. இதுவே புவி வெப்பமயமாதல் என்று சொல்லப்படுகிறது. இதனால், இமயமலையில் உள்ள பனிப் பாறைகள் மெல்ல மெல்ல உருகிவருவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இது இமயமலைத் தொடரில் வாழ்ந்துவரும் மக்களுக்குத் தண்ணீர் பிரச்சினை முதற் கொண்டு பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
அங்குள்ள மரங்கள்தான் அந்த நிலத்தின் உயிர்நாடி. பல்வேறு அரசியல், பொருளாதாரச் சிக்கல்களுக்கு இடையே, அந்தப் பகுதி மக்கள் அங்கிருக்கும் மரங்களைக் காப்பாற்றி வருகிறார்கள். மரங்களைக் காப்பது தங்கள் உயிரைக் காப்பதைவிட மேலானது என்று அவர்கள் நினைக்கிறார்கள். இப்படி ஓர் உன்னதமான சிந்தனையை அவர்களுக்கு வழங்கிவிட்டுச் சென்றவர், படிக்காத, பழங்குடிப் பெண் என்றால், உங்களால் நம்ப முடிகிறதா?
12 வயது மணமகள்
இமயமலைத் தொடரில் வீற்றிருக்கிறது உத்தராகண்ட் மாநிலம். அங்கிருக்கும் அலகானந்தா பள்ளத்தாக்கின் மேலே லதா எனும் சிறிய கிராமம். ஆயர்குடி களும் விவசாயிகளும் வாழ்ந்துவரும் இந்தப் பகுதியில் 1925-ம் ஆண்டு பிறந்தார் கவுரா தேவி. செம்மறி ஆடுகளை வளர்த்துக் கம்பளியையும் விவசாய விளைபொருட் களையும் விற்பனை செய்யும் தோல்ச்சா பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். திபெத்தின் எல்லையையொட்டி அந்தக் கிராமம் இருந்ததால், பொருட்களை திபெத்துக்குக் கொண்டுசென்று வணிகத்தில் ஈடுபடுவது வழக்கம். கவுரா தேவியின் குடும்பமும் இந்த வணிகத்தில் ஈடுபட்டுவந்தது.
கவுரா தேவியின் குடும்பம் ஓரளவு வசதியான ஆயர் குடும்பம். இந்நிலையில், 12 வயதில் கவுரா தேவிக்கும் அருகில் உள்ள ரேனி எனும் கிராமத்தைச் சேர்ந்த மெஹெர்பன் சிங் என்பவருக்கும் திருமணம் நடந்தது. மெஹெர்பன் சிங்கும் கவுரா தேவியின் குடும்பத்தைப் போலவே வணிகத்தில் ஈடுபட்டுவந்தார். 1950-களுக்குப் பிறகு சீனாவுடன் இந்தியாவுக்கு ஏற்பட்ட மோதல் காரணமாக, திபெத் வணிகப் பாதை அடைக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட வணிகர்கள், தங்களின் வாழ்வாதாரத்துக்குத் தங்கள் கிராமப் பகுதியிலிருந்த காடுகளையும் மலைகளையும் அருவியையும் சார்ந்திருக்க வேண்டியிருந்தது.
நும்மினுஞ் சிறந்தது நுவ்வை
சில காலத்துக்குப் பிறகு கவுரா தேவிக்கு மகன் பிறந்தான். எதிர்பாராத விதமாக 22 வயதில் கவுரா கணவரை இழந்தார். பல ஆண்டுகள் கழித்து அவரது மகனுக்குத் திருமணமாகி, குழந்தைகள் பிறந்து தனியே குடும்பம் ஒன்று உருவானது. இதனால், அந்தக் குடும்பத் தலைவரானார் கவுரா தேவி. பெண்களைக் குடும்பத் தலைவராக நியமிப்பது பழங்குடி களிடையே காணப்படும் சிறப்புப் பண்புகளில் ஒன்று. குடும்பத்தையும் நல்ல முறையில் நடத்தி, விவசாயத்திலும் சிறந்து விளங்கிய கவுரா தேவி, 1972-ம் ஆண்டு ரேனி கிராமத்தின் மகளிர் சுயஉதவிக் குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தக் காலகட்டத்தில் மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு வளர்ச்சி நடவடிக்கை களுக்காக, அந்தப் பகுதியிலிருந்த மரங்களை வெட்டி வந்தன. மக்கள் இதை அவ்வப்போது எதிர்த்துவந்தாலும், அந்த எதிர்ப்பு முழு வீச்சில் நடைபெறவில்லை. இந்நிலையில், 1974-ம் ஆண்டு ஜனவரி மாதம் அந்தக் கிராமத்திலிருந்த சுமார் 2,500 தேவதாரு மரங்களை வெட்ட அரசு முடிவு செய்தது. அப்போது காந்தியவாதி சண்டி பிரசாத் பட் என்பவர் அந்தப் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மரங்களின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்தினார். இதனால் விழிப்புணர்வு பெற்ற மக்கள் மரங்களைக் காப்பாற்ற முன்வந்தார்கள்.
மக்களின் எதிர்ப்பைப் பார்த்து அஞ்சிய அரசு, மரங்களை வெட்டுவதற்குக் குறுக்கு வழியில் முயற்சி செய்தது. 1974-ம் ஆண்டு மார்ச் 16-ம் தேதி, மரங்களை வெட்டுவதற்குக் கூலியாட்கள் வந்தனர். அதேநாளில், 1962-ம் ஆண்டு சாலைப் பணிகளுக்காக நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு வழங்க இருப்பதாக அரசு அறிவித்தது. இதனால் அந்தக் கிராமத்தின் ஆண்கள் எல்லோரும் இழப்பீடு வாங்கச் சென்றுவிட, பெண்கள் மட்டும் தனித்திருந்தனர். ஆண்கள் இல்லாததால், எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் எளிதாக மரங்களை வெட்டிவிடலாம் என்று கருதிய கூலியாட்கள் ரேனி கிராமத்தை நோக்கி முன்னேறினர். அவர்கள் வருவதைப் பார்த்த ஒரு சிறுமி, அந்தத் தகவலை கிராமத்திலிருந்த பெண்களிடம் சொன்னாள்.
மரம் வெட்ட வந்த கூலியாட்களுக்கு ஆச்சரியம். பெண்கள் எல்லோரும் திரண்டிருந்தனர். மரங்களை வெட்ட வேண்டாம் என்று முதலில் கெஞ்சிப் பார்த்தனர். மரவெட்டிகளோ அசையவில்லை. அப்போது கவுரா தேவி, “இந்தக் காடு எங்களுக்குத் தாய்வீடு போன்றது. இங்குள்ள மரங்கள் எங்கள் சகோதர, சகோதரிகளைப் போன்றவை. இங்கு விளையக்கூடிய மூலிகைகள், காய்கள், கனிகள், விறகு ஆகியவற்றைக் கொண்டுதான் எங்கள் வாழ்க்கையை நடத்துகிறோம். இந்த மரங்களை வெட்டினால், வெள்ளத்தின்போது எங்கள் வயல்வெளிகள் அடித்துச் செல்லப் படும். எனவே, தயவுசெய்து இங்கிருந்து சென்றுவிடுங்கள்” என்று கூறினார்.
சங்கப் பாடலில் புன்னை மரத்தைத் தன் தங்கையாக பாவிக்கும் தலைவியின் பாடல் ஒன்று உண்டு. அந்தத் தலைவியின் தாய், அந்தப் புன்னை மரத்தைச் சுட்டிக்காட்டி தலைவியிடம், ‘நும்மினுஞ் சிறந்தது நுவ்வை’ (உன்னைவிடச் சிறந்தது உன் தங்கை புன்னை) என்று சொல்வாள். அதுபோல, மரங்களைத் தன் சகோதர சகோதரிகளாகப் பார்த்த கவுரா தேவியும் இதர பெண்களும் மரங்களைக் கட்டிப்பிடித்துக் கொண்டனர். இதனால் ஒன்றும் செய்ய முடியாத மரவெட்டிகள், திரும்பிச் சென்றனர்.
முதல் இயக்கம்
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து உதயமானது ‘சிப்கோ’ இயக்கம். கார்வாலி மொழியில் ‘சிப்கோ’ என்ற சொல்லுக்குக் ‘கட்டியணைத்தல்’ என்று பொருள். மேற்கண்ட சம்பவத்துக்கு முன்னும் இமயமலைத் தொடரின் மற்ற பகுதிகளில் இப்படி மரங்களைக் கட்டியணைக்கும் போராட்டங்கள் சில நடைபெற்றிருந்தாலும், இந்தப் போராட்டம் மிகவும் முக்கியமாகிறது. காரணம், இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருமே பெண்கள்.
தவிர, அந்தப் போராட்டத்துக்குப் பின் கவுரா தேவி ஊர் பஞ்சாயத்திடம், “நாங்கள் யாருடனும் சண்டையிட விரும்பவில்லை. மரவெட்டிகளுக்குக் காட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தி, நமது கஷ்டத்தைப் புரியவைத்தோம். அவ்வளவுதான்” என்றார். அமைதி வழியில் அந்தப் பெண்கள் காட்டிய எதிர்ப்புதான் இந்தப் போராட்டத்தைத் தனித்துவமானதாக்கியது.
இந்தக் காரணங்களால், கவுரா தேவி முன்னெடுத்த இந்தப் போராட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகப் பெண்கள் மேற்கொண்ட முதல் சூழலியல் பெண்ணியப் போராட்டம் என்று அடையாளப்படுத்தப்படுகிறது. ஊர் மக்களால் அன்புடன் ‘மா’ (அம்மா) என்று அழைக்கப்பட்ட கவுரா தேவி, 1991-ம் ஆண்டு தனது 66-வது வயதில் இறந்தார். இறந்தது அவர் மட்டும்தான். இயற்கையையும் காடுகளையும் பாதுகாக்கும் போராட்டம் இன்னும் தொடர்கிறது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT