Published : 07 May 2017 10:53 AM
Last Updated : 07 May 2017 10:53 AM
நம் மண்ணின் மற்றொரு மாமருந்து கீழாநெல்லி மூலிகை (Phyllanthus niruri). ஈரமான இடங்கள், வயல் வரப்புகள், பாழ் நிலங்களில் கீழாநெல்லி சாதாரணமாகக் காணப்படுகிறது. இன்று உலகளவில் மிகப் பெரிய சந்தை உள்ள ஓர் எளிய மூலிகை கீழாநெல்லி. நம் மண்ணுக்கும் பருவநிலைக்கும் ஏற்ற மூலிகைப் பயிர்வகை.
வெப்ப மண்டலப் பகுதிகளில் வாழும் குற்றுச் செடியினத்தைச் சேர்ந்தது. இந்தியா முழுவதும் காணப்படுகிறது. சுமார் ஓர் அடி உயரம்வரை வளரும். இலையின் அடிக்காம்பில் வரிசையாக நெல்லி வடிவில் சிறு காய்கள் காய்ப்பதால் கீழ்காய்நெல்லி என்பது பேச்சு வழக்கில் கீழாநெல்லி, கீழ்வாய் நெல்லி, கீட்காநெல்லி என மாறிவிட்டது. கீழாநெல்லியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட வேதிப் பொருட்கள் இருக்கின்றன.
கீழாநெல்லி பல நோய்களை வருமுன் காக்கும் அருமருந்தாகப் பயன்படுகிறது. நவீன மருந்தியல் ஆய்வுகளில் காளான் நோய்கள், புற்றுநோய்கள் போன்றவற்றுக்கு எதிராகக் கீழாநெல்லி செயல்படுவதைக் கண்டுபிடித்துள்ளனர். ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் தன்மையும் கல்லீரலைப் பாதுகாக்கும் தன்மையும் இருப்பதாகச் சொல்கின்றனர்.
மஞ்சள் காமாலை, சிறுநீர் நோய்கள், குடல்புண், தொண்டை நோய்கள், வயிற்றுவலி, அதிக உஷ்ணம், கண் நோய்கள், மாதவிடாய்க் கோளாறுகள், பசியின்மை, தோல் நோய்கள், தீராத புண்கள், வீக்கம் போன்ற நோய்களுக்கான மூலிகை மருத்துவத்தில் கீழாநெல்லி பயன்படுகிறது.
மருந்து தயாரிப்பு
கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி, தும்பை, சீரகம், பொன்னாங்கண்ணி ஆகியவற்றைச் சமஅளவு எடுத்து, காய்ச்சிய பசும்பால் அல்லது தேங்காய்ப்பால் விட்டு நன்றாக அரைக்க வேண்டும். காலை, மாலை பசும்பால் அல்லது தேங்காய்ப்பாலில் சிறிதளவு கலந்து ஏழு நாட்களுக்குக் கொடுக்க மஞ்சள் காமாலை நோய் தீரும்.
கீழாநெல்லியும் கரிசலாங்கண்ணியும் சமஅளவு சேர்த்து நெல்லிக்காயளவு பாலில் கலந்து குடித்துவர பாண்டு, சோகை, ரத்தக் குறைவு மாறும்.
மாதவிடாய் அளவுக்கு மீறிப் போய்க்கொண்டிருந்தால் கீழாநெல்லி, அத்திப்பட்டை, அசோகப் பட்டை, அரசம் பட்டை, நாவல் பட்டை ஆகியவற்றைச் சமஅளவு எடுத்து, நன்றாகத் தூளாக்கிக் கொண்டு, தினம் ஒரு கரண்டி வீதம் தேன், வெந்நீர், பால் ஏதாவது ஒன்றில் கலந்து சாப்பிட்டுவர கர்ப்பசாய நோய்கள் மாறி வெள்ளைப்படுதல் தீரும்.
கீழாநெல்லியை நன்றாக அரைத்து சொறி சிரங்கு படைகளில் போட உடனே குணம் தெரியும்.
கீழாநெல்லியும் மஞ்சளும் சேர்த்து உடலில் தேய்த்து சில நிமிடம் ஊற வைத்து குளித்துவர, தோல் நோய்களை வராமல் தடுப்பதோடு ஏற்கெனவே வந்த நோய்கள் மறையும்.
கீழாநெல்லியை நன்றாக மென்று பல் துலக்கிவர, பல்வலி பக்கத்திலும் வராது.
கீழாநெல்லிப் பொடி, நெல்லிக்காய்ப் பொடி, கரிசாலைப் பொடி மூன்றையும் சமஅளவு எடுத்து தேனில் கலந்து உண்டுவர சளித் தொல்லை, ரத்தக்குறைவு, ரத்தசோகை மாறி நோய் எதிர்ப்பாற்றல் பெருகும்.
இந்தக் கோடை காலத்தில் கீழாநெல்லி முழுத் தாவரத்தையும் பசுமையாகச் சேகரித்து, சுத்தம் செய்து மையாக அரைத்துக்கொள்ள வேண்டும். இதில் எலுமிச்சம் பழ அளவு எடுத்து, கால் லிட்டர் வெண்ணெய் நீக்கிய மோருடன் கலந்து குடித்துவர மஞ்சள் காமாலை வராமல் தடுக்கலாம், கோடைக்கால நீர்க்கட்டும் சீராகும்.
எப்படி வளர்ப்பது?
சாலை ஓரங்கள் , பூங்காக்கள் , வரப்புகளில் காணப்படும் எளிய மூலிகைச் செடி இது. இவற்றை வேருடன் பறித்து, மாடி தோட்டத்தில் வளர்க்கலாம். இதை முதன்மை பயிராகவும் ஊடுபயிராகவும் வளர்க்கலாம்.
தேங்காய் நார்க் கழிவு 50%, மக்கிய எரு 20%, செம்மண் 10%, மண் 10% சேர்த்து தொட்டிகளில் வளர்க்கலாம். இதனுடன் இரண்டு லிட்டர் தண்ணீரில் 10 மி.லி. பஞ்சகவ்யம், 100 மி.லி. அமிர்தக்கரைசல் ஆகியவற்றை நன்றாகக் கலந்து தொட்டி அல்லது பையில் இட்டு ஒருநாள் வெயில் படாமல் துணியால் மூடி வைக்கவும். பின்னர் கீழாநெல்லி நாற்றுகளை இரண்டு அங்குல இடைவெளியில் நடலாம்.
தேங்காய் நார் பயன்படுத்துவதால் அதிகத் தண்ணீர் தேவையில்லை, கோடை காலத்தில் ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் விட்டால் போதும் .
மூன்று வாரம் வளர்ந்த செடிகளை உணவுக்கும் மருத்துவத்துக்கும் பயன்படுத்தலாம். 45 நாள் வளர்ந்த செடியில் காய் பிடிக்கத் தொடங்கும். முற்றிய காய்களைக் காயவைத்து, மறுஉற்பத்தி செய்யலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT