Published : 12 Feb 2017 12:11 PM
Last Updated : 12 Feb 2017 12:11 PM

குறிப்புகள் பலவிதம்: கமகமக்கும் கறிக்குழம்பு!

# சேப்பங்கிழங்கை வேகவைக்கும்போது மஞ்சள் தூள், கல் உப்பு சிறிதளவு சேர்க்க வேண்டும். கிழங்கு வெந்தவுடன் அந்த நீரை வடிகட்டி, குளிர்ந்த நீரில் சேப்பங்கிழங்கைப் போட்டு, வட்ட வடிவில் நறுக்கினால் தோல் எளிதாக வரும். வழவழப்பாக இருக்காது.

# முந்திரி கேக் செய்யும்போது, தேவையான முந்திரிப் பருப்பு இல்லையென்றால் அதனுடன் முக்கால் பங்கு வறுத்த நிலக்கடலையும், ஓரிரு பாதம் பருப்புகளையும் சேர்த்துச் செய்தால் முந்திரி கேக் ருசியாக இருக்கும்.

# தோசை மாவில் உப்பு கூடினால் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய், ஒரு ஸ்பூன் வெங்காயச்சாறு, தேங்காய்த் துருவல் என்று ஏதாவது ஒன்றைக் கலந்தால் உப்பு குறையும். தோசையும் மணமாக இருக்கும்.

# இட்லி, தோசை மாவின் மீது கல் உப்பு, நல்லெண்ணெய் ஊற்றி வைத்தால் புளிக்காது. காம்புடன் இருக்கும் காய்ந்த மிளகாய், வாழை இலையின் நடுத்தண்டை வெட்டிச் சிறுதுண்டாக மாவின் மீது போட்டு வைத்தாலும் புளிக்காது.

# வடை, அடைக்கு வாழைப் பூவை நறுக்கி ஆட்டுரலில் அரைத்தால் ருசி கூடுதலாக இருக்கும்.

# கீரையைச் சமைக்கும்போது அதன் நிறம் மாறாமல் இருக்க கல் உப்பு, மஞ்சள் தூள் கலந்த நீரில் அலசி, நறுக்க வேண்டும். சமைக்கும்போது பாத்திரத்தை மூடாமல் இருந்தால் கீரையின் நிறம் மாறாது.

# வெரைட்டி ரைஸ் செய்யும்போது ஒரு ஸ்பூன் நெய்விட்டு இறக்கினால் காரம் குறையும். தேங்காய்ப் பால், தாக்காளிச் சாறு ஆகியவற்றைக் கலந்த சாதத்தில் சேர்த்து, அடுப்பில் வைத்துக் கிளறி இறக்கினாலும் காரம் தெரியாது. சுவையும் குன்றாது.

# காய்ந்த எண்ணெயில் சிறிது புளியைப் போட்டு, பிறகு பலகாரங்களைச் சுட்டால் எண்ணெய் அதிகம் குடிக்காது.

# ஒரு ஸ்பூன் எண்ணெயில் ஒரு வெங்காயம், இரண்டு காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி, அரைத்துக் குழம்பில் சேர்த்தால் அதிகப்படியான புளிப்பு குறையும்.

# கடுகு, சீரகம், கறிவேப்பிலை, துவரம்பருப்பு, பெருங்காயம், வெந்தயம் ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்து வைத்துக்கொள்ள வேண்டும். கறிக் குழம்பு செய்யும்போது இந்தப் பொடியைச் சேர்த்தால் கமகமவென்று ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும்.

- நவினா தாமு, திருவள்ளூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x