Published : 12 Mar 2017 01:35 PM
Last Updated : 12 Mar 2017 01:35 PM
திவ்யா தன் இரு மகள்களை வளர்ப்பது போல் யாரும் வளர்க்க முடியாது என்று அவருடைய குடும்பத்தில் எல்லோரும் பேசிக்கொள்வார்கள். திருமணத்துக்குப் பிறகு அவருடைய கணவருக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தது. பிள்ளைகளின் எதிர்காலம், படிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு அடுத்த ஐந்து ஆண்டுகள் திவ்யா வேலைக்குப் போக வேண்டாம் என கணவன், மனைவி இருவரும் ஒரு மனதாக முடிவெடுத்தனர்.
திவ்யாவின் குழந்தைகள் ஒழுக்கத்திலும், பள்ளி, விளையாட்டு, ஓவியம், யோகா என எதிலும் சளைத்தவர்கள் அல்ல. அவற்றில் பங்கெடுத்தால் மட்டும் போதாது, முதலாவதாக வர வேண்டும் என்று திவ்யா தன் பிள்ளைகளுக்குச் சொல்லி சொல்லி வளர்த்தார். இருவரும் பதின் பருவத்தில் அடியெடுத்து வைக்கும் முன்பே, திவ்யா வேலைக்குச் செல்லத் துவங்கினார். அந்த நேரத்தில் அவருடைய கணவரும் இந்தியவுக்கே வந்துவிட்டார்.
திசை மாற்றும் பருவம்
மூத்த மகள் பத்தாம் வகுப்புக்கு வந்தவுடன், மதிப்பெண்கள் குறையத் தொடங்கின. தன்னை அழகுபடுத்திக் கொள்ளவதில் அவளுக்கு ஆர்வம் அதிகரித்தது. பெரும்பாலான நேரம் கண்ணாடி முன்னால் நின்றாள். மகளின் இந்த மாறுதலை திவ்யாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மகளைக் கண்டித்தார், கோபப்பட்டார். தன்னிடம் பேச வேண்டாம் என்று கட்டளை போட்டார். இதற்கெல்லாம் அவர் மகளிடம் இருந்து முரண்பட்ட நடவடிக்கையே பதிலாகக் கிடைத்தது.
தன் கணவரிடம் கூறி வருத்தப்படார். குழந்தைகளுக்குத் தேவையான பணத்தைச் சம்பாதித்துக் கொடுப்பது மட்டுமே தன் வேலை என்று நினைக்கும் அவரோ, “பரவாயில்லை விடு, வயசு அப்படி. சீக்கிரம் சரியாகிவிடுவாள்” என்று பட்டும் படாமலும் சொன்னார். திவ்யாவுக்குக் கணவர் மீதும் கோபம். “நான் என்ன குறை வைத்தேன்? ஏன் இப்படி சொல்பேச்சைக் கேட்க மறுக்கிறாய்? நான் உங்களுக்காக எவ்வளவு தியாகம் செய்தேன்?” என்றெல்லாம் தினமும் இரவில் மகளை உட்காரவைத்துப் பேசிப் பேசிப் புரியவைத்தார்.
எல்லாவற்றுக்கும் சரி சரி என தலையை ஆட்டிய மகள், மறுநாளே தன் தோழி வீட்டுக்குச் சென்று தாமதமாக வந்தாள். அவளிடம் கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டிவிட்டார் திவ்யா. ஒரு வாரம் கழித்து தீபிகாவின் தோழியின் அப்பா, தீபிகாவின் அப்பாவைச் சந்தித்துப் பேசினார். “தீபிகாவுக்கு என்ன பிரச்சினை? எனக்கு வீடே பிடிக்கலை, எங்காவது போய்விடலாம் போல இருக்குன்னு என் மகள்கிட்டே சொல்லியிருக்கா” என்று சொன்னார்.
அன்பா? அடக்குமுறையா?
இதைக் கேட்ட தீபிகாவின் தந்தை பதற்றமாகி அலுவலகத்துக்கு லீவு போட்டுவிட்டு, தன் மனைவியைப் பார்த்து விஷயத்தைச் சொன்னார். திவ்யாவுக்கு ஆத்திரமும் அழுகையும், கோபமும் அதிகரித்தன. நேராக வீட்டுக்கு வந்தார். தீபிகா டியூஷன் போகாமல், சக மாணவன் வினித்துடன் வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்ததும் திவ்யாவுக்குக் கோபம் தலைக்கேறியது. “ஏன் டியூஷன் போகவில்லையா?” என்று மகளிடம் கேட்டார். “ரொம்ப போர் அடிச்சதுமா.
அதனால் கட் பண்ணிட்டு வந்துட்டேன். நானும் வினித்தும் வீட்டிலேயே எல்லா கணக்குகளையும் எழுதி டியூஷன் ஹோம் வொர்க் எல்லாம் முடிச்சுட்டோம்” என்று சாதாரணமாகச் சொன்னாள். வினித் அவன் வீட்டுக்குக் கிளம்பியதும் திவ்யாவுக்கு ஆத்திரம் அதிகமானது. கோபத்தில் மகளை அடித்துவிட்டார். தீபிகா தன் அறைக்குள் சென்ற கதவை தாளிட்டுக்கொண்டாள்.
திவ்யாவுக்குத் தன் உலகமே சுக்கு நூறாகிவிட்டது போல் இருந்தது. மகளைப் பற்றிய தன் கனவு எல்லாமே சிதைந்து போய்விடுமோ என்று தவித்தார். தன் நெருங்கிய தோழி மேரியிடம் மட்டும்தான் திவ்யா எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்வார். மேரியை அழைத்து தீபிகாவிடம் பேசச் சொன்னார் திவ்யா.
வீட்டிலிருந்து வேண்டும் மாற்றம்
ஓரிரு மாதங்கள் தீபிகா எதைப் பற்றியும் வாய் திறக்கவில்லை. பிறகு கொஞ்சம் கொஞ்சமாகப் பேசினாள். தன் அம்மா தன்னை படிக்கும், மதிப்பெண் வாங்கும் இயந்திரமாகப் பார்ப்பதாகச் சொன்னாள். முழு மதிப்பெண் வாங்கவில்லை என்றால் தண்டனை தருவார், முழு மதிப்பெண் வாங்கினால் கேட்காமலேயே சாக்லேட் வாங்கித் தருவார் என்று தன் சிறு வயதில் நடந்த விஷயங்களைத் தொடர்ந்து அனைத்தையும் பகிர்ந்துகொண்டாள்.
தன்னைச் சுதந்திரமாக விடாமல் எப்போதும் கண்காணித்துக்கொண்டிருந்ததைப் பற்றிச் சொல்லி வருந்தினாள். அப்பாவிடம், நண்பர்களிடம், உறவினர்களிடம் பேசவோ, அரட்டை அடிக்கவோ அனுமதிக்காத அடக்குமுறைவாதியாகத் தன் அம்மா இருந்துவிட்டதாகச் சொன்னாள். வினித் வீட்டில் அவன் அம்மா, அவனை ஒரு போதும் சந்தேகிப்பதில்லை எனவும், தன் அப்பாவும் அம்மாவும் அவரவர் வேலை சம்பாத்தியம், என இருப்பதாகவும் புலம்பினாள். பள்ளி, டியூஷன், இரவில் 10 மணிக்குத் தூக்கம் என்று நேரக் காப்பளர்களைப் போல் அவர்கள் இருப்பதாகச் சொன்னாள். அதைவிட முக்கியமாக தான் வினித்தைக் காதலிப்பதாகவும், அவனோடுதான் வாழப் போவதாகவும் தெரிவித்தாள்.
மேரிக்கு எல்லாமே தெளிவாகப் புரிந்தது. அன்பையும் அரவணைப்பையும் பணத்தால் தர முடியாது. ஒட்டுதலும் உறவும் வசதியால் வராது என்பதைத் திவ்யாவுக்கு உணர்த்தினார் மேரி.
குழந்தைகளை வளர்க்கும்போது அவர்களின் எண்ண ஓட்டங்களை அறிந்துகொள்வதும், அவர்களுக்கு எது இயல்பாக வருகிறது என்பதை உணர்ந்துகொள்வதும் அவசியம். பெற்றோர்கள் வியாபாரியைப் போல இவ்வளவு மணி நேரம் படிப்பு, இத்தனை ஆயிரம் டியூஷன் செலவு, இத்தனை லட்சம் பள்ளிக் கட்டணம் என்று நடந்துகொள்வது முறையல்ல. தங்கள் கைப்பிடியைத் தளர்த்தினால் குழந்தைகள் கெட்டுப் போவார்கள் என்று நினைக்கும் பெற்றோர், தங்களின் இதுபோன்ற அணுகுமுறைதான் குழந்தைகளை வதைக்கும் என்பதை உணர வேண்டும்.
சிறு வயதில் ஒட்டுதலும், உறவும், அன்பும், அரவணைப்பும் இல்லாமல் வளர நேரும் குழந்தைகள் பின்னாளில் குற்றவாளிகளாகத் தள்ளப்படுவதற்கான சாத்தியம் அதிகம். குறிப்பாக குழந்தைகள் மீதான வன்முறையில் ஈடுபடுகிறவர்களில் பெரும்பாலானோர் இதுபோன்ற பின்னணியில் இருந்துதான் வருகிறார்கள் என்று இதற்கான தொடர் ஆய்வுகளில் ஈடுபடும் பாலியல்-உளவியல் மருத்துவர்கள் சொல்கிறர்கள். பாலியல் குற்றங்களில் ஈடுபடுகிறவர்கள், குறிப்பாகக் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களில் ஈடுபடுகிறவர்கள் இதே சமூகத்திலிருந்துதான் வருகிறார்கள்.
இவர்களுடைய கல்வி, படிப்பு, பதவி, சம்பாத்தியம் போன்றவை எவ்வளவு உயர்வாக இருந்தாலும் இவர்கள் பாலியல் குற்றங்களில் ஈடுபடத் தயங்குவதில்லை. சட்டத்தின் துணை தேவைப்படாத சமூகத்தை நோக்கியதாகத்தான் நம் பயணம் இருக்க வேண்டும். நம் வீடுகளில் வளரும் குழந்தைகள், எதிர்காலத்தில் எந்தவிதமான மன அழுத்தத்துக்கும் ஆளாகாத வகையில் வளர்க்கப்பட வேண்டும். அந்தப் பொறுப்பும் கடமையும் நம் ஒவ்வொருவருக்கும் உண்டு.
கட்டுரையாளர், வழக்கறிஞர்
தொடர்புக்கு: ajeethaadvocate@yahoo.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT