Published : 09 Apr 2017 08:26 AM
Last Updated : 09 Apr 2017 08:26 AM
ஜம்மு காஷ்மீரில் புகழ்பெற்ற சூபி பாடகர்களில் ஒருவரான குலாம் முகமத் கலீன்பஃபின் பேரன் முகமத் யாகூப் ஷேக் முதன்முறையாகக் காஷ்மீரில் உள்ள பெண்களுக்கு சூபி இசையைக் கற்றுக்கொடுக்கிறார். பரம்பரை பரம்பரையாக ஆண்களின் சாம்ராஜ்யமாக இருந்த சூபி இசைப் பாடல் துறையில் தற்போது 50 பெண்கள் பயிற்சி பெற்றுள்ளனர். யாகூப் ஷேக்கின் மாணவியான 14 வயது சப்னம் பஷீருக்கு, சூபி இசைப்பயிற்சி வகுப்பில் சேர்வதற்காகத் தன் பெற்றோரைச் சம்மதிக்க வைக்க இரண்டு மாதங்கள் ஆகியிருக்கின்றன.
கடந்த சில ஆண்டுகள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலவிய அசாதாரண சூழ்நிலையால், இளைஞர்கள் பாரம்பரிய இசையை விட்டு எதிர்ப்புப் பாடல்களை நோக்கித் திரும்பிய நிலையில் முகமத் யாகூப் ஷேக், பெண் குழந்தைகளுக்கும் சூபி இசையைக் கற்றுக்கொடுக்க முடிவுசெய்துள்ளார். அவர் இசைப்பாடம் எடுக்கத் தொடங்கியபோது, அண்டை வீட்டார், ராணுவத்தினரின் கண்டனங்களை எதிர்கொண்டுள்ளார். அதற்காகத் தனது வீட்டை நான்கு முறை மாற்றியுள்ளார் ஷேக்.
ரயில் பெட்டிகளுக்குள் வெளிப்படும் வாழ்க்கை
மும்பையைச் சேர்ந்த புகைப்பட இதழியலாளர் அனுஸ்ரீ பட்னவிஸ், மும்பை மின்சார ரயிலில் பெண்கள் பெட்டிகளில் அரங்கேறும் காட்சிகளை அருமையான புகைப்படங்களாக எடுத்துத் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிட்டுவருகிறார். ஒரே பெட்டியில் ஒரே நேரத்தில் பயணிக்கும் பெண்கள் தங்கள் அன்னியோன்யம், சுதந்திரத்தை வெளிப்படும் தருணங்கள் இவை. பிறந்த நாள் கொண்டாட்டங்கள், உணவுப் பகிர்வு, நடனம் என எல்லா சூழ்நிலைகளையும் இவர் புகைப்படங்களாக்கியுள்ளார். வீட்டுக்கும் அலுவலகத்துக்கும் இடையே தவிர்க்க முடியாத வெளியாய் ரயிலும் ஒரு அங்கமாக மாறிவிட்ட சூழ்நிலையில் பெண்களின் அபிலாஷைகளும் படைப்பூக்கமும் இந்தப் புகைப்படங்களில் அருமையாகப் பதிவாகியுள்ளன.
உங்கள் அமைதியும் தொந்தரவுதான்
எகிப்திய புகைப்படக் கலைஞர் மார்வா ரகேப், ‘யுவர் சைலன்ஸ் இஸ் ஹராஸ்மென்ட்’ என்னும் புகைப்படத் திட்டத்தைத் தொடங்கியிருக்கிறார். பெண்கள் வெவ்வேறு சூழல்களில் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்படும் நிகழ்வுகளைச் சித்தரித்துப் புகைப்பட வரிசையாக்கியுள்ளார். பாலியல் துன்புறுத்தல் ஒரு இடத்தில் நடக்கும்போது அதை மவுன சாட்சிகளாகப் பார்ப்பவர்களும் அந்தக் குற்றத்தைச் செய்தவர்களாகிறார்கள் என்பதே இவரது புகைப்படங்கள் சொல்லும் செய்தி. தாங்கள் செய்யும் குற்றச்செயலை யாரும் கண்டிக்காமல் இருப்பதும் அதை ஊக்குவிக்கக் கூடியது என்கிறார் மார்வா ரகேப். இந்தியாவில் ஐந்துக்கு நான்கு பெண்கள் பொது இடத்தில் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதாக 2016-ம் ஆண்டின் ஆய்வொன்று தெரிவிக்கும் சூழலில் இதுபோன்ற விழிப்புணர்வுப் புகைப்படங்கள் அவசியம்.
வங்கிக் கொள்ளையைத் தடுத்த பெண்கள்
மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த குர்காவோன் நகரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் நடைபெறவிருந்த கொள்ளையை இரண்டு பெண் ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர். கடந்த ஏப்ரல் 4-ம் தேதி, மதியம் ஒரு மணிக்கு வங்கிக்குள் நுழைந்த இரண்டு கொள்ளையர்கள் துப்பாக்கியைக் காட்டி அங்குள்ள ஊழியர்கள் பிம்லா தேவி, பூனம் இருவரையும் மிரட்டினர். அங்கிருந்த இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துச் செல்லவும் முயன்றனர். ஆனால், பிம்லா தேவியும் பூனமும் சேர்ந்து நாற்காலியைத் தூக்கித் திருடர்களை அடித்து அவர்களிடமிருந்த துப்பாக்கியையும் பிடுங்கினர். பின்னர் எச்சரிக்கை மணி மூலம் வங்கிக்கு வெளியேயிருந்த இளைஞர்களின் உதவியுடன் திருடர்களைப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். குர்காவோன் காவல்துறை ஆணையர் சந்தீப் கிர்வார், திருடர்களைத் துணிகரமாகப் பிடித்த இரண்டு பெண் ஊழியர்களும் உரியமுறையில் கவுரவிக்கப்படுவார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT